திங்கள், 23 நவம்பர், 2020

பாஜக ராமசுப்பிரமணியன் : அரசியலுக்காக வேல் கந்தர் சஷ்டி குத்தாட்டமெல்லாம் கொடிய நகைச்சுவை நாடகமாகும்!


 திரு.ராமசுப்பிரமணியன் பதிவு.
:  . தேசபக்தர்கள் கண்டிப்பாக படித்து பகிரவும். என்றுமே தமிழகம் ஆன்மீக பூமி. நான் தீவிர ஆன்மீகவாதி. இந்து மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவன். ஆனால் போலியான பக்தியை வெறுப்பவன். அதுவும் பெரிய புராண "முத்தநாதன்" போல அரசியலுக்குள் ஆன்மீகத்தை புகுத்துவதை அடியோடு வெறுப்பவன். கந்தர் சஷ்டி கவசத்தை காரில் ஏறும்போது தினமும் மெதுவாகப் பாடுபவன். என் மனைவி காலையில் மாலையில் கருத்துடன் நாளும் பாடுபவள்.
 
கருப்பர் கூட்டம் எனும் யூடியூபில் ஏழு மாதத்திற்கு முன்பு கந்தர் சஷ்டி கவசம் பற்றி மோசமாக சித்தரித்த வீடியோவை யார் இப்போது பரப்பினார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அதைக் கடுமையாகக் கண்டித்து பல ஊடகங்களில் பேட்டி அளித்திருந்தேன். பேசியவரைக் கைது செய்ய வேண்டும், அந்த யூடியூபை தடை செய்ய வேண்டும் என்று பேசினேன். கருப்பர் கூட்ட வீடியோக்கள் அனைத்தும் நீக்கப்பட்டு, அது சம்மந்தமான அனைவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
 
இந்த விவகாரத்தில் திமுக அமைப்புச் செயலாளர் திரு. ஆர் எஸ் பாரதி MP அவர்கள் திமுக கட்சி சார்பாக கண்டனம் தெரிவித்தார். பல கட்சிகள், இயக்கங்கள் இந்த யூடியூப் பேட்டியைக் கடுமையாக கண்டனம் செய்தனர். இதற்கு மேல் திரு. ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்க வேண்டும், தமிழக முதல்வர் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்பது நகைப்புக்குரியது. அதிமுக கண்டனம் செய்தது. அரசு நடவடிக்கை எடுத்துவிட்டது.
 
இப்போது திடீரென பக்திப் பரவசத்தில் திளைக்க தமிழக பாஜக வீடு தோறும் முருகனின் வேலை வைத்து, கந்தர் சஷ்டி கவசம் நேற்று பாட வேண்டும் என முடிவெடுத்து, கட்சியினர் இதை நேற்று செய்தனர்.
நேற்றே என் கருத்தினைத் தெரிவிக்க விரும்பவில்லை. காரணம் உண்மையிலேயே ஒரு சிலர் பக்தியுடன் பாடியிருக்கலாம். அவர்கள் மனதைப் புண் படுத்த விரும்பவில்லை.
 
வேலை வைத்து முருகனை வழிபடுவது தமிழகத்தில் நடைமுறை இல்லை. மயில் மீது அமர்ந்த முருகனை, வள்ளி தெய்வானை உடன் சேவல் கொடியுடன், வேலுடன் வழிபடுவது வழக்கம். ஆண்டிக் கோலத்தில் பழனியில், தந்தைக்கு உபதேசம் செய்யும் தகப்பன் சாமியாக சுவாமிமலையில் வழிபடுவதெல்லாம் வழக்கம்.
 
இலங்கை யாழ்ப்பாணத்தில் தற்போது வேலை வைத்து வழிபடும் உற்சவம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நடைபெறுகிறது. அதேபோல் வேலை வழிபடுவது கதிர்காமத்தில் உண்டு. மலேஷியாவிலும் உண்டு.
ஆனால் கேலிக் கூத்தாக நேற்று வேலை வைத்து பூஜை செய்து, கந்தர் சஷ்டி கவசம் படித்த நிகழ்வு பாஜக சார்பில் நடைபெற்றது. இதனால் அக் கட்சிக்கு ஒரு பலனும் கிடைக்காது.
 
ஏனெனில் கொரோனாவினால் பொருளாதரம் சீரழிந்து, கோடிக்கணக்கானவர்கள் பரம ஏழைகளாக ஆகிவிட்டனர். இந்தியாவில் சுதந்திர இந்தியாவில் கேள்விப்படாத அளவிற்கு வேலை இல்லாத் திண்டாட்டம் ஏற்பட்டுவிட்டது. லட்சக்கணக்கான மக்கள் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரத்திற்கு பசியும் பட்டினியுமாக நடந்தே சொந்த ஊர் சென்றனர். உலகில் கொரோனா நோயின் அதிகத் தாக்கம் உடைய மூன்றாவது நாடு இந்தியா. எப்போது இந்தத் துயர் நீங்கும் என்று அனைவரும் கலங்கி நிற்கின்றனர்.
இந்நிலையில் மக்கள் கோபத்தைத் திசை திருப்பும் வகையிலும், அரசியல் ஆதாயம் பெறலாமெனும் பேராசையினாலும் இந் நிகழ்ச்சி நடை பெற்றது. மீண்டும் சொல்கிறேன் இது எந்த நல்ல பயனையும் தராது. கேலிக் கூத்தாக மட்டுமே பார்க்கப்பட்டது. ஆஷாடபூதிகள் என்று பேசி, சமூக வலையமைப்பில் ஏராளமான பதிவுகள் வருகின்றன.
இப்படிப்பட்ட கொடுமையான நேரத்தில் இப் பிரச்சனைகளை எல்லாம் மறக்கச் செய்யும் விதமாகவும் அரசியல் ஆதாயம் பெறுவதற்காகவும் வேலை வைத்து கந்தர் சஷ்டி கவசம் படிக்கச் செய்தது மிகவும் கொடிய நகைச்சுவை நாடகம் ஆகும்.
வடலூர் வள்ளலார் சென்னை கந்தசாமிக் கோயில் முருகனைப் பாடும்போது, "உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" என்றும் " மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்" என்றெல்லாம் வேண்டுகிறார்.
 
"பொல்லாதவரைப் பொடிப்பொடியாக்கும்" என்கிறது கந்தர் சஷ்டி கவசம்.
பலர் இந்தக் கூத்தினை நடத்தினர். கிழிந்த முருகன் படம், திருநீறு இல்லாத நெற்றி, காலில் செருப்பு என்று பல அநாச்சாரங்களை அரங்கேற்றினர்.
"பக்தி வலையில் படுவோன் காண்க" என்கிறார் மாணிக்கவாசகர்.
பக்தியில்லாமல் ஒரு நாடகமாக நடத்திய இந்த ஒரு நாள் கூத்தை மக்கள் ரசிக்கவில்லை. "நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து" என்பதை உறுதிப் படுத்தியது.
PS: என்னைக் கடுமையாக விமர்சித்தாலும் கலங்க மாட்டேன். பலர் வேண்டுகோள் விடுத்து பதிவை எடுத்துவிடுங்கள் என்பார்கள். மன்னிக்கவும். இயலாது.
 

கருத்துகள் இல்லை: