அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020, விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020,விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 ஆகியன கடும் அமளிக்கு இடையே செப்டம்பர் மாதம் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேறின. இவற்றை எதிர்த்தே இந்தப் போராட்டங்கள் நடக்கின்றன.
(இந்த சட்டங்களில் இருப்பது என்ன, அவை ஏன் எதிர்க்கப்படுகின்றன என இந்தக் கட்டுரையின் இறுதியில் விளக்கப்பட்டுள்ளது.)
டெல்லிக்குள் நுழைய முதலில் அனுமதி மறுப்பு; பின்னர் அனுமதி
கொரோனா வைரஸ் தொற்று விதிகள் காரணமாக டெல்லிக்குள் அவர்கள் நுழைய முடியாது என்று முதலில் தெரிவித்திருந்த டெல்லி காவல்துறை பின்பு அவர்கள் டெல்லி எல்லைக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் அமைதியான முறையில் போராட்டங்களை நடத்த வேண்டும் என்றும் வெள்ளியன்று தெரிவித்திருந்தது.
விவசாய சங்கங்கள் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திகளின்படி ஹரியானாவில் இருந்து சுமார் 50 ஆயிரம் விவசாயிகள் டெல்லிக்கு நுழைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் அந்த விவசாயிகள் அனைவரும் பஞ்சாப் மாநிலத்தவர்கள் என்றும் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்றும் ஹரியானா மாநில பாரதிய ஜனதா கட்சி முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
பஞ்சாப், டெல்லி முதல்வர்கள் விவசாயிகளுக்கு ஆதரவு
டெல்லியில் விவசாயிகள் நுழைவதைத் தடுக்கும் வகையில் காவல்துறை எடுத்துள்ள முயற்சியால் அங்கு ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று பஞ்சாப் மாநில காங்கிரஸ் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் இந்த வாரம் வலியுறுத்தியிருந்தார்.
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைநகரில் வந்து போராடும் விவசாயிகளுக்கு தேவையான உதவிகளைத் தாங்கள் மேற்கொள்வோம் என்று கூறியிருந்தார்.இந்தத் தகவலை அவரது ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டிருந்தது.
டெல்லி மாநில அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மற்றும் டெல்லி குடிநீர் வாரியத்தின் துணைத் தலைவர் ராகவ் சந்தா ஆகியோர் விவசாயிகளுக்கு உணவு, உறைவிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவார்கள் என்றும் ஆம் ஆத்மி கட்சி தெரிவித்திருந்தது.
பேச்சுவார்த்தைக்கு எப்போதுமே தயார் - இந்திய வேளாண் அமைச்சர்
பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் இந்திய விவசாய சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட பின்பு, டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் அந்த சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டமிட்டு வருகின்றனர்.
சன்யுக்த் கிஷான் மோட்சா எனும் விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு இந்த சட்டங்கள் தொடர்பான தங்கள் குறைகளை வெளிப்படுத்துவதற்கு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் டெல்லியில் தாங்கள் கூடிப் போராட்டம் நடத்துவதற்கான இடம் முடிவு செய்யப்பட வேண்டும் என்றும் பிரதமருக்கு தாங்கள் கடிதம் எழுதியிருப்பதாகவும் சமீபத்தில் தெரிவித்திருந்தது.
இந்த சூழ்நிலையிலேயே டெல்லியை நோக்கி வந்த விவசாயிகள் முள் கம்பிகளைக் கொண்ட தடைகள், சாலைகளில் தோண்டப்பட்ட குழிகள் உள்ளிட்டவற்றின் மூலம் தடுக்கப்பட்டனர். ஹரியானாவில் இருந்து டெல்லிக்கு நுழைவதற்கான தேசிய நெடுஞ்சாலைகளும் மூடப்பட்டன.
"இந்திய அரசு எப்போதும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறது டிசம்பர் 3ஆம் தேதி அன்று பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாயிகள் சங்கங்களின் நாங்கள் அழைத்துள்ளோம். கோவிட்-19 நோய்த்தொற்று பரவல் மற்றும் குளிர் காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு விவசாயிகள் தங்கள் போராட்டங்களை கைவிட வேண்டும்," என்று இந்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார் என ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.
'விவசாய சட்டங்களைக் கைவிட வேண்டும்'
"எங்களிடம் ஆறு மாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்கள் உள்ளன. விவசாயிகளுக்கு எதிரான இந்த கறுப்புச் சட்டங்கள் கைவிடப்பட்ட பின்னரே நாங்கள் எங்கள் போராட்டங்களை கைவிடுவோம்," என்று டெல்லி - ஹரியானா எல்லையிலுள்ள சிங்கு சாவடியில் இருக்கும் ஒரு போராட்டக்காரர் தெரிவித்ததாக ஏ.என்.ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
டெல்லியின் புறநகர் பகுதியில் உள்ள புராரி எனுமிடத்தில் போராட்டக்காரர்கள் கணிசமானவர்கள் கூடியுள்ளனர். அங்கு காவல்துறையினரும் அதிகளவில் குவிக்கப்பட்டு உள்ளனர்.
டெல்லி வந்து போராடும் விவசாயிகளின் தடுத்து வைப்பதற்காக டெல்லியில் உள்ள ஒன்பது விளையாட்டு மைதானங்களை தற்காலிக சிறைச்சாலைகளாக மாற்றுவதற்கு டெல்லி காவல்துறை கோரிய அனுமதியை வெள்ளிக்கிழமை அன்று டெல்லி மாநில அரசு நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.
விவசாய சட்டங்கள் என்னென்ன, அவை என்ன சொல்கின்றன?
முரளிதரன் காசி விஸ்வநாதன்
பிபிசி தமிழ்
மொத்தம் மூன்று சட்டங்கள். 1. அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020, 2. விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020, 3. விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020. இவை ஆங்கிலத்தில் முறையே Essential Commodities (Amendment) Act 2020, Farming Produce Trade and Commerce (Promotion and Facilitation) Act 2020, The Farmers (Empowerment and Protection) Agreement on Price Assurance and Farm Services Act 2020 என அழைக்கப்படுகின்றன.
அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டத்தை எடுத்துக்கொண்டால், இந்தியாவில் வெங்காயம், பருப்பு போன்ற பொருட்களின் விலை உயரும்போது அவற்றை ஏற்றுமதி செய்யவும் சேமித்து வைக்கவும் அரசு அவ்வப்போது கட்டுப்பாடுகளை விதிக்கிறது.
இப்போது வந்துள்ள சட்டத் திருத்தத்தின்படி இம்மாதிரி கட்டுப்பாடுகளை பின்வரும் சூழலில்தான் விதிக்க முடியும்: அதாவது, தோட்டப் பயிர்களைப் பொறுத்தவரை அவற்றின் விலை கடந்த 12 மாதங்களின் சராசரி விலையைவிட 100 சதவீதம் அதிகரிக்க வேண்டும். தானியங்களைப் பொருத்தவரை, கடந்த ஐந்து ஆண்டுகளின் சராசரி விலையைவிட 50 சதவீதம் அதிகரிக்க வேண்டும். அப்படி இருந்தாலும்கூட இந்தக் கட்டுப்பாடு உணவுப் பொருட்களைப் பதப்படுத்தும் நிறுவனங்களுக்குப் பொருந்தாது.
விளைபொருட்களை உற்பத்தி செய்யவும் சேமித்து வைக்கவும் வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லவும் விற்பனை செய்யவும் விவசாயிகளுக்கு முழு சுதந்திரம் இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் அளிக்கப்படும் என்கிறது மத்திய அரசு. இதனால், இந்தத் துறையின் பொருளாதாரம் மேம்பட்டு, நேரடி அந்நிய முதலீடு விவசாயத் துறையில் கிடைக்குமென மத்திய அரசு நம்புகிறது. உணவு விநியோகச் சங்கிலியில் தேவைப்படும் குளிர்பதன கிடங்குகள் போன்றவற்றைக் கட்டத் தேவைப்படும் முதலீட்டை இந்தச் சட்டம் எளிதாக்கும் என்பது இந்தச் சட்டத்தை ஆதரிப்பவர்களின் வாதம்.
இரண்டாவதாக உள்ள விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டத்தைப் பொருத்தவரை விவசாய விளை பொருட்களை மாநிலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எந்த இடத்திலும் வியாபாரமும் வர்த்தகமும் செய்ய வழிவகுக்கிறது. இதன் மூலம், மாநில அரசுகளால் இயக்கப்படும் விவசாய ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு வெளியிலும் பொருட்களை விற்க வழிசெய்யப்படுகிறது. இதனால், விவசாயிகளுக்கு தங்கள் உற்பத்தி பொருட்களுக்குக் கூடுதல் விலை கிடைக்குமென அரசு கூறுகிறது.
ஆனால், விவசாய வர்த்தகத்தின் மீது மாநில அரசு கொண்டிருக்கும் கட்டுப்பாடு இந்தச் சட்டத்தின் மூலம் இல்லாமல் போகிறது. வேறு மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள், மற்றொரு மாநிலத்தில் எங்கு வேண்டுமானாலும் வந்து பொருட்களை வாங்கிச் சொல்லலாம் என்பதால், ஒரு மாநிலத்தில் ஒரு பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டாலும், மாநில அரசால் ஏதும் செய்ய முடியாது என்ற அச்சமும் இருக்கிறது.
மூன்றாவது சட்டம், விலை உத்தரவாதம், விவசாய சேவைகள் ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020. விவசாயிகளுடன் எந்த மூன்றாவது நபரும் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள இந்தச் சட்டம் வழிவகுக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், விவசாய கான்ட்ராக்ட்களுக்கு இந்தச் சட்டத்தின் மூலம் சட்டரீதியான பாதுகாப்பு கிடைக்கும்.
மத்திய அரசைப் பொருத்தவரை இந்த மூன்று சட்டங்கள் மூலமும் விவசாயிகள் தங்கள் விலை பொருட்களுக்கு நல்ல விலையைப் பெற முடியும், கூடுதலான வர்த்தக வாய்ப்புகள் கிடைக்கும் என்கிறது. மேலும், நுகர்வோரும் வர்த்தகர்களும் பயனடைவார்கள். ஆகவே மூன்று தரப்பினருக்கும் பயனளிக்கக்கூடிய சட்டங்கள் இவை என்கிறது மத்திய அரசு.
இந்தியாவில் விவசாயம் என்பது மாநில அரசின் கீழ் உள்ளது. ஆகவே விவசாயம் தொடர்பாக இயற்றப்பட்டிருக்கும் இந்த மூன்று சட்டங்களும் மாநில அரசின் உரிமைகளைப் பறிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. மேலும், பெரிய விதை நிறுவனங்கள், கான்ட்ராக்ட் விவசாய நிறுவனங்கள், மிகப் பெரிய சங்கிலித் தொடர் சூப்பர் மார்க்கெட்களுக்கு ஏதுவாக இந்தச் சட்டங்களைக் கொண்டுவந்திருப்பதாக அவை குற்றம்சாட்டுகின்றன.
விவசாய ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களுக்கு வெளியிலும் விவசாயப் பொருட்களை விற்பனை செய்ய இந்தச் சட்டம் அனுமதிப்பது பல மாநிலங்களில் எதிர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக