Shalin Maria Lawrence - Vikatan : ஓரிடத்தில் பூக்களாலும், வண்ணக் காகிதங்களாலும் அலங்கரிக்கப்பட்ட மேஜை ஒன்றின் மீது வெள்ளை, நீல நிற கோடுகள் போட்டு பத்தாம் நம்பர் அச்சிடப்பட்ட ஜெர்சி ஒன்றை இயேசு சிலுவையில் தொங்குவதைப்போல் ஆணிகளால் அடித்து தொங்க விட்டு அதற்கு மாலை அணிவித்து கும்பிட்டு கொண்டிருந்தார்கள்.
கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் நெருங்கிய உறவினர் வீட்டு விசேஷத்திற்காக ஒரு காலை வேலையில் ராயபுரத்திற்கு பயணித்துக் கொண்டிருந்தோம். உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்கியிருந்தது. சமூக வலைத்தளங்கள் முழுக்க கால்பந்து போட்டிகளைப் பார்க்காதவர்கள்கூட தங்களைத் தாங்களே கால்பந்து ரசிகர்களாகக் காட்டிக்கொள்ள வேண்டிய சமூக நிர்பந்தத்தில் இருந்தனர். ஆகப்பெரிய சண்டைகள் வேறு. ஜெர்மனியா, பிரேசிலா என்று முட்டி மோதிக் கொண்டிருந்தார்கள். பல இடங்களில் ஆட்டத்துக்கு ஆட்டம் பெட்டிங் வேறு நடந்தது. அதை சாதாரணமானவர்கள் பார்த்தால் கால்பந்து ஏதோ மேல் தட்டு வர்க்க விளையாட்டோ என்று நினைத்து விடுவார்கள். அந்த அளவிற்கு அந்த விளையாட்டை சுற்றி ஒரு வர்க்க பூச்சை பூசி இருந்தார்கள். அதை ஒரு கவர்ச்சிகரமான விஷயமாக மாற்றியிருந்தார்கள்.
ஆனால், அதேநேரத்தில் எங்களின் வாகனம் மூலக்கொத்தளம் சிக்னலை தாண்டியதும்தான் அந்தக் காட்சியைக் காண நேர்ந்தது. சாலையெங்கும் பிளெக்ஸ் பேனர்கள் ஆங்காங்கே அடிக்கப்பட்டு, ட்ரம்ஸ் ,பறையோசையோடு இளைஞர்கள் விதவிதமான கால்பந்தாட்ட ஜெர்சிகளை அணிந்து கொண்டு நடனமாடிக் கொண்டிருந்தார்கள். எங்கே பார்த்தாலும் ஆயுதபூஜை ஏற்பாடுகளைப் போல் கால்பந்தை வைத்துக் கொண்டு விழாக்களை நடத்திக்கொண்டிருந்தார்கள். இன்னும் கொஞ்சம் நெருங்கிப்போய் பார்த்தால் ஓரிடத்தில் பூக்களாலும், வண்ணக் காகிதங்களாலும் அலங்கரிக்கப்பட்ட மேஜை ஒன்றின் மீது வெள்ளை, நீல நிற கோடுகள் போட்டு பத்தாம் நம்பர் அச்சிடப்பட்ட ஜெர்சி ஒன்றை இயேசு சிலுவையில் தொங்குவதைப்போல் ஆணிகளால் அடித்து தொங்க விட்டு அதற்கு மாலை அணிவித்து கும்பிட்டு கொண்டிருந்தார்கள். அந்த ஜெர்சி அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த உலக புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் மரடோனாவினுடையது.
ஆம்... அவர்கள் மரடோனாவின் ஜெர்சியைத்தான் கும்பிட்டுக் கொண்டிருந்தார்கள். மரடோனா அவர்களின் கடவுள்.
இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று, தெரிந்தவர்களின் மரணம் என்ற எவ்வளவோ அதிர்ச்சியான விஷயங்களை கடந்திருந்தபோதும் மரடோனாவின் மரணம் என்பது ஒரு நிமிடம் இந்த மனுஷியை கொஞ்சம் நிலைகுலைய வைத்தது.
என் தாத்தாவில் தொடங்கி அப்பா வரை எல்லோருமே கால்பந்தாட்ட வீரர்கள். அப்பா ஸ்டேட் ப்ளேயர். அப்பாவுக்கு இரண்டு மதம். ஒன்று கிறித்தவம் இன்னோன்று கால்பந்தாட்டம். கிறித்தவத்தை கூட சட்டென்று விட்டுக் கொடுத்துவிடுவார். ஆனால் கால்பந்தாட்டத்தை பற்றி தப்பித்தவறி கூட குறைத்துப் பேசினால் பிரச்னைதான். அவரின் மூச்சே ஃபுட்பால்தான்.
ஏன் எனப் பல முறை கேட்டிருக்கிறேன். ஒரே பதில்தான் வரும். ''கால்பந்தாட்டம் எனக்கு சமூக அந்தஸ்தை கொடுத்தது. நாங்கள் சேரியில் இருந்தவர்கள். நாங்கள் கால்பந்தாட்ட பயிற்சியில் இருந்தபோது அங்கே பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் எங்களுக்கு டாய்லெட் பக்கெட்டில் குடிக்கத் தண்ணீர் தருவார்கள். ஆனால், நாங்கள் மாநிலத்திற்காக ஆடியபோது சாதி பார்ப்பவன் கூட எங்களின் தோள் மேல் கை போட்டு அரவணைத்துக் கொண்டான். உயர் சாதி என்ற சொல்லிக்கொள்பவன் எங்கள் கைகளை நாடி வந்து குலுக்கினான். எங்களின் மாண்பை கால்பந்து மீட்டுக் கொடுத்தது'' என்பார்.
என் அப்பாவைப் போன்றே வடசென்னையின் பல ஆயிரம் இளைஞர்களுக்கு உலகின் வேறு எங்கோ ஒரு மூலையில் இருந்த மரடோனா என்கிற இளைஞர் உத்வேகத்தைக் கொடுத்தார். அவர்களின் மாண்பை மீட்டுக் கொடுத்தார்.
சேரிகளில் இருக்கும் இளைஞர்களுக்கு மிஷினரிகளின் மூலமாகவும், பள்ளிகளின் வாயிலாகவும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் மூலமாகவும் கால்பந்தாட்டம் அறிமுகம் செய்யப்பட்டாலும் அதன் மீது அவர்களுக்கு ஆர்வமும், வேட்கையும் வரவைக்க கூடிய ஒரு ஆட்டக்காரன் உலகத்தில் வேண்டும்தானே?
சாதி ரீதியாகவும், வர்க்க ரீதியாகவும் ஒடுக்கப்பட்டு, இகழ்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு தளர்ந்து போயிருக்கும் வடசென்னை இளைஞர்களின் மனதை கிளர்ந்தெழுந்து, முறுக்கேறச் செய்ய ஒரு மஹா அற்புத ஊக்க பானமாக எழுபதுகளில் வந்து குதித்தார் அர்ஜென்டினாவின் மரடோனா. வெறும் பதினாறு வயது இளைஞன் அவர். தன்னுடைய முதல் உலகத்தர கால்பந்தாட்ட மேட்சை ஆடும்போது உலகமே அதிசயித்து பார்த்தது. கால்பந்தாட்டத்திற்குத் தகுதி என்ற சொல்லப்பட்ட உடல்வாகு கொஞ்சம் கூட கிடையாது. அதீத கோபம்... யாரின் பாணியையும் பின்பற்றாத சுய சிந்தனை ஆட்டக்காரன், கெட்டிக்காரன். தலைக்கனத்தோடு திரியும் ஐரோப்பிய ஆட்டக்காரர்களை திணறவிட்டு அடிப்பதில் வல்லவன். dribbling என்ற சொல்லப்படுகிற, கால்பந்தை கோல் போஸ்ட்டை நோக்கி வெகு தூரத்தில் இருந்து, எதிரணியினர் எத்தனைப் பேர் சூழ்ந்தாலும், சுத்து போட்டாலும் அவர்களை ஏமாற்றி, திசைமாற்றி தனி ஒருவனாய் கோல் போடுவதில் பெரிய கை. அதுவும் மேட்சுகளில் என்னை வெகுவாக கவர்ந்தது அவரின் எனர்ஜிதான். மரடோனா ஒரு ஆள் தானா, உள்ளுக்குள்ளே பல பேரா எனக் கேட்கக்கூடிய வகையில் உடல் சக்தி அவரின் பலம்.
இதெல்லாம் மரடோனாவிற்கு எப்படி வந்தது என்ற கேட்பதற்கு பதிலாய் எங்கிருந்து வந்தது என்ற கேட்பதுதான் சரி.
லத்தீன் அமெரிக்க நாடான அர்ஜென்டினா ஸ்பெய்னின் காலனி ஆதிக்கத்திற்கு பிறகு அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு. அதன் தலைநகர் பியூனஸ் ஏர்ஸ் பணக்காரர்கள் அதிகமாக வந்து தங்கிப்போகும் காஸ்மோபாலிட்டன் நகரம். வெளியில் இருந்து பார்த்தால் முன்னேறியது போல மின்னும் அதன் பின்னணி இருட்டில் கிடப்பது பல சேரிகள். அந்த சேரிகளில் ஏழ்மையில் ஒடுக்கப்பட்டு வசிப்பது அதன் பூர்வகுடி மக்கள். அந்த பூர்வகுடி சேரி வாழ், உழைப்பாளி பெற்றோருக்கு பிறந்தவர்தான் டியாகோ மரடோனா.
கிட்டத்தட்ட சிங்கார சென்னையின் சேரிகளுக்கும், பியூனஸ் ஏர்ஸ் சேரிகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அங்கேயும் நில அபகரிப்பு, பூர்வகுடிகள் நகரத்தில் இருந்து வளர்ச்சி என்கிற பெயரில் துரத்தப்படுவது, கல்வி பாதியில் நிற்பது, குழந்தை தொழிலாளர்கள், வன்முறை, தண்ணீர் பஞ்சம், மழை நீர் வீடுகளுக்குள் புகுவது என்ற அரசுகளின் ஒடுக்குமுறையும், அலட்சியமும் அதிகம். அங்கே வாழ்ந்துவிட்டால், உலகில் எங்கேயும் வாழ்ந்து விடலாம். விதி மீறல்களும், ஒடுக்குமுறைக்கு எதிரான போர்க்குணமும், எகிறி அடிக்கும் வல்லமையும், வேட்கையும் அங்கிருப்பவர்களுக்கு அசாத்தியமாக வரும். அந்த பலத்தை அவர்கள் எங்கே உபயோகிக்கிறார்கள் என்பதைப் பொறுத்து வெற்றி அமையும். அப்படி சேரியில் கற்றுக்கொண்ட அத்தனை வித்தைகளையும் மரடோனா கால்பந்தாட்ட களத்தில் இறக்கினார். தான் வாழ்நாளில் சந்தித்த அத்தனை அவமானங்களையும், வலிகளையும் அங்கே சுழன்று கொண்டிருக்கும் பந்தில் வைத்து ஓங்கி அடித்தார். கோல்... அதோ கோல்!
அந்த வருடம் மேற்கு ஜெர்மனியை வென்றது மரடோனாவின் அர்ஜென்டினா. உலக கோப்பையைக் கைப்பற்றியது. வடசென்னையின் மக்கள் வானொலியில் அதைக் கேட்டு ஆர்ப்பரித்தனர். அர்ஜென்டினாவின் மரடோனா வடசென்னையின் மரடோனாவாக மாறிப் போனார். இங்கிருக்கும் ஒடுக்கப்பட்டவனுக்கு மயிலாப்பூரில் இருந்து கிரிக்கெட் ஆட போன தன் சொந்த ஊர் தமிழனை விட ஸ்பானிஷ் மொழி பேசும் அர்ஜென்டினாவின் மைந்தனோடு ரத்த பந்தம் உருவானது. அதுவும் இல்லாமல் இந்தப் பெருமைமிகு பாரத நாட்டில் காலில் பிறந்தவன் சூத்திரன், தீண்டத்தகாதவன் என்று சொல்லும் சாஸ்திரங்கள் இருக்க அந்த காலை வைத்து ஓங்கி உதைக்கும் மரடோனா இவர்களுக்கு கடவுளாகிப் போனார். இங்கே இருக்கும் வடசென்னை இளைஞன் மரடோனாவின் நம்பர் பத்து ஜெர்சியை போட்டு கொண்டு சாதித் திமிரை உதைத்தான். அவனுக்குக் கால் புனிதமாகியது.
மேலும் மரடோனா தன்னுடைய வாழ்வில் வலதுசாரி அரசியலை பலமாக எதிர்த்தார். மரடோனாவின் இரண்டு டாட்டூக்கள் மிகவும் பிரபலம். ஒன்று கையில் சே குவேரா டாட்டூ, இன்னொன்று இடது கணுக்காலில் குத்தப்பட்டிருந்த ஃபிடல் காஸ்ட்ரோ டாட்டூ. இதுவே நம் நாட்டின் தலைவர் படத்தை இப்படி காலில் பச்சை குத்தி இருந்தால் இங்கே பலருக்கு மனம் புண் பட்டிருக்கும். ஆனால் பாருங்கள் கியூபாவின் அதிபர் காஸ்ட்ரோ அந்த கால்களை அன்போடு வருடி, தன் பிம்பத்தைப் பார்த்து ரசித்தார். ஒடுக்கப்பட்டவனுக்கு கால் புனிதம்.
இப்படியான போராளி மரடோனாவை இங்கிருப்பவர்கள் பார்த்ததில்லை. ஆனாலும் பூஜித்தார்கள். பார்க்காத கடவுளைப்போலவே. கடவுளுக்கு எல்லாம் சாவு கிடையாது சார். வடசென்னையின் கால்பந்து களங்களில் அவமானப்பட்ட இளைஞன் ஒருவன் சினம் கொண்டு, பந்தை அவன் கால்களால் ஓங்கி உதைக்கும் வரை மரடோனா வாழ்ந்துகொண்டேயிருப்பார்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக