வியாழன், 1 செப்டம்பர், 2011

சிவசங்கரனின் கோப்புகளை தயாநிதி தாமதப்படுத்தினார்

புதுடில்லி: ஏர்செல் நிறுவன அதிபர் சிவசங்கரனின் கோப்புகளை, தயாநிதி அமைச்சராக இருந்தபோது தாமதப்படுத்தினார் என, தயாநிதியின் உதவியாளராக இருந்த சஞ்சய் மூர்த்தி தெரிவித்துள்ளார். சி.பி.ஐ., விசாரணையின் போது சஞ்சய் குறிப்பிடுகையில், "ஏர்செல் நிறுவன அதிபர் சிவசங்கரன், டிஷ் நெட் உரிமைக்காக விண்ணப்பித்த போது, அவரது விண்ணப்பத்தை பரிசீலிக்காமல் தாமதப்படுத்தினார். அவரது உத்தரவின் பேரில், உதவியாளர் என்ற முறையில் நான் இதை செய்ய வேண்டியிருந்தது. தயாநிதி அமைச்சராக இருந்த காலகட்டத்தில், மேக்சிஸ் நிறுவன நிர்வாகிகளும், ஆஸ்ரோ நிறுவனத் தலைவரும் டில்லியில் அவரை அடிக்கடி சந்தித்துப் பேசினர்.

விசாரணைக்கு ஒத்துழைக்க "மேக்சிஸ்' நிறுவனத்திடம் சி.பி.ஐ., கோரிக்கை : தொலைத்தொடர்பு ஊழல் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவன அதிகாரிகளிடம் சி.பி.ஐ., கோரியுள்ளது. மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக தயாநிதி இருந்தபோது, ஏர்செல் நிறுவன பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கும்படி வற்புறுத்தியதாக, ஏர்செல் நிறுவன அதிபர் சிவசங்கரன் புகார் கூறியிருந்தார். 74 சதவீத ஏர்செல் பங்குகளை பெற்ற மேக்சிஸ் நிறுவனத்துக்கு, 14 லைசென்ஸ்களை தயாநிதி வழங்கியுள்ளதாக புகார் கூறப்படுகிறது. இதற்கு பிரதிபலனாக, மேக்சிஸ் நிறுவனம் - சன் குழுமம் இடையே நிதிப் பரிமாற்றம் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சன் குழுமத்திற்கும், மேக்சிஸ் நிறுவனத்துக்கும் மலேசியாவில் உள்ள ஸ்டான்டர்டு சார்ட்டர்டு வங்கி மூலம் பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக இந்த வங்கி நிர்வாகத்திடம் சி.பி.ஐ., விசாரணை நடத்தியது. அருண் ÷ஷாரி அமைச்சராக இருந்த காலகட்டத்தில் வழங்கப்பட்ட லைசென்ஸ்கள் குறித்து சி.பி.ஐ., ஏற்கனவே விசாரணை நடத்தி முடித்து விட்டது. தயாநிதி அமைச்சராக இருந்த கால கட்டத்தில் வழங்கப்பட்ட லைசென்ஸ்கள் குறித்து விசாரணை நடப்பதால், இந்த விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி மேக்சிஸ் நிறுவனத்திடம் சி.பி.ஐ., கோரியுள்ளது.

கருத்துகள் இல்லை: