புதன், 31 ஆகஸ்ட், 2011

.50 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமான வரி கூடுதல் கமிஷனர் கைது

சென்னையில் சிபிஐ அதிரடி ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமான வரி கூடுதல் கமிஷனர் கைது

சென்னை : ரூ.116 கோடி வரி ஏய்ப்பு புகாரில் இருந்து விடுவிக்க,ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமான வரித்துறை கூடுதல் கமிஷனர், கல்வி நிறுவன அதிபர், ஹவாலா மன்னன் ஆகியோர் சென்னையில் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக சென்னை உட்பட 5 நகரங்களில் 11 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
சென்னையில் Ôஎவரான் எஜூகேஷனல்Õ என்ற கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் கல்வி தொடர்பாக பல குறிப்பேடுகளை வெளியிட்டுள்ளது.
பள்ளிகள், கல்லூரிகளுக்கும் சப்ளை செய்து வருகிறது. மேலும் வெளிநாட்டில் இருந்து நிதிகளை பெற்று, பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனம் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்வதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, அதிகாரிகள் அந்த நிறுவனங்களின் அலுவலகங்களில் அதிரடிச் சோதனை நடத்தினர். அதில் ரூ.116 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிறுவனம் பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருவதால், ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேர் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்தின் மீதான வரி ஏய்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று வருமான வரித்துறையின் சிறப்பு கூடுதல் ஆணையர் அண்டாசு ரவீந்தர் (45) என்பவரை எவரான் நிறுவனத்தின் அதிபர் கிஷோர்குமார் அனுகியுள்ளார்.
அதற்கு அவர் ரூ.116 கோடி வரி ஏய்ப்புக்கு ரூ.40 கோடி அபராதம் விதிக்க வேண்டும். அவ்வாறு விதிக்காமல் இருக்க வேண்டும் என்றால் ரூ.5 கோடி லஞ்சம் வேண்டும் என்று கேட்டுள்ளார். 10 நாட்களுக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இந்த பேச்சு வார்த்தையின் முடிவில்,
ரூ.50 லட்சம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. அந்தப் பணத்தை, அவரது வீட்டில் கொடுக்க வேண்டும் என்பதும் முடிவு செய்யப்பட்டது.

அண்டாசு ரவீந்தரின் வீடு, நுங்கம்பாக்கம் ஆயக்கர் பவன் பின்புறம் வருமான வரித்துறை அதிகாரிகளின் குடியிருப்பு வளாகத்தில் உள்ளது. இவரது வீட்டில் பணப் பரிமாற்றம் நடப்பது குறித்து சிபிஐக்கு தகவல் கிடைத்தது. ஐஜி அருணாச்சலம், டிஐஜி முருகன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அதிகாரிகள், அலுவலகம் மற்றும் அவரது வீட்டின் அருகே நேற்று முன்தினம் இரவு காத்திருந்தனர்.
சரியாக இரவு 8.45 மணிக்கு ஒரு கார் வந்தது. அந்த காரில் இருந்து இறங்கிய ஒருவர், மின் விசிறி படம் பொறித்த பெட்டியை தூக்கிக் கொண்டு அண்டாசு ரவீந்தர் வீட்டுக்குச் சென்றார். அங்கு அவரது மனைவிதான் இருந்தார். அவரிடம் கொடுத்ததும், வாங்கி வீட்டில் வைத்துக் கொண்டார். வழக்கமாக வருமான வரித்துறை அதிகாரிகள் பெரிய அளவில் லஞ்சம் வாங்கினால், உடனடியாக ஹவாலா ஏஜென்ட் மூலம் அதை இடமாற்றி விடுவார்கள்.

சிறிது நேரத்தில், சவுகார்பேட்டையைச் சேர்ந்த ஹவாலா ஏஜென்ட் உத்தம்சந்த் சிங் வந்தார். அவர் பெட்டியை வாங்கிக் கொண்டு புறப்படத் தயாராக இருந்தார். அப்போது சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக புகுந்தனர். அட்டைப் பெட்டியை பிரிக்க முயன்றபோது, அதில் மின் விசிறி இருப்பதாக தெரிவித்தனர். ஆனாலும் சிபிஐ அதிகாரிகள் அதை பிரித்துப் பார்த்தபோது எல்லாம் ஆயிரம் ரூபாய் கட்டுகளாக இருந்தது. ரூ.50 லட்சம் இருந்தது.
அதைத்தொடர்ந்து, வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.10 லட்சம் பணம்,  500 கிராம் தங்க நகைகள் இருந்தன. அவற்றையும் பறிமுதல் செய்தனர். அதைத் தொடர்ந்து நேற்று காலையில் ரவீந்தருக்குச் சொந்தமான வங்கி லாக்கரைத் திறந்து பார்த்தபோது 1 கிலோ 800 கிராம் தங்கம், வைர நகைகள் இருந்தன.

சவுகார்பேட்டையில் உள்ள உத்தம்சந்த் வீட்டில் நடத்திய சோதனையில்
ரூ.48 லட்சம் ரொக்கப் பணம் கண்டுபிடிக்கபட்டது. அதையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், ரவீந்தருக்கு சொந்தமான ஐதராபாத்தில் உள்ள 2 வீடுகள், உத்தம்சந்தின்  சகோதரிகள் வசிக்கும் 2 வீடுகள், பெங்களூர், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் உள்ள வீடுகள், சென்னையில் அதிகாரியின் வீடு, அலுவலகம் மற்றும் பணம் கொடுத்த எவரான் நிறுவன அலுவலகம் உட்பட 5 இடங்களில் சோதனை நடந்தது. அதைத் தொடர்ந்து, கைது செய்ய செய்யப்பட்ட அண்டாசு ரவீந்தர், எவரான் நிறுவன உரிமையாளர் கிஷோர்குமார், ஹவாலா புரோக்கர் உத்தம்சந்த் சிங் ஆகிய 3 பேரும், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

52 பாட்டில் பாரின் சரக்கு
அண்டாசு ரவீந்தரின் வீட்டில் சோதனை நடத்தியபோது, 52 வெளிநாட்டு மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் 30 பாட்டில் சரக்கை காலி செய்திருந்தார். 22 பாட்டில்கள் மீதம் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த சிபிஐ அதிகாரிகள்,  நுங்கம்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர். அவர் மீது வெளிநாட்டு மது பாட்டில்கள் வைத்திருந்ததாக தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைநிறைய
சம்பளம்

எவரான் நிறுவனத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் விவேக் ஹரி நாராயணன், விக்ரம் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அரசு பணி ஒய்வு பெறுவதற்கு முன்னரே, விருப்ப ஓய்வில் சென்றனர். அதன்பின், எவரான் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு ஆண்டுக்கு தலா ஸி 50 லட்சம் சம்பளம்.

யாரந்த உத்தம்சந்த்?
வருமான வரித்துறை அலுவலகத்திற்கு அடிக்கடி பல ஹவாலா கும்பல்கள் வரும். வருமான வரித்துறை அதிகாரிகளில் சிலர், இந்த கும்பலுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளனர். அவர்களில் ஒருவர்தான் உத்தம்சந்த் சிங். இவர், ஒரு உயர் அதிகாரியின் வீட்டில் இருந்து வெளியில் வந்தால், அவர் பணத்துடன் செல்வதாக அர்த்தம். லஞ்சம் கொடுத்த ஒரு மணி நேரத்தில், ஹவாலா பணம் வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டு விடும். இதனால் உத்தம்சந்த் சிங்கிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

அந்த டீலிங்கே வேற...
இவருக்கும் ஆடிட்டர் ஒருவருக்கும் நெருங்கிய நட்பு உண்டு. அந்த ஆடிட்டர் சினிமாவில் உள்ள பலரையும் தெரிந்து வைத்திருப்பார். பல நடிகைகளுக்கும் அவர்தான் ஆடிட்டர். அவர் மூலமே கம்பெனிக்காரர்களும் இவரை அனுகுவார்கள். அவர்தான் பேரம் பேசி முடிப்பார். அடிக்கடி இந்த அதிகாரி பெங்களூர், மும்பைக்குச் செல்வார். அங்கு நடந்த டீலிங் வேறு என்கின்றனர். அந்த விவகாரங்களை சிபிஐ விசாரித்து வருகிறது. ஹவாலா புரோக்கரின் 2 தங்கைகள் பெங்களூரில் உள்ளனர். இருவருக்கும் ரவீந்தர் சொந்த வீடு வாங்கிக் கொடுத்துள்ளார்.

ஓய்வெடுக்க அமெரிக்கா
அண்டாசு ரவீந்திரா, ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர். 1991ம் ஆண்டு ஐஆர்எஸ் பணியில் சேர்ந்தார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு வந்தார். இவர், சென்னை வருமான வரித்துறையில் கம்பெனிகள் பிரிவில் கூடுதல் ஆணையராக உள்ளார். இவர், பல ஆண்டுகளாக இதுபோல லஞ்சம் வாங்கியுள்ளார். சில நாட்களுக்கு முன் இவர், குடும்பத்துடன் அமெரிக்கா சென்று ஒரு மாதம் ஓய்வெடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை: