வியாழன், 26 நவம்பர், 2020

அதிமுகவுடனான கூட்டணி: முடிவு செய்யாத பாஜக!

minnambalm : அதிமுகவுடனான கூட்டணி தொடர்பாக எல்.முருகன் கருத்து தெரிவித்துள்ளார்.    நிவர் புயல் அதிதீவிர புயலாக மாறி நேற்று இரவு மாமல்லபுரம் -காரைக்கால் இடையே கரையைக் கடந்தது. இதன் காரணமாக உதயநிதி பிரச்சாரம், பாஜகவின் வேல் யாத்திரை, காங்கிரஸின் ஏர்கலப்பைப் பேரணி ஆகியவை தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகள், நிவர் புயல் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட வேண்டுமென தொண்டர்களுக்கு வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் திருச்சியில் (நவம்பர் 25) செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், “நிவர் புயல் காரணமாக இனிவரும் நாட்களில் நடைபெற இருந்த வேல் யாத்திரை ரத்து செய்யப்படுகிறது. டிசம்பர் 4ஆம் தேதி மட்டும் மீதமுள்ள 4 அறுபடை வீடுகளிலும் சாமி தரிசனம் செய்து 5ஆம் தேதி திருச்செந்தூரில் யாத்திரையை நிறைவு செய்கிறோம்” என்றார். தமிழக அரசு நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக முழுமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

அரசுடன் இணைந்து புயல் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண பணிகளில் பாஜகவினர் ஈடுபடுவார்கள் என்றும் விளக்கினார்.அமித் ஷா கலைணர் அரங்கத்தில் கலந்துகொண்ட அரசு விழாவில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, ‘அதிமுக-பாஜக கூட்டணி வரும் சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும்’ என்று அறிவித்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று குறிப்பிட்டார். ஆனால் இந்த அரசு விழாவில் மற்ற அரசியல் எல்லாம் பேசிய அமித் ஷா அதிமுக பாஜக கூட்டணி பற்றி மிகக் கவனமாகத் தவிர்த்து விட்டார்.

“கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் எனக்கு இல்லை. நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும் என எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் இருவரும் அறிவித்திருக்கிறார்கள். அந்த இடத்தில் அமித் ஷா இருந்தார். கூட்டணி தொடர்பாக மேலிடத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். உரிய நேரத்தில் கூட்டணி தொடர்பாக அகில இந்திய தலைமை அறிவிக்கும்” என்று இதற்கு பதிலளித்தார் எல்.முருகன். அதாவது சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக தாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை என்று சொல்கிறார் முருகன்.

இதுதொடர்பாக டிஜிட்டல் திண்ணையில், பாஜக கூட்டணி; அதிமுகவின் அவசரம் - என்ன பின்னணி? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டோம். அதில், “பாஜக தலைமையில் ஒரு மூன்றாவது அணியை உருவாக்கி தேர்தலைச் சந்திப்பது என்பது தான் சில மாதங்கள் முன்பு வரை பாஜகவின் திட்டமாக இருந்தது. அதிமுக கூட்டணியில் இருக்கும் பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளும் புதிய தமிழகம் கட்சியும்தான் பாஜகவோடு அணி சேரத் தயாராக இருந்தன.

அப்படி ஒரு நிலை உருவானால் அதிமுக தனிமைப்பட்டு விடும் என்பது மட்டுமல்ல திமுகவுக்கு எதிரான வாக்குகள் சிதறி திமுக ஆட்சியை பிடிப்பது இன்னும் ஏதுவாகி விடும் என்று கணக்கு போட்டது அதிமுக. இந்த நிலையில்தான் அமித் ஷா முன்னிலையிலேயே கூட்டணி தொடரும் என்று அறிவித்துவிட்டால் பாஜகவுக்கு ஒரு மென்மையான நிர்பந்தத்தை கொடுக்க முடியும் என்று கணக்குப் போட்டுள்ளார்கள். அதன்படி அறிவித்தார்கள்” என்று சொல்லியிருந்தோம். இதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது எல்.முருகனின் பதில்.

எழில்

கருத்துகள் இல்லை: