ஞாயிறு, 11 ஜூலை, 2010

தங்க பிஸ்கட்டுகளை கடத்திய இலங்கையர் இருவர் சென்னையில் கைது

இலங்கையில் இருந்து சென்னைக்கு சென்ற விமானத்தில் தங்க பிஸ்கட்டுகளை மலவாயிலினுள் மறைத்து கொண்டு சென்ற இலங்கை இளைஞர்கள் இருவர் சென்னை விமான நிலையத்தில் வைத்து சுங்கத்துறை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொண்டு சென்ற தங்க பிஸ்கட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இக் கடத்தல் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது,
கொழும்பில் இருந்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தடைந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை போட்டனர்.
அப்போது கொழும்பில் இருந்து சுற்றுலா விசாவில் வந்திருந்த இரண்டு இளைஞர்களின் பெட்டிகளை சோதனை போட்டனர். அந்தப் பெட்டிகளில் ஒன்றும் இல்லாததால் அவர்களை போகச்சொல்லி விட்டனர்.
அந்த இரண்டு இளைஞர்களும் விமான நிலையத்தை விட்டு வெளியே நடந்துசென்றபோது அவர்கள் தாண்டித் தாண்டி வித்தியாசமாக நடந்து சென்றதைப் பார்த்த அதிகாரிகளுக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.
உடனே அவர்கள் இருவரையும் பிடித்து வந்து தனியறையில் வைத்து சோதனை செய்தபோது அவர்கள் இருவரும் தலா 5 தங்க பிஸ்கட்டுகளை மலவாயிலில் வைத்துக் கடத்தி வந்தது தெரிய வந்தது.
உடனடியாக விமான நிலைய மருத்துவ குழுவினர் விரைந்து சென்று அவர்களிடமிருந்த 1 1/2 கிலோ எடையுள்ள 10 தங்க பிஸ்கட்டுகளை ஆசன வாயிலில் இருந்து எடுத்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.28 லட்சமாகும்.
பிடிபட்ட அந்த இலங்கை இளைஞர்களிடம் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தியபோது அவர்கள் தெரிவித்ததாவது,
இலங்கையில் வேலை இல்லாமல் இருந்ததாகவும், அப்போது ஒருவர் தங்க பிஸ்கட்டுகளை கொடுத்து இதை மலவாயிலில் வைத்து சென்னைக்கு எடுத்து செல்லுங்கள், உங்கள் புகைப்படங்களை நாங்கள் மின்னஞ்சலில் சென்னையில் உள்ள ஒருவருக்கு அனுப்பி விடுவோம். அவர் விமான நிலையத்தில் வந்து உங்களை சந்திப்பார். இதற்காக உங்களுக்கு தலா. ரூ.10 ஆயிரம் தருவார்கள் என்று கூறியதால் தங்கத்தை கடத்தி வந்தோம் என்றனர்.
பிடிபட்ட இலங்கை வாலிபர்களின் பெயர்களை அதிகாரிகள் வெளியிட மறுத்துவிட்டனர். இந்த தங்கக் கடத்தலில் ஈடுபட்ட சென்னை கும்பலை பிடித்தபின் இதுபற்றிய முழு விவரங்களை வெளியிடுவோம் என்று விமானநிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை: