ஞாயிறு, 16 அக்டோபர், 2011

கலைஞரின் திட்டம், ஜெயலலிதாவின் கஷ்டம்!உள்ளாட்சி தேர்தல் 2011

Viruvirupuசென்னை, இந்தியா: உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரங்கள் தொடங்கியபோது, முதல்வர் ஜெயலலிதாவும் சரி, முன்னாள் முதல்வர் கருணாநிதியும் சரி, தாமே நேரடியாக இறங்கி தேர்தல் பிரசாரம் செய்ய விரும்பவில்லை. அதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமான காரணம், இவர்கள் இருவருமே தத்தமது கூட்டணிகளை முறித்துக்கொண்டு, தனித்து தமது கட்சிகளை களத்தில் இறக்கி விட்டிருந்தனர்.
இதனால், தேர்தல் முடிவுகள் எப்படி அமையும் என்பது இருவருக்குமே சத்தியமாகத் தெரியாது. (ஆனால் தமக்கே வெற்றி என்று வெளியே கூறிக்கொண்டார்கள்)

ஆனால், இவர்களால் கழட்டி விடப்பட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் நிலை வேறு விதமாக இருந்தது. திடீரென நடு வீதியில் கைவிடப்பட்ட அவர்கள், முதலில் திகைத்துப் போயினர். ஆனால், இது அவர்களது வாழ்வா? சாவா? பிரச்சினை அல்லவா… அதனால், தமிழகம் முழுவதிலும் சுழன்று சுழன்று பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க., காங்கிரஸ் தலைவர்கள் ஓடியோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டத் தொடங்கினர். பெரிய கட்சித் தலைவர்கள் வராத நிலையில், நேரில் வந்த இவர்களுக்கு திரண்ட கூட்டம், பெரிய தலைவர்களை திகைக்க வைத்தது. சிறிய கட்சித் தலைவர்கள் மாவட்டங்கள் தோறும் லோக்கல் பிரச்சினைகள் பற்றிப் பேசியதற்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருந்ததாக, முதல்வருக்கு உளவுத்துறை அறிக்கை சொல்லியது.
இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரத்துக்கு செல்வதாக திடீர் முடிவை எடுத்தார். மூன்று நாட்கள் மட்டும், மேயர் மற்றும் கவுன்சிலர் வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரசாரம் மேற்கொள்வதாக திட்டமிடப்பட்டது. இது, முன்கூட்டியே திட்டமிடப் படாத கடைசி நிமிட ஏற்பாடுதான்.
ஜெயலலிதா வெளியே தைரியமாகக் காட்டிக் கொண்டாலும், அவசர கதியில் மாவட்டம் மாவட்டமாக சென்று திரும்பியிருப்பது, வெற்றி சுலபமாக கிடைக்கப் போவதில்லை என்ற அவரது அச்சத்தையே காட்டுகிறது. மாவட்டம்தோறும் அவரது பிரச்சாரம் ஆளுங்கட்சியினருக்கு ஊக்கம் அளித்திருப்பது உண்மைதான்.
முதல்வரின் பிரச்சாரம் கடைசி நிமிடத்தில் திட்டமிடப்படாமல் விடுபட்டிருந்தால், பல இடங்களில் தே.மு.தி.க.வும் சில இடங்களில் தி.மு.க.வும் தற்போது கிடைக்கவுள்ளதைவிட அதிக ஓட்டுக்களை பெற்றிருக்க கூடும்.
தி.மு.க.வைப் பொறுத்தவரை, நிலைமை சும்மாவே மோசம் என்ற நிலையில் இருந்த கட்சி. இதனால், மற்றொரு தோல்வி, அது படுதோல்வியாக இருந்தாலும், கூச்சப்பட வேண்டிய நிலையில் இல்லை அவர்கள். இந்த வகையில்தான், அக்கட்சியின் தலைவர் கருணாநிதி சென்னையை தவிர வெளியூர் பிரசாரத்திற்கு செல்லவில்லை. ஸ்டாலின் மட்டுமே சூறாவளி பிரசாரத்தை மேற்கொண்டார்.
ஜெயித்தால் – போனஸ். ஸ்டாலினுக்கு பட்டாபிஷேகம் செய்வது சுலபம். பிரச்சாரத்தில் அழகிரி ஒதுங்கிக் கொண்டது போல, தலைமைப் போட்டியிலும் ஒதுங்கிக் கொள்ள வேண்டியிருக்கும். தலைவர் ஊர் ஊராகச் செல்லாமலேயே ஸ்டாலின் வெற்றிக் கனியைப் பறித்துத் தந்தார் என்று அலங்காரமாகச் சொல்லலாம்.
தோற்றால் – “ஜெயலலிதா போல நம்ம தலைவர் மாவட்டம் மாவட்டமாக செல்லவில்லை. போயிருந்தால் கதையே வேறு” என்று கூறி சமாளிக்கலாம்!

• படித்தது, பிடித்திருக்கிறதா? நண்பர்களிடம் “விறுவிறுப்பு.காம்” பற்றி கூறுங்களேன்!

கருத்துகள் இல்லை: