புதன், 25 நவம்பர், 2020

BBC : நிவர் புயல் நிலவரம்: மரக்காணம் அருகே அதிகாலை 2 மணியளவில் கடக்கும் என கணிப்பு - LIVE UPDATES

 வங்க கடலில் புதிதாக உருவாகியுள்ள நிவர் புயல், புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் மரக்காணம் அருகே கரையை கடக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

  1. புயல் தற்போது 14 கி.மீ வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.
  2. புயலை கடக்கும் போது மணிக்கு 110 கி.மீ வேகத்தில் இருந்து 120 கி.மீ வேகம் வரை காற்றின் வேகம் இருக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
  3. இந்த புயலுக்கு நிவர் என பெயரிட்டிக்கும் நாடு இரான். இந்த ஆண்டு மேற்கு வங்கத்தையும் வங்க தேசத்தையும் கடுமையாக பாதித்த புயலுக்கு உம்பான் என பெயரிடப்பட்டது. அந்த புயலுக்கு பெயர் வைத்தது தாய்லாந்து.
  4. நிவர் புயல் கரையைக் கடப்பதால், புதன்கிழமையன்று தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அத்தியாவசியப் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் பணிபுரிவார்கள்.
  5. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தஞ்சாவூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களுக்கு நாளை அரசு விடுமுறை அறிவிப்பு.
  6. தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திர பிரதேசம் ஆகியவற்றில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர்,,
  7.  
  8. வர் புயல் நிலவரம்: அடையாறு சாலையில் மரங்கள் விழுந்தன



  9. நிவர் புயல்: மரக்காணம் அருகே அதிகாலை 2 மணியளவில் கரையை கடக்கலாம்



  10. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை (நவ. 26) பொது விடுமுறை

    நிவர் புயல் மற்றும் அதன் தாக்கம் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு புதுச்சேரி அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

  11. தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிப்பு

    தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. நாகப்பட்டினத்தில் மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் காற்று வீசி வருகிறது.

    காரைக்காலில் மணிக்கு 25 முதல் 35 கி.மீ வேகத்திலும் புதுச்சேரியில் 20 முதல் 30 கி.மீ வேகத்திலும் காற்று வீசி வருகிறது.

    கடலூரில் மணிக்கு 20 முதல் 30 கி.மீ வேகத்திலும் சென்னையில் 30 முதல் 40 கி.மீ வேகத்திலும் காற்று வீசி வருகிறது.

    கல்பாக்கத்தில் கடல் சீற்றம் மிக கடுமையாக இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

    சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிக அளவில் நீர் திறக்கப்பட்டுள்ளதால், அடையாறு பாலத்தின் அருகே வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

    பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.


    நிவர் புயல் நிலவரம்: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 5,000 கன அடி நீர் திறப்பு

    சென்னையில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 5,000 கன அடி நீர் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் மணிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் அதிக மழை காரணமாக நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் பிற்பகலில் 3,000 அடி, பிறகு 4,000 அடி ஆக உயர்ந்து மாலை 6 மணியளவில் 5,000 அடியாக நீர் திறக்கப்பட்டிருக்கிறது.

    இதனால் சென்னை நகரில் அடையாறு பாலத்துக்கு கீழே நீர் மட்டம் கடுமையாக உயரும் நிலை உள்ளது.



  12. நாகை, வேதாரண்யம் கடலோர பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைமீனவர்கள்

    நாகை மாவட்டம் வேதாரண்யம் கடலோர பகுதிகளில் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன.

    வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றம் கடுமையாக காணப்படுகிறது.

    ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளபள்ளம், கோடியக்கரை உள்ளிட்ட மீனவ கிராமங்களில் உள்ள மீன்பிடி படகுகள் வலைகள் பாதுகாப்பான இடங்களில் எடுத்து சென்று வைத்துள்ளனர்.

    வேதாரண்யம் பகுதியில் இரவில் இருந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கையாக பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

    இதனால் வடக்கு வீதி, மேல வீதி உள்ளிட்ட சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.புயல் பாதுகாப்பு மையங்கள் நகராட்சி சார்பில் 11 முகாம்களும் ஊராட்சி பகுதியில் 150 முகாம்களும் திறக்கப்பட்டு 7876 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    முகாமில் உள்ளவர்களுக்கு உணவு, குடிதண்ணீர், உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. காற்றால் மின்சாரம் நிறுத்தப்படும் போது மாற்று மின் இணைப்பு கொடுக்க ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வீசிய கஜா புயலால் இப்பகுதியில் கடுமையான பாதிப்புகுள்ளானது அந்த கஜா புயல் பாதிப்பில் இருந்து மீள்வதற்குள் தற்போது கரையை கடக்க இருக்கும் நிவர் புயலால் வேதாரண்யம் பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

    முன்னெச்சரிக்கையாக கூரை வீடுகளில் தார்ப்பாய் கொண்டு மூடியும் ஓட்டு வீடுகளில் மேல் கயிறு கொண்டு கட்டி மரங்களை பாதுகாப்பாக கிளைகளை வெட்டி வருகின்றனர். வேதாரண்யம் அடுத்த அகஸ்தியம்பள்ளி, கோடியக்காடு உள்ளிட்ட பகுதியில் உள்ள உப்பளங்களில் சேமித்து வைத்துள்ள உப்புகளை தார்ப்பாய் கொண்டு மூடி பாதுகாப்பாக வைத்துள்ளனர்.


    நிவர் புயல் எதிரொலி: சென்னை விமான நிலையம் மூடப்பட்டது

    நிவர் புயல் கரையை கடக்கும் முன்பாக சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கையாக சென்னைக்கு வரும் விமானங்கள் மற்றும் சென்னையில் இருந்து புறப்படும் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

    இன்று இரவு 7 மணி முதல் வியாழக்கிழமை காலை 7 மணிவரை உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான நிலையங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    நிவர் புயல் நிலவரம்: 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு கன மழைநிவர் புயல்

    புதுச்சேரி, காரைக்கால், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    புயல் கரை கடக்கும் நிலைக்கு முந்தைய தாக்கம் காரணமாக, சென்னை நகருக்குள் வரும் வாகனங்களின் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது.

    பொது மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


  13. நிவர் புயல் நிலவரம்: கரையை கடக்கும்போது என்ன செய்யக்கூடாது?


    சென்னையில் பல இடங்களில் மின் தடை

    நிவர் புயல் அடுத்த சில மணி நேரத்தில் கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சென்னையின் பல இடங்களில் திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளது.

    நகருக்கு மின்சார விநியோகிக்கும் பாதையில் ஏற்பட்ட பழுது இதற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

    தற்போது சென்னை, மாமல்லபுரம், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் பலத்த காற்று வீசி வருகிறது.


    நிவர் புயல் நிலவரம்: தயார் நிலையில் கடலோர காவல் படைநிவர்


    • கடலில் மீனவர்களுக்கு உதவுவதற்காகவும் பேரிடர் மீட்புப் பணிகளுக்காகவும் கண்காணிப்பு கப்பல்களான சுஜய், ஷெளர்யா, ஷெளனக் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
    • புயல் கரையை கடந்த பிறகு ஏற்படும் பாதிப்பு பகுதிகளுக்கு சென்று மீட்புதவியில் ஈடுபட தயார் நிலையில் 2 ஹெலிகாப்டர்கள் உள்ளன.
    • புயல் கரையை கடந்ததும் கண்காணிப்பு, சேத மதிப்புகளை ஆய்வு செய்து நிவாரண பணிகளுக்கு உதவ 3 டோர்னியர் ரக விமானங்கள் தயார் நிலையில் உள்ளன.
    • மாவட்ட நிர்வாகங்களுக்கு உதவுவதற்காக 23 பேரிடர் நிவாரண குழுக்களும் தயாராக உள்ளன.
    • சம்பந்தப்பட்ட மாநிலங்களின் மீன்வளத்துறைகளுடன் தொடர்பு கொண்டு மீனவர்கள் பாதுகாப்பாக கரைக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
    • தற்போதைய நிலையில், வங்காள விரிகுடா பகுதியில் 2,461 மீன்பிடி படகுகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. மீதமுள்ள படகுகள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • துறைமுகங்களில் உள்ள கப்பல்கள் பாதுகாப்பான வகையில் நங்கூரமிட்டு இருப்பதை உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  14. நிவர் புயல்: சென்னைவாசிகள் தொடர்பு கொள்ள சிறப்பு உதவி எண் அறிவிப்பு

    நிவர் புயல் தாக்கம் தொடர்பாக உதவி தேவைப்படுவோருக்காக காவல் சிறப்பு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் அவசர உதவி செல்பேசி எண். 9498181239-ஐ தொடர்பு கொள்ளலாம் என சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.


  15. டெல்டா மாவட்டங்களில் பலத்த தற்காப்பு ஏற்பாடுகள் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

    டெல்டா மாவட்டங்களில் பலத்த தற்காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    செம்பரம்பாக்கம் பகுதியில் நீர் திறப்பு நடவடிக்கையை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, சென்னையில் 30 இடங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருக்கிறது. நவீன இயந்திரங்கள் உதவியுடன் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

    டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 13 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த 13 மாவட்டங்களுக்கு நாளை வியாழக்கிழமை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டு பெரும்பாலானவர்கள் கரைக்கு திரும்பியுள்ளனர்.

    புயல் சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு முறையும் நிவாரண உதவி வழங்கப்படும் நடைமுறை அடிப்படையில் தற்போதும் நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி கூறினார்.


  16. நிவர் புயல்: தயார்நிலையில் என்டிஆர்எஃப், ராணுவ படையினர்

    நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் நிவர் புயல் பேரிடரை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

    திருச்சிக்கு 9 குழுக்களாக ராணுவத்தினர் வந்துள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் தலா 10 பேர் இருப்பவர். இவர்கள் அனைவரும் மீட்புதவி பணிகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.


  17. நிவர் புயல்: செம்பரம்பாக்கம் ஏரியில் கூடுதலாக நீர் திறப்பு

    சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 1,000 கன அடி நீர் இன்று திறக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதாக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 24 அடியாக உள்ள நிலையில், தற்போது அதன் நீர் மட்டம் 21.94 அடியாக அதிகரித்துள்ளது.


  18. நிவர் புயல்: சென்னை, கடலூர் உள்பட 13 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை

    நிவர் புயல் எதிரொலியாக நாளை (நவம்பர்,26) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தஞ்சாவூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


  19. கடலூரை நோக்கி நகரும் நிவர் புயல்

    வங்க கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயல் அடுத்த சில மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது அந்த புயல் சென்னையில் இருந்து 250 கி.மீ தூரத்தில் நகர்ந்து வருகிறது. கடலூருக்கு 180 கி.மீ, புதுச்சேரிக்கு 190 கி.மீ தூரத்தில் புயல் மணிக்கு 11 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதனால், சென்னை, கடலூர் ஆகிய இடங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.


  20. 10 முக்கிய தகவல்கள்

    வங்கக் கடலின் தெற்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்துள்ளதால் உருவான நிவர் புயல் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.

    நிகர் புயல் குறித்த 10 முக்கியத் தகவல்களைத் தொகுத்து வழங்குகிறது பிபிசி தமிழ்.

கருத்துகள் இல்லை: