கேள்வி : இனப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவரக் கூடிய அதிகாரப்பகிர்வு பற்றிய உங்களது கருத்து என்ன?
பதில் : தமிழ்க்கட்சிகள் அடிக்கடி ஒன்றிணைந்து சந்தித்து ஒரு குறைந்த பட்சமாயினும் சில விடயங்களில் உடன்பாடு காண வேண்டும். அதன் மூலம் ஒரு தீர்வுத் திட்டத்தை உருவாக்கி அதனை தமிழர்களின் அரசியற் கோரிக்கையின் ஒரே குரல் என வெளிப்படுத்த வேண்டும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் ஒரு தீர்வுத் திட்டத்தை ஏற்கனவே வைத்திருப்பார்களாயின் அதனை அனைத்துத் தமிழ்க் கட்சிகள், சமூகத் தலைவர்கள், மற்றும் புத்திஜீவிகளின் கருத்துக்களுக்கும் அபிப்பிராயங்களுக்கும் வெளிப்படுத்தி முன்வைக்க வேண்டும். அதன் மூலம் அவ்வாறான ஒன்று அனைத்துத் தமிழர்களினதும் கோரிக்கையென வெளிப்படும். அதை உலக நாடுகளிடம் சமர்ப்பித்து எமது நியாயத்தை எடுத்துக் கூறவேண்டும். தெற்கில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் எத்தனையோ சிங்களக் கட்சிகள் இருக்கின்றன. ஏன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலும் அதிகாரப்பகிர்வுக்கு ஆதரவான அமைச்சர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கும் எமது ஒற்றுபட்ட கோரிக்கையை முன்வைத்து அதுபற்றி அவர்கள் சிங்கள மக்கள் மத்தியில் சாதகமான அபிப்பிராயங்களை உருவாக்க வழிவகுக்க வேண்டும். நாங்கள் பிரிவினைவாதிகள் அல்லர் எமது கோரிக்கைகள் நியாயமானவை என்று சிங்கள மக்களுக்கு முதலில் நம்பிக்கையைக் கொடுக்க வேண்டும். இவ்வாறான முன்னெடுப்புகளே ஒரு நிலையான அரசியற் தீர்வுக்கு நிலைமைகளை இட்டுச் செல்லும்.
கேள்வி : தமிழ்ப் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் நிகழவுள்ளதாக ஒரு அச்ச நிலை தோன்றியுள்ளது. இது பற்றி உங்களது அபிப்பிராயம் என்ன?
பதில் : தெற்கில் எமது மக்கள் இருக்கிறார்கள். அதேபோல சிங்களவர்களும் 30 வருட யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கில் உள்ள அவர்களின் நாகவிகாரையிலும் நயினாதீவிலுள்ள பௌத்த விகைரையையும் தரிசிக்கவும், சுற்றுலா நோக்கிலும் இங்கு வருகின்றனர். இவ்வாறு வருகின்றவர்களை எமது நிலத்தில் குடியேறுவதற்காகவே வருகிறார்கள் என குற்றம் சாட்டுவது சரியானது அல்ல. வன்னியில் என்ன நடக்கிறது என்பது தொடர்பாக தமிழர்களின் மத்தியில் பலஅச்சங்கள் தோன்றியிருப்பது இயல்பானது. அவை தொடர்பாக அரசாங்கம் மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும். ஊகங்களின் அடிப்படையில் எதனையும் என்னால் கூறமுடியாதுள்ளது. ஆனால் இவ்வாறான செயலுக்கு அரசே பெரும் பொறுப்பாகும். அதேவேளை ஆதாரமற்ற ஊகங்களை எமது மக்கள் மத்தியில் விதைக்கக் கூடாது என்பதில் நாமும் சமூகப் பொறுப்புணர்வுடன் கவன இருக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக