வியாழன், 15 ஜூலை, 2010

கைகளை பின்னால் கட்டியபடி "பைக்' ஓட்டிய வாலிபர் சாதனை


சேலத்தைச் சேர்ந்த வாலிபர், லிம்கா சாதனை முயற்சியாக, இரண்டு கைகளை பின்னால் கட்டியபடி மோட்டார் சைக்கிளில், சேலத்திலிருந்து திண்டுக்கல் நோக்கி பயணித்தார். சேலம் அம்மாப்பேட்டை குண்டு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் கோபிநாத். இவர் ஐந்து ஆண்டுகளாக லிம்கா சாதனை செய்வதற்கான முயற்சியில், தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இரண்டு கைகளை பின்னால் கட்டி, இரண்டரை மணி நேரத்தில் 140 கிலோ மீட்டர் தூரம் சென்ற லிம்கா சாதனையை முறியடிக்கும் முயற்சியில், கோபிநாத் நேற்று ஈடுபட்டார்.
நேற்று காலை 9.10 மணிக்கு சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாசில், லிம்கா சாதனை முறியடிக்கும் நிகழ்ச்சியை, சேலம் மாவட்ட விளையாட்டு அதிகாரி பிரதாப்குமார் துவக்கி வைத்தார். "பல்சர் 150' மோட்டார் சைக்கிளில், இரண்டு கைகளையும் பின்னால் கட்டிக் கொண்டு பயணித்த கோபிநாத்தின் பாதுகாப்பிற்காகவும், போக்குவரத்தை சீர்செய்யவும், 2 கார், ஒரு வேனில் அவரது நண்பர்களும் பயணித்தனர். சரியாக 11.30 மணிக்கு திண்டுக்கல் டோல்கேட்டை கோபிநாத் கடந்தார். இரண்டரை மணி நேரத்தில், 185 கிலோ மீட்டரை கடந்தார்.
இது குறித்து கோபிநாத் கூறியதாவது: லிம்கா சாதனை செய்ய வேண்டும் என்பது, பல ஆண்டு கனவு. பல வழிகளில் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்த போது, இரண்டு கைகளையும் பின்னால் கட்டிக் கொண்டு பைக்கில், 140 கிலோ மீட்டர் ஓட்டியது, லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருந்ததை அறிந்தேன். இந்த சாதனையை முறியடித்து, லிம்கா புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு பயிற்சிகள் எடுத்தேன். இந்த சாதனையை முறியடிப்பதாக, 15 தினங்களுக்கு முன் லிம்கா எடிட்டரிடம் கூறி, அதற்கான அனுமதியை வாங்கினேன். என்னுடைய சாதனையை, லிம்கா புத்தக அதிகாரிகளுக்கு, நாளை அனுப்பி வைக்க உள்ளேன். இவ்வாறு கோபிநாத் கூறினார்.

கருத்துகள் இல்லை: