இதில் 1050 பேரின் வாக்கிற்காக இரு அணிகளும் நட்சத்திர ஓட்டல்களில் மது விருந்துகள் நடத்தின!
இது குறித்து இந்த வட்டாரத்தில் பேசிய போது ஒவ்வொரு குழுவும் தலா 10 கோடி செலவழித்ததாகக் கூறினர். அதுவும் தங்களுக்கு ஓட்டுப்போடுவார்கள் என்று நம்பிய தலா 400 பேரை தக்கவைக்கவே இத்தனை செலவாம்! இதில் மற்ற சில பெரிய தயாரிப்பாளர்களுக்கு பணமோ,பொருளோ தேவைப்படவில்லை.
அப்படியானால் அவர்கள் அவ்வளவு நேர்மையாளர்களா என்றால், அப்படி சொல்லமுடியாது. அவர்கள் எதிர்பார்ப்புகள் வேறு! அந்த எதிர்பார்ப்புகளுக்கு உத்திரவாதம் பெற்றுக் கொண்டு அவர்கள் ஓட்டளித்தனர்.
சரி, இப்போ கணக்கு போடுவோம். 4,00 ஓட்டுகளைப் பெற 10 கோடி என்றால், ஒவ்வொரு ஓட்டுக்கும் ஒவ்வொரு குழுவும் செய்த செலவு ரூ இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம்!
அதாவது பொதுத் தேர்தலில் ஒரு ஓட்டுக்கு அரசியல் கட்சிகள் ஆயிரம், இரண்டாயிரம் செலவு செய்கிறார்கள் என்றால், இவர்களோ கொழுத்த பணக்காரர்கள் என்பதால் அதை காட்டிலும் 100 மடங்கு அதிகமாக செலவு செய்கின்றனர். கமலஹாசனும் ரஜினிகாந்தும் இப்படி தாங்கள் அங்கம் வகிக்கும் ஒரு அமைப்பில் செலவு செய்வது பற்றி கண்டிக்கவே இல்லை. தடுக்க எந்த ஒரு சிறுமுயற்சியும் செய்யவில்லை.
கமலஹாசன் அமைதியாக வந்து ஓட்டுப் போட்டு சென்றார். ரஜினிகாந்த் ஓட்டுபோடக் கூட போகவில்லை.
கமலஹாசன் பொது தேர்தலில் மக்கள் காசுவாங்கி ஓட்டுப் போடுவது பற்றி வாய்கிழியப் பேசி வண்டிவண்டியாக அட்வைஸ் செய்கிறார். ஆனால்,தான் எந்த துறையில் 60 ஆண்டுகாலமாக அங்கம் வகிக்கிறாரோ,எந்த துறை அவருக்கு பிழைப்பு தந்ததோ,எந்த துறை அவருக்கு பெரும் பணமும்,புகழும்,செல்வாக்கும் தந்ததோ அந்த துறையின் ஆகப் பெரிய முறைகேடுகள் பற்றி வாய் திறக்க மறுக்கிறார்.
ரஜினிகாந்தோ, ’’சிஷ்டம் சரியில்லை’’ என்று அடிக்கடி பேசுகிறார். ஆனால்,தன்னுடைய துறையின் சிஷ்டம் கெட்டுக் குட்டிச்சுவாராகி கிடக்கிறது. அங்கு தனக்கான ஓட்டைப் போடும் அடிப்படை கடமையைக் கூட செய்ய மறுக்கிறார். ஏன் இவர்கள் இருவரில் ஒருவர் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு நிற்கலாமே! அல்லது நியாயமானவர்களை நிற்க செய்து ஆதரவளிக்கலாமே!
இந்த இரண்டு பெரிய நடிகர்கள் கால்ஷீட்டிற்காக தவம் கிடப்பவர்கள் தானே, பெரும்பாலான தயாரிப்பாளர்கள்! இந்த துறையின் இந்த ஒழுங்கீனத்தை திருத்தவோ, மாற்றவோ இத்தனை வருடங்களில் எந்த சிறு துரும்பையாவது எடுத்துப் போட்டிருப்பார்களா இவர்கள் இருவரும்!
10 கோடி செலவழிக்கும் பதவியால் என்ன லாபம்?
லாபம் இல்லாத விவகாரத்திற்காக செலவு செய்யமாட்டார்கள் தயாரிப்பாளர்கள்! ’’10 கோடி செலவழித்துவிட்டு ஐம்பது கோடி அள்ளிவிடலாம்’’ என்ற நம்பிக்கையிலே தான் இவர்கள் செலவு செய்கின்றனர்.
எந்தப் படம் எப்போது ரிலிஸ் செய்வது? அதில் எந்த தயாரிப்பாளர் படத்திற்கு முக்கியத்துவம் தருவது? எந்த படத்தை தாமதப்படுத்துவது? என்பதில் இவர்களின் பங்களிப்பு உள்ளது! மேலும் எந்த பட தயாரிப்பாளருக்காவது பிரச்சினை ஏற்பட்டால் அந்த பிரச்சினைக்கு பஞ்சாயத்து செய்யும் வாய்ப்பும் இவர்களுக்கு வந்துவிடுகிறது.
இதில் நியாயமான ஒருவர் இருக்கும் பட்சத்தில் ஒரு முறையான சிஸ்டம் உருவாக்கி, அந்த சிஸ்டப்படி நடக்கிறதா என்று கண் காணித்தால் போதுமானது. ஆனால், இங்கே, பணபலம்,செல்வாக்கு உள்ளவர்களுக்காக சிஸ்டத்தை வளைத்து,நெளித்து மாற்றி அமைத்து முறைகேடு செய்வதற்காகவே இவர்கள் பொறுப்புக்கு வருகின்றனர்.
தங்களுக்காக இந்த முறைகேட்டை செய்யதக்கவர்களையே இவர்கள் பொறுப்புக்கு தேர்வும் செய்கின்றனர். அப்படி முறைகேட்டை திறமையாக செய்யும் போது இவர்களுக்கு தக்க கையூட்டும் தருவார்கள்!
இப்போது ரஜினி,கமல்,விஜய் படங்கள் எல்லாம் பெரிய பட்ஜெட் படங்கள் சுமார் 100 அல்லது 150 கோடிக்கு மேல் பட்ஜெட் கொண்ட படங்கள்! அந்த படங்களுக்கான ரிலிஸ் உள்ளிட்ட சிக்கல்களை முறைப்படுத்தி கொடுக்கும்போது இவர்களுக்கு கணிசமாக பணம் கிடைக்கிறது. ’’ஏன் உனக்கு தர வேண்டும்’’ என்று அவர்களும் கேட்பதில்லை. ’நாம் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருக்கிறோம் இதையெல்லாம் எதிர்பார்க்கலாமா…’ என்று இவர்களும் நினைப்பதில்லை. எவ்வளவு செலவழிச்சிட்டு வந்திருக்கிறார் ’கையூட்டு தருவது நம் கடமை’’ என தயாரிப்பாளர்களும், ’’பெறுவது என் உரிமை என இவர்களும் நினைக்கும் நிலையில் தான் திரையுலக சிஸ்டம் உள்ளது!
ஆக, இவர்களே தங்களுக்கு தோதான ஒரு ஊழல்வாதியை தேர்ந்தெடுத்து உட்கார வைக்கின்றனர். ஒரு யோக்கியன் வருவது தான் இவர்களின் பிரச்சினையே! எல்லாம் முறைப்படி தான் நடக்கும் என்று சொல்லும் ஆட்கள் இவர்களுக்கு தேவையே இல்லை. தமக்காக சிஸ்டத்தை மீறுபவர் தான் தேவை. இப்படித் தான் பல வருடங்களாக நடந்து கொண்டுள்ளது.
விஜய்யின் அப்பா சந்திரசேகர் ஆறு தயாரிப்பு நிறுவனங்களை வைத்துள்ளார். இவர் தலைவராக இந்த காலத்தில் தான் சன் டிவிக்கும் தயாரிப்பாளர் சங்கத்திற்குமான ஒரு உடன்பாட்டை யார் கண்ணிலும் தெரியாமல் ஒளித்து வைத்துவிட்டார். அந்த ஒப்பந்தப்படி தயாரிப்பாளர்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய- சன் டிவி தயாரிப்பாளர்களுக்கு தந்திருக்க வேண்டிய பணத்தை ஏன் வசூலிக்காமல் விட்டார்.
அதன் பின்னணியில் அவருக்கும் அந்த நிறுவனத்திற்கும் இடையில் நடந்த ’டீலிங்’ என்ன என்பது தான் இன்றும் பல தயாரிப்பாளர்கள் ஆத்திரத்துடன் வைக்கும் கேள்வியாகும்! இதில் ஒன்றல்ல, இரண்டல்ல, சில நூறு கோடிகளுக்கு முறைகேடுகள் நடந்துள்ளன என்பது தான் வேதனை. அதன் மூலம் ஏற்பட்ட பல பின்னடைவுகளிலில் இருந்து இன்னும் கூட தயாரிப்பாளர் சங்கம் மீளவில்லை என்று சொல்வர்களும் உள்ளனர். சன் நிர்வாகத்துடன் போட்ட ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்திருந்தால் மற்ற தொலைகாட்சி நிறுவனங்களுடனும் சுமூகமாக ஒப்பந்தம் போட்டிருக்கலாம். இதன் மூலம் இன்னும் பல நூறுகோடி ரூபாய் தயாரிப்பாளர்களுக்கு கிடைத்திருக்கும்.
நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத்திற்கு தலைவராக இருந்த போது தமிழகத்தில் லோக்கல் கேபிள் தொலைகாட்சி உரிமையாளர்களை அழைத்து மீட்டிங் நடத்தினார். தமிழகத்தில் சுமார் ஆயிரம்பேர் லோக்கல் கேபிள் சானல் நடத்துகின்றனர். இவர்கள் திரைத்துறையை நம்பித் தான் தொழில் செய்கின்றனர். அவர்களிடம் பாடல்கள், நகைச்சுவை காட்சிகள் மற்றும் படங்களை ஒளிபரப்ப ஒரு நியாயமான கட்டணம் வசுலிப்பதென்று முடிவாகியது! அவர்களும் மனப்பூர்வமாக ஒத்துக் கொண்டனர். அந்தப்படி அவர்களிடம் மாதாமாதம் ரூ 70 லட்சம் வசூலிப்பதென்று தீர்மானம் நிறைவேறியது. உடனே விஷால் அதிரடியாக அப்படி பணம் வசூலிக்கும் பொறுப்பை ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கலாம் என்று தன்னிச்சையாக முடிவெடுத்து தந்துவிட்டார். அதனால்,இன்று வரை மாதாமாதம் ரூ 70 லட்சமாக கிடைத்திருக்க வேண்டிய பணம் தயாரிப்பாளர் சங்கத்திற்கு கிடைக்கவேயில்லை. அதை அந்த நிறுவனத்திடமிருந்து மீட்கும் சட்ட போராட்டம் நடக்கிறது. இதில் விஷால் பல கோடிப்பணம் கையாடல் செய்துவிட்டார் என்று இன்னும் பல தயாரிப்பாளர்கள் வேதனைப்படுகின்றனர்.
கலைத்துறை என்பது மக்களிடையே மிகப் பெரிய தாக்கத்தை அவர்களின் வாழ்வில் ஏற்படுத்தும் ஒரு முக்கிய அமைப்பு! கருத்துள்ள சினிமா பாடல்கள் கூட சிலரது வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளன! கருத்தான படங்கள் வழியே தங்கள் வாழ்க்கையையே கட்டமைத்துக் கொண்ட பலரை நாம் அறிவோம். அன்பு,பாசம், நட்பு,காதல்,தியாகம்,குடும்ப பொறுப்புணர்வு ஆகியவற்றை சினிமாவில் மக்கள் பெற்ற காலம் அன்றும்,இன்றும் இல்லாமலில்லை!
சினிமாவை சமூக மாற்றத்திற்க்கு, நல்லதொரு மாற்றத்திற்கு பயன்படுத்த வந்து அழிந்து போன நூற்றுக்கணக்கான தயாரிப்பாளர்கள் அன்றும் இருந்தனர்.இன்றும் இருக்கத் தான் செய்கின்றனர்.சிறிய பட்ஜெட்டில் இப்படிப்பட்டவர்கள் எடுக்கும் படங்களுக்கு தியேட்டர்களை பெற்றுத் தருவதில் இந்த தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் ஒத்துழைப்பு தரமாட்டார்கள்.அக்கரை காட்டமாட்டார்கள். அப்படிப்பட்ட தயாரிப்பாளர்கள் திரைத்துறையில் இயங்கமுடியாமல் போவதற்கு தற்போது போல பெரும்பணம் செலவழித்து பொறுப்புக்கு வருகிற நிர்வாகிகளே காரணம்!
இப்படிப்பட்ட நிர்வாகத்துடன் ஒத்திசைந்து போகக் கூடிய ரஜினிகாந்தும், கமலஹாசனும்,விஜய்யும் நாட்டுக்கு பொறுப்பேற்று வந்து நம் நாட்டின் தலை எழுத்தையே மாற்றிவிடுவார்கள் என்று நம்புவதைப் போன்ற முட்டாள்தனம் உலகில் வேறொன்றுமே இல்லை!
அந்தந்த காலங்களில் ரஜினிகாந்தை வைத்து படமெடுத்த, கமலஹாசனைவைத்து படமெடுத்த, விஜய்யை வைத்து படமெடுத்த தயாரிப்பாளர்களில் சிலர் இன்று அன்றாட சாப்பாட்டிற்கே அல்லாடும் நிலையில் உள்ளனர். அவர்களுக்கு ரஜினியோ, கமலோ,விஜய்யோ தங்கள் பாக்கெட்டிலிருந்து ஒரு ரூபாய்கூட தர வேண்டியதில்லை.
’அறம்’ சாவித்திரி கண்ணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக