திங்கள், 23 நவம்பர், 2020

தலைவர்களின் 5-நட்சத்திர கலாச்சாரத்தால் தொடர்ந்து தோல்வியை சந்திக்கிறோம் - காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத்

dailythanthi.com தலைவர்களின் 5-நட்சத்திர கலாச்சாரத்தால் தொடர்ந்து தோல்வியை சந்திக்கிறோம் என காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் குற்றம்சாட்டி உள்ளார். 

புதுடெல்லி:காங்கிரஸ் கட்சியில் சீரமைப்பு குறித்து  மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். கட்சி சீரமைப்பு குறித்து  கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு ஆகஸ்ட் மாதம் கடிதம் எழுதிய 23 கட்சி உறுப்பினர்களில் ஆசாத் ஒருவர் ஆவார்.  இதைதொடர்ந்து செப்டம்பரில்  ஆசாத் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏ.ஐ.சி.சி) பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.      இந்த நிலையில் மீண்டும் காங்கிரஸ் மறு சீரமைப்பு குறித்தும், தோல்விகள் குறித்தும் குலாம் நபி ஆசாத் கருத்து தெரிவித்து உள்ளார். குலாம் நபி ஆசாத் கூறியதாவது:- "நாம் அனைவரும் தோல்விகளைப் பற்றி கவலைப்படுகிறோம், குறிப்பாக பீகார் மற்றும் இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து . தோல்விக்கு நான் தலைமையை குறை கூறவில்லை. நாம் அடிமட்ட மக்கள் தொடர்பை இழந்து விட்டோம். ஒருவர் தனது கட்சியை நேசிக்க வேண்டும்.


தேர்தல்களில்  5-நட்சத்திர கலாச்சாரத்தால் வெற்றிபெற முடியாது. இன்று தலைவர்களின் பிரச்சினை என்னவென்றால், அவர்கள் கட்சி யில் போட்டியிட இடம் கிடைத்தால் அவர்கள் முதலில் 5 நட்சத்திர  ஓட்டலை முன்பதிவு செய்கிறார்கள். கடினமான சாலை இருந்தால் அவர்கள் செல்ல மாட்டார்கள். நேரம் கடைபிடிப்பதும் 5- நட்சத்திர கலாச்சாரத்தால் கைவிடப்பட்டது. இது போன்றவைகளால் ஒருவர் தேர்தலில் வெற்றி பெற முடியாது.

எங்கள் கோரிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை. எங்கள் பெரும்பாலான கோரிக்கைகளுக்கு அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். அவர்கள் ஒரு தேசிய மாற்றாக  கட்சியை புதுப்பிக்க விரும்பினால் எங்கள் தலைமை தேர்தல்களை நடத்த வேண்டும்.

 கடந்த 72 ஆண்டுகளில் கட்சியின் மதிப்பு குறைந்து வருகிறது.  கடந்த இரண்டு பதவிக் காலங்களில் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட இல்லை. ஆனால் லடாக் மலைக் கவுன்சில் தேர்தலில் 9 இடங்களை காங்கிரஸ் வென்றது என கூறினார்.


கருத்துகள் இல்லை: