வியாழன், 15 ஜூலை, 2010

அமெரிக்கஎண்ணெய்ப் படலம் தமிழகக் கடற்கரைப் பகுதிகளிலும் கூட எண்ணெய்த் திட்டு தட்டுப்படலாம்

அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு தற்போது பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ள பிரச்னை, அந்நாட்டு பொருளாதார நிலை, ஆப்கனிலிருந்து படை வாபஸ் அல்லது ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பு என்று கூறினால் அது நிச்சயமாக இல்லை.

அமெரிக்காவுக்கு மிகப் பெரும் சூழல் சீர்கேடாக, ஆபத்தாக உருவாகியிருக்கும் மெக்ஸிகோ வளைகுடா பகுதி எண்ணெய்க் கசிவுதான் ஒபாமா நிர்வாகத்துக்குச் சிக்கலை ஏற்படுத்தியுள்ள பிரச்னையாகும்.

பதவி விலகக் கூறி பிரச்னை எழுப்பியுள்ள எதிர்க்கட்சிகள் ஒருபுறம் என்றால், இவ்வளவு பாதுகாப்பற்ற சூழலில் பிரிட்டன் நிறுவனத்தை அனுமதித்தது ஏன்? என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேள்விக் கணைகளால் ஒபாமாவைத் துளைத்து வருகின்றனர்.

மெக்ஸிகோ வளைகுடாவில் ஏற்பட்டுள்ள எண்ணெய்க் கசிவு, செப்டம்பர் 11-ல் அமெரிக்கா மீது அல் காய்தா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைப் போன்று அபாயகரமானது என்று ஒபாமாவே ஒப்புக்கொண்டுள்ளார். இதிலிருந்தே எண்ணெய்க் கசிவால் ஏற்பட்டுள்ள பாதிப்பின் தீவிரத்தை உணர முடியும்.

இந்த எண்ணெய்க் கசிவால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பிலிருந்து அமெரிக்கா மீளவும், இனி பாதிப்பு ஏற்படவுள்ள நாடுகள் பாதிப்பிலிருந்து மீளவும் பல ஆண்டுகளாகும் என்பதும் உறுதி.

அமெரிக்காவின் மெக்ஸிகோ வளைகுடாவில் கடந்த 3 மாதங்களாக ஏற்பட்டு வரும் எண்ணெய்க் கசிவு உலக அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாள்தோறும் சுமார் 60 ஆயிரம் பேரல்கள் வரை எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு வருகிறது என்பதை அமெரிக்காவே இப்போது ஒப்புக்கொண்டுள்ளது. கசிவைத் தடுக்க பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம் மேற்கொண்ட முயற்சிகள் ஒன்றும் பலனளிக்கவில்லை.

தொடர்ந்து கடலில் கலந்து வரும் எண்ணெய், கடலின் மேற்பரப்பில் பல கி.மீ. சுற்றளவுக்குத் திட்டுகளாகப் படிந்து சிறுசிறு தீவுக் கூட்டமாக கடல் வழியாக உலகமெங்கும் பயணம் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.

அமெரிக்காவின் ஃபுளோரிடா, லூஸியானா மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகள் எண்ணெய்த் திட்டுகளால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளன. நாவேரி பீச், கிரேஸ்டன், பென்சகோலா, போர்ட் வால்ட்டன், டெஸ்டின் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடற்கரைப் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அப்பகுதி கடல் முழுவதும் கருமையாகக் காட்சியளிக்கிறது. கடல்வாழ் உயிரினங்கள் பல இறந்து கரை ஒதுங்கி வருகின்றன. எண்ணெய்க் கசிவைத் தடுத்து நிறுத்தாதவரை இந்தப் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரிக்குமே தவிர ஒருபோதும் குறையாது.

மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம் எண்ணெய் எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட விபத்துதான் இந்த பெரும் விபரீதத்துக்குக் காரணம். பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தின் டீப் வாட்டர் ஹாரிஸப்ன் என்ற பெயரிலான கடலுக்கு அடியில் துளையிட்டு எண்ணெய் எடுக்கும் இயந்திரம் மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.

ஏப்ரல் 20-ல் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட மீத்தேன் வாயுக் கசிவால் கடல் மட்டத்துக்கு மேல் இருந்த இயந்திரத்தின் மேடைப்பகுதி தீப்பிடித்து வெடித்துச் சிதறியது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த 11 பணியாளர்கள் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களும் மற்றவர்களும் உயிர்காக்கும் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். இயந்திரத்தில் பற்றிய தீ சுமார் 2 நாள்களுக்குப் பின் அணைந்தது. விபத்தால் டீப் வாட்டர் ஹாரிஸப்ன் இயந்திரமும் அப்பகுதியில் மூழ்கியது.

அப்போது ஏற்பட்ட விபரீதத்தை எவரும் உணரவில்லை. அடுத்த சில மணிநேரத்தில் கடலின் மேல்மட்டத்தில் அடர்ந்த நிலையில் எண்ணெய் மிதக்கத் தொடங்கியது. சில நாள்களில் அப்பகுதி முழுவதுமே கருமையான நிறத்தில் எண்ணெய்க் கடலாக மாறியது. எண்ணெய்க் கிணற்றின் ஊற்றுக்கண்ணில் இருந்து எண்ணெய் தொடர்ந்து வெளிவரத் தொடங்கியது. அப்போதுதான் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கசிவைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கியது பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம். கசிவு ஏற்பட்டு வரும் இடத்தை அடைக்க பலவகையில் முயற்சி மேற்கொண்டும் கடலுக்கு அடியில் இருந்து பொங்கி வரும் எண்ணெய்க்குத் தடை போட முடியவில்லை.

இந்தப் பிரச்னை தொடர்பாக அமெரிக்க - பிரிட்டன் அதிகாரிகள் நடத்திய ஆலோசனையின்போது அணுகுண்டை வீசி எண்ணெய்க் கசிவைத் தடுத்து விடலாமா! என்று "புத்திசாலித்தனமான' யோசனையைக் கூறி பிரிட்டன் அதிகாரிகளை அதிரவைத்துள்ளனர் அமெரிக்க விஞ்ஞானிகள்.

கசிவு ஏற்பட்டுள்ள பகுதிக்கு அருகே மற்றொரு கிணற்றைத் தோண்டி எண்ணெயை எடுப்பதுதான் பிரச்னைக்கு ஒரே தீர்வு என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஆனால் இப்பணியை மேற்கொண்டு அதன் மூலம் எண்ணெய்க் கசிவு நிற்க மேலும் ஒரு சில மாதங்கள் பிடிக்கும். அதற்குள் எண்ணெய்க் கசிவால் மேலும் பல நாடுகளின் கடல்வளமும், கடல்வாழ் உயிரினங்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும்.

இப்போதைக்கு அமெரிக்காவின் கடற்கரைப் பகுதியை பாதித்துள்ள இந்த எண்ணெய்ப் படலம், பல கி.மீ. சுற்றளவுள்ள சிறு சிறு தீவுக் கூட்டமாகப் பிரிந்து தீவுகளாக பல நாடுகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. இன்னும் சிலநாள்களில் இதன் பாதிப்பை பிற நாடுகளும் உணரத் தொடங்கும். இதே நிலை சில மாதம் நீடித்தால் தமிழகக் கடற்கரைப் பகுதிகளிலும் கூட எண்ணெய்த் திட்டு தட்டுப்படலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

மொத்தத்தில் உலகின் பாதுகாவலன் என்று மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து உலக நாடுகளுக்கு ஏற்படுத்தியுள்ள மற்றொரு பேரழிவு இது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
-Dinamani-

கருத்துகள் இல்லை: