அனுராதபுரம் எப்பாவெல பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் வெட்டியும் கொத்தியும் குரூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் அடையாளங் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். கொலை செய்யப்பட்டவர்களின் உறவினரான இவர் அதே ஊரைச் சேர்ந்தவர் எனவும் இவரை கைது செய்ய மூன்று பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எப்பாவெல உதரெங்கம பகுதி வீடொன்றில் தாய், தந்தை மற்றும் அவர்களின் இரு பிள்ளைகள் வெட்டிக் கொல்லப்பட்டிருந்தனர். இவர்களின் சடலங்கள் நேற்று முன்தினம் காலை மீட்கப்பட்டன. இவர்கள் நான்கு தினங்களுக்கு முன் கொல்லப்பட்டிருப்பதாக பொலிஸார் சந்தேகம் தெரிவித்திருந்தனர். இவர்களின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அயலவர்கள் பொலிஸில் முறையிட்டதையடுத்தே இரத்த வெள்ளத்தில் கிடந்த சடலங்கள் மீட்கப்பட்டன. இவர்களின் பிரேத பரிசோதனைகள் அநுராதபுரம் ஆஸ்பத்திரியில் இடம்பெற்றன. பின்னர் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. எச்.ஏ.தயாரத்ன (48) மாலினி ஜயசிங்க (42) அசினி உதேசிகா (17) கிரிசாந்த தில்ஹார (13) ஆகியோரே கொல்லப்பட்ட நால்வருமாவர். சந்தேகநபர் தலைமறைவாகியிருப்பதாகவும் விரைவில் கொலையாளியைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக