செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

CBI:ஆதாரம் இல்லை ராசாவுக்கு யூனிடெக் லஞ்சம் தந்ததற்கான

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் பெறுவதற்காக முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவுக்கு யூனிடெக் நிறுவனம் லஞ்சம் ஏதும் தந்ததற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்று சிபிஐ கூறியுள்ளது.

இதன்மூலம் ராசாவுக்கு எதிரான வழக்கில் சிபிஐக்கு அடுத்த சறுக்கல் ஏற்பட்டுள்ளது.

முதலில் யூனிடெக் வயர்லெஸ் நிறுவனம் ராசாவுக்கு பெருமளவில் லஞ்சம் தந்ததாக புகார் கூறப்பட்டது. இந் நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கு விசாரணையின்போது சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் லலித் கூறுகையில்,

ஸ்வான் டெலிகாம், யூனிடெக் வயர்லெஸ் ஆகியவை 2ஜி ஸ்பெக்ட்ரம் பெற எந்தத் தகுதியும் பெற்றிருக்கவில்லை. ஆனாலும், அவர்களுக்கு ராசா ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கினார். இந்த லைசென்ஸ்களை பெற்ற இந்த இரு நிறுவனங்களும் தங்களது பங்குகளை விற்று ரூ. 7,300 கோடி அளவுக்கு லாபம் அடைந்தன.

ஆனால், இந்த லைசென்ஸ்களைப் பெற்றதற்காக ராசாவுக்கு யூனிடெக் நிறுவனம் ராசாவுக்கு லஞ்சம் கொடுத்ததற்கான ஆதாரம் ஏதும் இல்லை. அதே நேரத்தில் 2ஜி லைசென்ஸ் பெற தகுதியில்லாத இந்த நிறுவனத்துக்கு அதைத் தந்தது தவறு. இதன்மூலம் தகுதி உடைய பிற நிறுவனங்களுக்கு லைசென்ஸ் கிடைக்காததால், அவை நஷ்டம் அடைந்துள்ளன.

ஆனால், இதற்காக ராசாவுக்கு யூனிடெக் லஞ்சம் தந்தது என்பதை நிரூபிக்க ஆதாரம் ஏதும் இல்லை என்றார்.

யூனிடெக் நிறுவன வழக்கறிஞர்கள் கூறுகையில், ஸ்பெக்ட்ரம் கிடைத்ததும் எங்களது பங்குகளை விற்பனை செய்து லாபம் அடைந்தோம் என்றக் குற்றச்சாட்டு தவறு. நாங்கள் எந்தப் பங்கையும் விற்கவில்லை. புதிய பங்குகளைத் தான் வெளியி்ட்டோம். இதனால் எங்களுக்கு நேரடியாக எந்த லாபமும் கிடைக்கவில்லை. புதிய முதலீட்டாளர்களுக்கு தான் லாபம் கிடைத்தது. இந்த முதலீடுகளைக் கூட முறைப்படி, மத்திய வெளிநாட்டு முதலீடு வளர்ச்சி வாரியத்தின் அனுமதியுடன் தான் செய்தோம். ஸ்பெக்ட்ரம் பெற யாருக்கும் எந்த லஞ்சமும் தரவில்லை என்று கூறியுள்ளது.

இந்த விவகாரத்தில் ராசாவுடன் யூனிடெக் அதிபர் சஞ்சய் சந்திராவும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராசா, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட 15 பேர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதா இல்லையா என்பது குறித்து வரும் செப்டம்பர் 15ம் தேதி முடிவு செய்யப்படும் என நீதிபதி சைனி அறிவித்தார்.

கருத்துகள் இல்லை: