கொரோனா காலத்தின் மிகப்பெரிய கொடுமை என்னவென்றால், வெளிப்படையாகப் பேச முடியாத விவாதங்களில் கண்டிப்பாக நம் நிலைப்பாட்டை மட்டும் எடுத்துச் சொல்வதுதான். நான் விளக்கங்களை விவரிக்கவிரும்பவில்லை. ஏனெனில் ஒவ்வொரு சொற்றொடரும் பல உள் விவாதங்களை எழுப்பும். அதை முகநூலில் ஒற்றை எதிர் தரப்புடன் விவாதிக்க முடியாது. மற்ற தரப்புகள் உள்ளே வரும். விவாதம் திசைமாறும் ஆபத்தும் உண்டு .
நாங்கள் ஈழத் தமிழர்களை ஆதரித்தவர்கள். அவர்களது உரிமைப் போருக்குத் துணை நின்றவர்கள். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை மாவீரன் என்று கொண்டாடியவர்கள். அவர்கள் மீதான குறைகள் பேசப்பட்டபோது அது உண்மையாக இருக்காது என்று நம்பியவர்கள்.
ஈழ விடுதலைப் போராட்டங்களுக்கான ஆதரவுக்காக இழப்புகளை விரும்பி ஏற்றுக் கொண்டவர்கள்.வேலையை இழந்தவர்கள். இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கையைத் தொலைத்தவர்கள். சொத்துக்களை அழித்து பொருளாதார உதவி செய்தவர்கள். அதற்காக தற்கொலை செய்து கொண்ட எங்கள் இளைஞர்களின் இழப்பை ஈடு செய்ய முடியாத கையறு நிலைக்கு ஆளானவர்கள்.
அதனால் சிதைந்து போன குடும்பங்களை சீர்படுத்த முடியாமல் தவித்தவர்கள்...அதற்கு மேல் எழுத முடியவில்லை...நீர்த்திரை மறைக்கிறது.
இவ்வளவும் செய்த நாங்கள் எங்கள் சொந்த உழைப்பில் கிடைத்த வருமானத்தை எங்கள் பெற்றோர் பாடுபட்டு சேர்த்த சிறு சேமிப்பை தமிழ் இன உணர்வினால் கூட்டங்களில் பேசும்போது பொதுமக்கள் மாலைக்கு பதிலாக அன்பளிப்பாக கொடுத்த சிறு தொகைகளைக்கூட சேர்த்து வைத்து உதவி செய்தோம் . அவர்களிடம் இருந்து நாங்கள் எந்த ஆதாயத்தையும் எதிர்பார்த்ததில்லை.
இப்படியாக எங்களால் ஆதரிக்கப்பட்டவர் விடுதலைப்புலிகளின் தலைவர் பிராபகரன்.
சரி , இந்த உதவிகளை செய்வதற்கு எங்களை தகுதியாக்கியவர்கள் யார் .?
பார்ப்பனர்கள் மட்டுமே அறிவாளிகள் என்ற பொய்மையை உடைந்தெறிந்து அவர்களை நமது போட்டியாளர்களாக்க் கருதும் தன்னம்பிக்கையை, சுயமரியாதையை, பெண்ணுரிமையை ,சாதி ஒழிப்பை எங்கள் மூளையில் ஏற்ற சாகும் வரை ஓயாது உழைத்த தந்தை பெரியார்.
இந்தியை தமிழ்நாட்டுப் பள்ளியில் நுழைய விடாமல் தடுத்து கல்வியை எங்களுக்கு எளிதாக்கிக் கொடுத்து , “இது தமிழ்நாடு “ என்று சொல்லிக் கொள்ளும் அடித்தளத்தை ஆட்சி மூலமாக உருவாக்கிய பேரறிஞர் அண்ணா.
தமிழ்நாட்டின் கோடிக்கணக்கான குடும்பங்களில் ஆசிரியர் பணிகள் தொடங்கி பேராசிரியர்களாக, அரசு ஊழியர்களாக, மருத்துவர்களாக, துணை மருத்துவப் பணியாளர்களாக, பொறியாளர்களாக, பொருளியல் மேதைகளாக, ஆட்சித்துறை அதிகாரிகளாக, பல்துறை நிர்வாகப் பணியாளர்களாக, பதிப்பாளர்களாக, பத்திரிகையாளர்களாக, ஊடகத்துறையில் அசைக்க முடியாத உயர் இடங்களை அடைந்தவர்களாக, கணினி என்ற கம்ப்யூட்டர் கல்வி மூலம் உலகின் அத்தனை நாடுகளையும் கண்டு வரும் வாய்ப்பை எளிய தமிழ்க் குடும்பங்களுக்கும் அளித்த கலைஞர் அவர்கள்.
நாம் ஆதரித்த ஒரு போராளித் தலைவரை
நம்மை உருவாக்கிய தலைவர்களோடு ஒப்பிடுவதை
ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
அப்படிப் பேசுகிறவர்கள் அறியாமையால் செய்தால்
புரிந்து கொள்வார்கள். ஆதாயதிற்காக செய்தால் திருந்த மாட்டார்கள்.
அதேபோல் முகநூல் பதிவிலும் பின்னூட்டத்திலும்
திராவிட இயக்கத்தை அவமதிப்பதற்காக திட்டமிட்டு
நமது பொறுமையை சோதிக்கும் அளவிற்குப் போகிற
வன்மவாதிகளுக்கு திமுக வினர் முன்வைக்கும்
பிரபாகரன் மீதான விமர்சனம் துளியும் வலிக்காது.
ஏனென்றால் அவர்களுக்கு வரலாற்றை அறிவதை விட
திராவிட இயக்கத்தை எதிர்ப்பதுதான் முக்கிய வேலை.
மாறாக மேலே இரண்டாவது பத்தியில் கூறப்பட்டுள்ள
நல்லவர்களுக்குதான் வலிக்கும்.
திராவிட இயக்கத்தை அவதூறு செய்பவர்களின்
நோக்கமும் அதுவே.
சிந்தித்து செயல்படுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக