திங்கள், 12 ஜூலை, 2010

நித்யானந்தா சொற்பொழிவு :நடிகைமாளவிகா உட்பட பலர் பங்கேற்பு

பெங்களூரு : வழக்குகளில் சிக்கி, 80 நாட்களுக்கு பின், சாமியார் நித்யானந்தா "ப்ரீடம்' (சுதந்திரம்) என்ற தலைப்பில் பக்தர்களிடையே ஒன்றரை மணி நேரம் சொற்பொழிவு நிகழ்த்தினார். நடிகை மாளவிகா உட்பட பலர், அவரது காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

பல்வேறு வழக்குகளில் சிக்கிய சாமியார் நித்யானந்தாவுக்கு, பிடதி ஆசிரமத்தில் தங்கலாம், மத சம்பந்தமான கூட்டம், பிரார்த்தனை கூட்டம், போதனைக் கூட்டங்களை நடத்தக்கூடாது என்று, கர்நாடக ஐகோர்ட் நிபந்தனைகளை விதித்திருந்தது. இந்த நிபந்தனைகளை தளர்த்துமாறு நித்யானந்தா, ஐகோர்ட்டில் மனு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி  சுபாஷ்ஆதி,  "மதசார்பு போதனைகள், ஆன்மிகக் கூட்டங்களை மாதத்திற்கு ஒருமுறை நித்யானந்தா நடத்தலாம். ஆனால், நகரை விட்டு வெளியே செல்ல அனுமதியில்லை. தேவைப்பட்டால் கோர்ட்டில் முன்அனுமதி பெற்று, பிடதி போலீஸ் ஸ்டேஷனில் தகவல் அளித்து சென்று வரலாம்' என, உத்தரவிட்டார்.

இதையடுத்து, நித்யானந்தா உற்சாகமடைந்தார். உடனடியாக சொற்பொழிவு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். பிடதி ஆசிரமத்தில் நேற்று கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. "ப்ரீடம்' என்ற தலைப்பில் நித்யானந்தா சொற்பொழிவு நிகழ்த்தினார்.  இதற்கான ஏற்பாடுகளை பிடதி ஆசிரமம் விரிவாக செய்திருந்தது. சொற்பொழிவு கேட்க வந்திருந்த பக்தர்கள், செய்தி சேகரிக்க வந்திருந்த பத்திரிகையாளர்கள், புகைப்பட கலைஞர்கள் அனைவரும், கடுமையான சோதனைக்கு பின், சொற்பொழிவு நடந்த ஹாலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். மாலை 5.30 மணியளவில், சாமியார் நித்யானந்தாவின் போதனைகள், சொற்பொழிவுகள் உட்பட அவர் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள்  அரை மணி நேரம் "டிவி'யில் ஒளிபரப்பப்பட்டது. மாலை 6 மணியளவில் தனது சொற்பொழிவை சாமியார் நித்யானந்தா துவக்கினார். மந்திரங்கள் ஓதினார். அவர் பேச ஆரம்பித்ததும் பக்தர்கள் கைதட்டினர்.

தனது சொற்பொழிவில், ""எனது பக்தர்கள் அகிம்சை வழியில் செயல்பட்டதால் தான் என்னால் வெற்றிபெற முடிந்தது. சிறையில் இருந்தபோது எனது ஆன்மா வெளியே தான் சுற்றியது. மக்களின் அழைப்புகளுக்கு பதில் கூறினேன். சிறையில் இருந்ததாகவே கருதவில்லை. எனது சம்பந்தமான காட்சிகளை இன்டர்நெட்டில் பார்ப்பதற்காக முற்பட்டபோது, இன்டர்நெட் முடங்கியது. மைக்கேல் ஜாக்சன் இறந்தபோது, காட்சிகளை பார்ப்பதற்காக பலரும் முற்பட்டதால் இன்டர்நெட் முடங்கியது,'' என்று குறிப்பிட்டார்.

சொற்பொழிவு முடிந்த பின், நடிகை மாளவிகா உட்பட பக்தர்கள், சாமியார் நித்யானந்தா காலில் விழுந்து ஆசி பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். 80 நாட்களுக்கு பின், நித்யானந்தா சொற்பொழிவை கேட்டது மகிழ்ச்சியளிக்கிறது என்று சில பக்தர்கள் தெரிவித்தனர்.சொற்பொழிவு முடிந்த பின் பத்திரிகையாளர்களும், போட்டோகிராபர்களும் வெளியில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். அப்போது சாமியார், "வேண்டாம்; அவர்கள் படம் எடுக்கட்டும்' என்று கூறவே, பக்தர்கள் சாமியாரிடம் ஆசி பெறுவதை படம் எடுத்தனர்.

கருத்துகள் இல்லை: