: பிலிப்பீன்ஸ் வரை புட்டு, தாய்லாந்து வரை அப்பம்.
"இடியப்பம் (ஒடியப்பம் or string HOPPAH) என்று எப்படி பெயர் வந்தது" என்பதை ரூம் போட்டு ஜோசித்தவர்கள் பலர் உண்டு. சில நாட்களாக இடியப்பம் , புட்டு, இட்லி (இட்டலி) பற்றிய விவாதங்கள் நடந்தன. இந்த பதிவு வழக்கம் போல ஆய்வுகள் செய்தும் சொந்த அனுபவங்களை வைத்தும் எழுதப்படுகிறது. இது வெறும் விக்கிப்பீடியாவின் தமிழாக்கம் அல்ல. விக்கிப்பீடியாவே திருத்திக்கொள்ள வேண்டிய ஒரு பதிவு.
முதலில் தென் கிழக்காசியா நாடுகளில் அப்பம், புட்டு மற்றும் இடியப்பம் போன்ற உணவுகள் எப்படி அழைக்கப் படுகின்றது என்பதைப் பார்ப்போம்.
புட்டு (puttu)
இந்தோனேசியாவில் putu bampu (bambu = bamboo or மூங்கில்) என்று அழைக்கப்படுகிறது. அதே வார்த்தை பிளிப்பீன்சில் puto bumbong என்று அழைக்கப்படுகிறது. ஆனால் நம்மைப்போல் அல்லாமல் இங்கு புட்டு என்பது ஒரு இனிப்புப் பண்டம். தேங்காய்ப்பூ, தேங்காய்ப்பால் மற்றும் சக்கரை போட்டு சாப்பிடுவார்கள். பிளிப்பீன்சில் மரவள்ளிக் கிழங்கு மாவு அல்லது இராசவள்ளிக் கிழங்கு மாவை அரிசி மாவுடன் கலந்து பயன்படுத்துவர்.
பிலிப்பீன்ஸ் உட்பட இந்தோனேசிய, மலேசியா சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் புட்டு என்னும் பெயரில் ஆவியில் அவிக்கப்படும் மேலும் பல உணவுகள் உள்ளன .
இடியப்பம்
இடியப்பம் பிலிப்பீன்சில் இல்லாது விட்டாலும் இந்தோனேசிய, மலேசியா சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் putu mayam (mayang = துருவிய தேங்காய்ப்பூ ) என்று அழைப்பார்கள். வியட்னாம் மற்றும் பர்மா போன்ற நாடுகளிலும் எம்மைப் போன்றே இடியப்பம் தயாரிக்கிறார்கள்.
அப்பம்
ah-boh என்பது பர்மாவில் அப்படியே எமது அப்பமே.
இந்தோனேசியாவில் Apem Selong (அப்பம் சிலோன்) என்பது ஓரளவுக்கு எமது அப்பம் போன்றதே. Apem balik என்பது இப்போது மலேசியா இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து வரை பிரபல்யம் ஆனது. Balik என்றால் திருப்புதல் அல்லது திரும்புதல். அது உண்மையில் சீனர்களது pan cake ஆனால் தமிழ் மற்றும் மலே மொழிகள் கலந்த வார்த்தைகள். மேலும் எமது குழி அப்பம், பணியாரங்கள் போன்ற வெவ்வேறு வடிவங்களிலும் வர்ணங்களிலும் அப்பங்கள் உண்டு.
இடியப்பம் என்று எப்படி பெயர் வந்தது ?
Quora.com இல் பெறப்பட்ட "தோயப்பம் மற்றும் ஊத்தப்பம்" ஆகிய ரெண்டு வார்த்தைகள் மட்டுமே தேடலுக்கு பெரும் உதவியாக இருந்தன.
[ஊத்தப்பம் = ஊத்து + அப்பம்.
தோயப்பம் - தோய் + அப்பம்.]
ஆமாம், தோசையை "தோயப்பம்" என்றே அழைத்துள்ளார்கள். இதனை 1848இல் அமெரிக்கன் மிசனரிகள் மூலம் வெளியான தமிழ் அகராதியில் காணமுடியும். தோய்த்தல் என்பது ஊறவிடுதல், புளிக்க வைத்தல் என்றும் அர்த்தம் கொள்ளமுடியும். தோய்த்து சாப்பிடுதல் மற்றும் ஊறுகாய் போடுதல் ஆகியன சிறந்த உதாரணங்கள்.
அப்பம் மற்றும் அப்பளம் ஆகிய சொற்கள் "அப்புதல்" என்னும் சொல்லில் இருந்தே வந்திருக்க முடியும் என்று நம்பும் அளவுக்கு உள்ளது. அப்புதல் என்பது பிரட்டுதல், பூசுதல் மற்றும் தடவுதல் என்றெல்லாம் அர்த்தப்படும்.
இடியப்பம் (இடி + அப்பம்)
இடியப்பத்துக்கு நூல் புட்டு, நூல் அப்பம் என்றெல்லாம் பெயர்கள் இருந்தாலும் "ஓடியப்பம்" என்றும் ஒரு பெயர் உண்டு. இதை 1848இல் வெளியான அதே தமிழ் அகராதியில் காணமுடியும். இடித்தல், இடிதல், ஒடிதல் (ஒடியல்), மற்றும் உடைத்தல் போன்றவை ஒத்தகருத்துச் சொற்களே. தோயப்பம் (தோசை), ஊத்தப்பம் மற்றும் அப்பம் வரிசையில் இடியப்பமும் இணையக்காரணம் அதை தட்டையாக வடித்து எடுப்பதாகும்.
ஆனால் புட்டு அப்படியல்ல. அதுமட்டும் அல்லாமல், இலங்கையில் நாம் "வறை" என்று அழைக்கும் உணவுகளை தமிழ்நாட்டில் புட்டு என்றே அழைக்கின்றனர். இரத்த புட்டு, வாழைக்காய் புட்டு மற்றும் சுறா புட்டு ஆகியன சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும். ஆகவே புட்டு என்பது செய்முறையின் ஒரு வடிவமாக இருக்கக்கூடும்.
ஆங்கித்தில் அப்பத்தை Hopper என்றும் இடியப்பத்தை String Hopper என்றும் அழைக்கின்றனர். குறிப்பாக இலங்கையில் இருந்தே இந்த சொல் வந்ததாக நம்பப்படுகிறது.
Hoppah / not Hopper
Hopper என்று ஆங்கிலத்தில் அழைத்துக் கொள்வது அர்த்தம் அற்றது. அது உண்மையில் பாயும் பூச்சிகளையும் (grasshopper), ஆலைகளில் உள்ள இயந்திரங்களில் இணைக்கப்பட்டுள்ள பெரிய புனல் போன்ற அமைப்புகளையுமே குறிக்கும்.
ஆப்ப என்ற சொல்லை ஆங்கில உச்சரிப்பில் Hoppah என்றே அழைக்கப்பட்டது. இதற்கு சான்றாக 1862 இல் வெளியான Miron Winslow அவர்களின் தமிழ் - ஆங்கில அகராதி உட்பட வேறு சில பழமைவாய்ந்த ஆங்கில வெளியீடுகளும் உள்ளன. Miron Winslow அவர்கள் யாழ்ப்பாணத்தில் உடுவில் மகளிர் கல்லூரியை நிறுவி அதிபராக கடமையாற்றிய Harriet Winslow அவர்களின் கணவராவார். Miron Winslow அவர்கள் முன்னர் யாழ்ப்பாணக் கல்லூரியானது Batticotta Seminary யாக இருந்த காலத்தில் அங்கும் கடமையாற்றி இருந்தார். ஆனால் பெரும்பாலான காலத்தை சென்னையிலேயே (Madras Christian College) கழித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்த பதிவு வெறும் Facebook போஸ்ட் மட்டுமே. ஆய்வுக்கட்டுரை அல்ல. பிழைகளை சுட்டிக்காட்டவும்.
உடன்படுவீர்களானால் share பண்ணவும்.
நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக