சனி, 3 செப்டம்பர், 2011

இந்திய இழுவைப் படகுகள் வந்து அறுத்துக்கொண்டு போகும்

jaffna fishermanஇலங்கையின் வடமுனை மீனவர்கள் ஆழ்கடலில் எதிர்நோக்கும் சவால்கள்
“நாங்கள் கொண்டுபோய் வலையைப் போட்டால் இந்திய இழுவைப் படகுகள் வந்து அறுத்துக்கொண்டு போகும். முன்பெண்டால் நாங்கள் கடலுக்குப் போகும்போது வலையைப் போட்டுவிட்டு நித்திரைகொள்ளுவம். இப்போது நித்திரைகொள்ள ஏலாது. இந்திய இழுவைப் படகுகள் எந்தநேரத்திலும் வரலாம். அதனால் நாங்கள் கவனமாக இருப்போம்.
 இலங்கையின் வட முனைக் கடற்பகுதி கடல்வளம் செறிந்து காணப்படுகிறது. அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் முழுவதும் பெரும்பாலும் அக்கடலையே நம்பித்தான் இருக்கிறது.
இருள் சூழ்ந்த கடலின் நடுவே இரவு முழுவதும் நிலவையும் நட்சத்திரங்களையும் துணையாகக்கொண்டு விடிவெள்ளியின் வருகையில் திசைபார்த்து ஆபத்தான ஆழ்கடலில் அன்றாட உணவுக்காக உழைக்கும் மக்கள் கூட்டம் வாழும் பருத்தித்துறையின் முனைப்பகுதிக்கு மாலை வேளை ஒன்றில் நாம் சென்றிருந்தோம்.
மாலை வேளையாதலால் கடலுக்குச் செல்லத் தயாராகிக்கொண்டிருந்தார்கள் மீனவர்கள். இரவின் மடியில்; உழைத்த உழைப்பின் களைப்பு உடலில் தெரிந்தது.
ஒவ்வொரு விடியலையும் மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கும் இவர்கள் ஒவ்வொரு இரவிலும் சமீபகாலமாக எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் குறித்து கூற வேண்டிய தேவை அவர்களுக்கிருந்தது. அதுபற்றி அவர்களுடன் உரையாடும் வாய்ப்பு எமக்குக் கிடைத்தது.
இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதாக எழும் குற்றச்சாட்டுகள், அதற்காக தமிழகத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் என அண்மைக்காலமாக பிரச்சினைகள் உருவாகியவண்ணமே உள்ளன.
இந்நிலையில், உண்மையாகவே இலங்கையின் வடமுனைப் பகுதியில் நடப்பது என்ன என்பது பற்றி அறிந்துகொள்வதற்காக நாம் அவர்களுடன் தொடர்ந்து உரையாடினோம். முனைப் பகுதியைச் சேர்ந்த துரை (வயது 55), இரத்தினம் (வயது 59) ஆகிய இருவரும் இயந்திரப் படகில் கடலுக்கு எம்மை அழைத்துச் சென்று சுதந்திரமாக கருத்துக்களைத் தெரிவித்தார்கள்.
“நாங்கள் கொண்டுபோய் வலையைப் போட்டால் இந்திய இழுவைப் படகுகள் வந்து அறுத்துக்கொண்டு போகும். முன்பெண்டால் நாங்கள் கடலுக்குப் போகும்போது வலையைப் போட்டுவிட்டு நித்திரைகொள்ளுவம். இப்போது நித்திரைகொள்ள ஏலாது. இந்திய இழுவைப் படகுகள் எந்தநேரத்திலும் வரலாம். அதனால் நாங்கள் கவனமாக இருப்போம்.
கடல் எல்லைப் பிரச்சினையும் இருக்கிறது. இந்திய - இலங்கை கடல் எல்லை எதுவென நேவிக்காரருக்குத்தான் தெரியும். இந்தியன் நேவிக்கும் தெரியும். எங்களிட்ட ரேடார் கிடையாது. அதனால எல்லையை கண்டுபிடிக்கிறதில சிக்கல் இருக்குது.
ஆனாலும் நாங்கள் இந்தியன் கடல் எல்லைக்குள்ள போறதில்ல. இந்திய மீனவர்கள் தான் எங்கட எல்லைக்குள்ள வருவினம்.கடந்த வாரம் என்ர எட்டு வலைகள் இழுவைப் படகு வந்ததால அறுந்துப்போச்சுது. ஒரு துண்டு 12 ஆயிரம் ரூபா. இந்திய மீனவர்களால பல லட்சம் ரூபா பெறுமதியான வலைகளை இழந்தவர்களும் இருக்கினம்;. இது காலங்காலமாக நடக்கும் சம்பவங்கள்.
இந்திய மீனவர்கள் எங்களைத் தாக்குவது உண்டு. ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான படகுகளில் வருவினம். எங்களது வலைகளை அறுத்துக்கொண்டு செல்வார்கள். அப்படியான சந்தர்ப்பங்களில் வாக்குவாதம் ஏற்பட்டதுமுண்டு.
சிலநேரங்களில் அவர்கள் எங்களைத் தாக்குவார்கள். தாக்குதல் சம்பவங்கள் தொடர்வதை தாங்க முடியாமல் நாம் குழுவாக சென்று அவர்களுடைய படகுகளை இழுத்து வந்து எமது கரையில் கட்டி வைத்த சந்தர்ப்பமும் இருக்குது.
இப்போது கொஞ்ச நாட்களாக கடல்வளம் பாதிக்கப்பட்டுள்ளது. முன்னர் ஒரு போர்ட்டில் கிட்டத்தட்ட 60 அல்லது 70 கிலோ மீன்கள் கொண்டுவருவம். இப்போது ஆறு அல்லது ஏழு கிலோ கரைக்குக் கொண்டுவருவதே சிரமமாக இருக்கிறது. அதோட இந்தக் கொஞ்ச நாட்களாக கடலில் ஒருவகை பாசி உருவாகியுள்ளது” என இருவரும் தமது அனுபவங்களையும் தற்போதைய நிலைவரங்களையும் எமக்குக் கூறினார்கள்.
ஆம்! இவர்கள் கூறும் விடயங்களைக் கேட்கும்போது எமக்கு பல்வேறு வகையிலும் சிந்திக்கத் தோன்றியது.
முனைப்பகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை உரியவர்கள் நேரடியாக ஆராயத் தவறுகின்றமையும் அடிக்கடி நிகழும் அசாதாரண சூழ்நிலைகளால் ஏற்படும் தாக்கங்கள் குறித்தும் மீனவர்கள் சுட்டிக்காட்டினர்.
இலங்கை அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள தேசிய கடற்றொழில், நீரியல் வளக் கொள்கைக் கோவையில், ‘கரையோர கடற்றொழில் துறையில் பாரம்பரிய மீனவனுக்குள்ள உரிமைகளை உறுதிப்படுத்துதல்’ எனும் கருப்பொருள் 8ஆவது அங்கமாக இடம்பெற்றுள்ளது. எனினும் நடைமுறையில் இது சாத்தியமாகிறதா?
அந்த கொள்கைக் கோவையின் 12 ஆவது பிரிவு இவ்வாறு கூறுகிறது, ‘ கடற்றொழில் வளங்களை அனுமதியின்றி அறுவடை செய்வதைத் தவிர்ப்பதற்காக கடற்றொழிலாளர்களின் பங்களிப்புடன் தேடுதல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை விருத்தி செய்தலும் மேற்பார்வை நடவடிக்கைக்கான பிரிவு ஒன்றை ஸ்தாபித்தலும்’.
இதன்பிரகாரம் மீனவர்களுக்குரிய வசதிகள் செய்துகொடுக்கப்பட்டிருக்கின்றனவா என்பதும் கேள்விக்குறியே.
இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக உள்நுழைதல் விடயத்தில் அவர்களுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின்போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்பது ஆராயப்பட வேண்டும்.
ஆக! கடல் அன்னையை நம்பிக் காலம் முழுவதும் ஆபத்தான தொழிலோடு ஜீவனோபாயம் நடத்திவரும் இந்த மீனவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுதல் அவசியமாகும்.
இலங்கை அரசாங்கம் இதற்குரிய தீர்வுகளைக் காலம் கடத்தாமல் முன்வைக்க வேண்டும். இல்லாவிடின் குறையோ நிறையோ இயற்கையையே நம்பி வாழும் இவர்களுடைய கவலைமிகுந்த வாழ்க்கைக்கு கட்டாயம் பொறுப்புக் கூறவேண்டிவரும் என்பதே உண்மை.
வீரகேசரி

கருத்துகள் இல்லை: