ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

புதுடில்லி:சுமந்திரன் சங்கரியை தாக்க முயன்றார் ஈ.என்.டி.எல்.எவ் ராஜன் தடுக்காவிட்டால்

யாழ்ப்பாண கூத்து டில்லியில் கலைந்த கதை!


புதுடில்லிக்க பேசச்சென்ற தமிழ் கட்சிகள் இனப்பிரச்சனைக்கான ஒருமித்த ஒரு தீர்வினை கையளிக்க முடியாமல் நாடு திரும்பியுள்ளன. சுத்துமாத்துக்கள், குழிபறிப்புக்கள், மட்டுமன்றி அடிதடிகள் வரை டில்லி மாநாடு அல்லோல கல்லோலப்பட்டுள்ளது. வழமைபோல தமிழ் தலைமைகளின் பதவிவெறியிலும் விட்டுக்கொடுப்பின்மையினாலும் இன்னுமொரு முறை தமிழ் மக்களின் வாழ்வில் மண் அள்ளி போடப்பட்டுள்ளது. கடந்த தேர்தல்களில் தமது தோல்விகளை மறைக்கவும் ஆசனங்களைக் காப்பாற்றிக்கொள்ளவும் ஒற்றுமைவேசம் போட்ட த.வி.கூட்டணி, புளட் போன்றவை என்றுமே திருந்தாத தமிழ் கூட்டமைப்புடன் கைகோர்த்து கொண்டன.
இதற்கு தமிழர் ஒற்றுமை, மக்கள் நலம் போன்ற முலாம்களும் பூசப்பட்டன. பரஷ்பர முதுகுசொறிதலுடன் சங்கரி, சித்தார்தன் போன்றவர்கள் புலிக்கூட்டமைப்புக்குள் குந்திக்கொண்டனர். முன்னொரு காலத்தில் தந்தை செல்வாவின் கீழ் அணிதிரண்டது போல் மீண்டும் தமிழர்கள் ஓரணி திரளவேண்டும் என்று உள்ளுராட்சிசபை தேர்தல்களில் முழங்கினார் ஆனந்தசங்கரி. இந்த வேசங்கள் எல்லாம் தமிழ் தலைமைகளின் போலி வேசங்கள் என்று புரிந்துகொள்ளாத மக்கள் இவர்கள் எல்லாம் ஒன்றாகி ஏதோ ஒரு அற்புத வாழ்வை மீட்டுத்தருவார்கள் என்று அப்பாவித்தனமாக நம்பியிருந்தனர். போதாகுறைக்கு இது தேர்தல் கூட்டு அல்ல தமிழர்களின் விடியலுக்கான அத்திவாரம் என்று பூச்சூடினார் சித்தார்த்தன். ஆனால் உள்ளுராட்சி தேர்தல் முடிந்து சூடு ஆறமுன்னமே சுடுபாடு இல்லாத குறையாக டில்லி மாநாடு அடிதடியுடன் முடிவுற்றது.  ஜனாதிபதி ராஜபக்ச மட்டுமல்ல இந்திய மத்திய அரசு கூட எல்லா தமிழ் கட்சிகளும் ஒற்றுமையாக ஒரு தீர்வை முன்வையுங்கள் என்று யுத்தம் முடிந்த கையோடு விட்ட அறிக்கைகளை காற்றோடு கலந்ததுதான் மிச்சம். சுவிஷ் மாநாடு, தமிழரங்கம் என்று காலமும் வீணாகியது.
இந்தியாவும் “எங்களால் ஏதும் செய்யமுடியாது நீங்கள் எல்லா தமிழ் கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து ஒருமித்த முடிவுக்கு வாருங்கள். என்ன வேண்டும் என்பதை ஒரே குரலில் அறிவியுங்கள் அதை வைத்து கொண்டுதான் நாமும் இலங்கையரசிடம் பேசமுடியும். அதைத்தவிர இந்தியாவில் ஏதும் செய்ய முடியாது” என்பதை தெட்டத் தெளிவாக பலமுறை நிருபாமாராவ் ஊடாக தெரிவித்து விட்டது. இருந்தாலும் தமிழ் நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றமும் ஜெயலலிதாவின் இலங்கைமீதான பொருளாதாரத் தடை போன்ற தடாலடி அறிக்கைகளும் இந்தியாவை மீண்டும் தளராத வேதாளமாய் டில்லிமநாட்டை கூட்டச்செய்தது. 23, 24 ம் திகதிகளில் இடம்பெற்ற மாநாட்டில் முதல்நாள் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் உடனடி வாழ்வாதார பிரச்சனைகள் குறித்து சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அகதியின் மீள்குடியேற்றம், இராணுவ முகாம்களை அகற்றுதல் என்பதாக வழமையான தீhமானங்கள் எடுக்கப்பட்டு ஊடகங்களுக்கும் அறிவிக்கப்பட்டது. இரண்டாம் நாள்தான் வந்தது சோதனை டில்லிக்கு. அரசியல் தீர்வு பற்றிய உரையாடல்களுக்கென இரண்டாம் நாள் ஒதுக்கப்பட்டதுதான் அதற்கு காரணம்.
தமது கொள்கை என்ன? கோட்பாடுகள் என்ன? என்பது பற்றி என்றுமே அக்கறைப்படாத தமிழ் தலைமைகள் எப்படி அரசியல் தீர்வு பற்றி ஒருமித்து முடிவு எடுக்கமுடியும். தமிழர் விடுதலைக்கூட்டணி, தமிழரசுக்கட்சி, தமிழ் காங்கிரஷ், ஈ.பிஆர்.எல்.எவ் நாபா அணி, சுரேஷ் அணி, ரெலோ (செல்வம்அணி), ஈரோஷ், இவ்வளவும் போதாதென்று ஈ.என்.டி.எல்.எவ். இவர்கள் எல்லோரும் சேர்ந்து அரசியல் தீர்வில் ஒருமிப்பது என்பது ஒப்பேறுகின்ற காரியமா இது?பலபத்து மாநிலங்களையும், கோடானுகோடி மாந்தர்களையும் கட்டியாளும் டில்லியால் இந்த தமிழ் தலைவர்களை ஒன்றாக்க முடியவில்லை என்பதையிட்டு ஒவ்வொரு யாழ்ப்பாணத்தானும் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.
இரண்டாம் நாள் அரங்கு தொடங்கியது. மாநாட்டில் உள்ளவர்களிடம் பேசுவதைவிட ரெலிபோன்களுடனேயே பலரும் கிசுகிசுத்துக்கெதாண்டிருந்தது. ஒற்றையாட்சி,  சமஷ்டி, ஐச்கிய இலங்கை, தன்னாட்சி அதிகாரம், வட-கிழக்கு இணைந்த தாயகம், சுயநிர்ணயம், தேசியம்……………. என்று வெற்று விஷ்யங்களிலும், விதண்டாவாதங்களிலும் பொழுது கழிந்தது. மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் நாச்சியப்பனே நம்பிக்கையை இழந்துவிட்டார். 

எப்படியாவது ஒரு கூட்டு அறிக்கையை அன்றைய பொழுதுக்குள் வெளியிட்டுவிட வேண்டும் என்கின்ற அவரின் ஆசைபற்றி யாருக்கு கவலை. கஜேந்திர குமார் பொன்னம்பலம் தன்னாட்சி அதிகாரம் கொண்ட தாயகம் என்று ஒற்றைக்காலில் நின்றார். சங்கரியோ இந்திய மாநில சமஷ்டி ஒன்றே சாத்தியமானதும் பொருத்தமானதும் என்று விடாப்பிடியாக நின்றபோது விவாதம் சூடேறியது. வெளிநாட்டு ரெலிபோன் தொடர்புகளுக்காக கூட்டமைப்பு முக்கியஷ்தர்கள் அடிக்கடி மாநாட்டு மண்டபத்துக்கு வெளியே சென்று வருவதற்காக விவாதங்கள் இடைநிறுத்தவும்பட்டன.
இறுதியாக கஜேந்திரகுமாருக்கு வந்த வெளிநாட்டு ரெலிபோன் “நீங்கள் தமிழீழத்தை கைவிட்டு விட வில்லையென்பதை வெளிநாட்டுத் தமிழர்கள் நம்பவேண்டும் என்றால் தன்னாட்சி அதிகாரம் கொண்ட தாயகம் என்கின்ற வார்த்தைகளை அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டேயாக வேண்டும்” என்பதை அழுத்தம் திருத்தமாக சொன்னது.

 இப்படிக்கோருவது எல்லாநிலைமைகளையும் சீர்குலைத்துவிடும் என்றும் எம்மீதான இலங்கை இந்திய அரசுகளின் சகலவிதமான நம்பிக்கைகளையும் பாழடித்துவிடும் என்றும் விளக்கமாக சொல்ல முயன்றார் சங்கரி. ஆத்திரமுற்ற கஜேந்திரன் வெளிநாட்டில் இருந்துவந்த ரெலிபோன் கோளை சமாளிக்க முடியாமல் சுமந்திரனிடம் ரெலிபோனைக் கொடுத்தார். ரெலிபோனுடன் வெளியில் சென்ற சுமந்திரன் சில நிமிடங்கள் கழித்து உள்ளே வந்தார். வந்ததும் வராததுமாக சங்கரியினதும் மற்றய தலைமைகளினதும் கருத்துக்களை முற்றாக நிராகரித்து தன்னாட்சி அதிகாரம் கொண்ட தாயகம் எனும் வார்த்தையை விட்டுக்கொடுக்க முடியாது என்று முடிவாக அறிவித்தார். இதனால் கோபம்கொண்ட சங்கரி “வெளிநாட்டுத் தமிழர்களின் ஆட்டுக்கு ஆடுகின்ற நீயெல்லாம் ஒரு அப்புக்காத்தா” என்று பொரிந்து தள்ளினார்.

இதனால் கோபமுற்ற சுமந்திரன் கதிரை மேசையை ஒதுக்கித்தள்ளிவிட்டு சங்கரியை தாக்க முயன்றார். ஈ.என்.டி.எல்.எவ் ராஜன் தடுக்காவிட்டால் சங்கரியின் நிலைமை பரிதாபகரமாகவே முடிந்திருக்கும்.

விவாதமுறை, வார்த்தைப்பிரயோகம், பொறுமை, சகிப்புத்தன்மை…  போன்றவற்றில் எமது தலைமைகள் இன்னும் நிறையவே கற்றுக்கொள்ளவேண்டியுள்ளது. ஒற்றுமை ஒற்றுமை என்று சதா புலம்பிக்கொண்டிருக்கம் இவர்கள் எப்போதுதான் திருந்தப் போகிறார்கள்.?  இலங்கைவாழ் தமிழ் மக்களுக்காக ஒரு உருப்படியான தீர்வை முன்வைக்க முதுகெலும்பற்றவர்களுக்கு எமது மக்களை வழிநடத்த என்ன யோக்கியதை இருக்கிறது.?
கு.சாமித்தம்பி

கருத்துகள் இல்லை: