செவ்வாய், 24 நவம்பர், 2020

கேரளாவில் போலீசாருக்கான கூடுதல் அதிகார உத்தரவு தற்காலிகமாக ரத்து - பினராயி விஜயன் நடவடிக்கை

thinathanthi :சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியதால், போலீசாருக்கான கூடுதல் அதிகார உத்தரவை கேரள முதல்வர் பினராயி விஜயன் தற்காலிகமாக ரத்து செய்துள்ளார். திருவனந்தபுரம், 

கேரளாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்களை கட்டுப்படுத்தும் வகையில், போலீசாருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்று இந்த சட்ட திருத்தத்துக்கு சொந்த கட்சியில் இருந்தும் மற்றும் பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. முதல்-மந்திரி பினராயி விஜயன், விரிவான விளக்கம் அளித்தும், அவருடைய கருத்தை மேலிட தலைவர்கள் ஏற்கவில்லை. இதையடுத்து அந்த சட்ட திருத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக முதல்-மந்திரி பினராயி விஜயன் நேற்று அறிவித்துள்ளார்.


 “இந்த சட்டம் தொடர்பாக சட்டசபையில் விரிவாக கலந்துரையாடப்படும். இந்த சட்டம் தொடர்பாக அனைவரது கருத்தும் கேட்கப்படும்” என அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால் “இந்த சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளித்துவிட்டதால் முதல்-அமைச்சரின் அறிவிப்பு இதை தடை செய்யாது. இந்த சட்டத்தை உடனடியாக திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் கேரள அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது

கருத்துகள் இல்லை: