செவ்வாய், 4 ஜூன், 2019

மாயாவதி அகிலேஷ் கூட்டணி பிரிந்தது ...டிம்பிள் யாதவைக் கூட வெற்றிபெறவைக்க முடியவில்லை!’ -

மாயாவதி - அகிலேஷ் யாதவ்vikatan.com - s.k.premkumar: மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி காரணமாக, அகிலேஷின் சமாஜ்வாதி கட்சியுடனான கூட்டணியை முடிவுக்குக் கொண்டுவரும் மனநிலையில் இருக்கிறா,ர் மாயாவதி. இந்தியாவில் அதிக தொகுதிகளைக்கொண்ட பெரிய மாநிலம், உத்தரப்பிரதேசம். இதன் காரணமாகவே பெரும்பாலான கட்சிகளின் கவனம் இம்மாநிலத்தின்மீது இருக்கும். பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுலும் இன்னும் சில இன்னாள் முன்னாள் அமைச்சர்களும் இங்கு போட்டியிடுவார்கள். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், பா.ஜ.க உத்தரப்பிரதேசத்தில் அமோக வெற்றிபெற்றது. யோகி ஆதித்யநாத் முதல்வரானார். அங்கு, பா.ஜ.க-வின் வாக்குவங்கி மிகப் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்திருக்கிறது. 
இதன் காரணமாக, அம்மாநிலத்தில் நடைபெற்ற மக்களவை இடைத்தேர்தலில் அகிலேஷ் யாதவ்-மாயாவதி கூட்டணி, பா.ஜ.க-வை எதிர்த்தனர். இதற்குப் பலனும் கிடைத்தது. பல ஆண்டுகளாக பா.ஜ.க வசமிருந்த இரண்டு மக்களவைத் தொகுதிகளில் இந்தக் கூட்டணி வெற்றிபெற்றது. மக்களவை உறுப்பினர்களாக இருந்த யோகி முதல்வரானதால், இந்த இடைத்தேர்தல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கூட்டணி, நடந்துமுடிந்த மக்களவைக் தேர்தலிலும் தொடர்ந்தது. ஆனாலும் பா.ஜ.க-வின் வெற்றியை அவர்களால் தடுக்கமுடியவில்லை. இதனால் கடும் அதிருப்திக்கு ஆளான மாயாவதி, கூட்டணியை முடிவுக்குக் கொண்டுவரலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். இது, உத்தரப்பிரதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
டிம்பிள் யாதவ்
நேற்று, பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகிகளுடன் நடந்த கூட்டத்தில் தனது அதிருப்தியை அவர் வெளிப்படுத்தியுள்ளார். இந்தக் கூட்டத்தில் மாயாவதி, தனது கட்சியின் வாக்குகள் அவர்களுக்குக் (சமாஜ்வாதி கட்சி) கிடைத்தன. ஆனால்,  அவர்களுக்கு அவர்களின் சமுதாய வாக்குகள்கூட கிடைக்கவில்லை என்றார். பல ஆண்டுகளாக அகிலேஷ் யாதவ் குடும்பத்தினரின் கைகளில் இருந்துவந்த தொகுதியில்கூட அவர்களால் வெற்றிபெற முடியவில்லை. கன்னாவுஜ் தொகுதியில் அகிலேஷ் யாதவ்வின் மனைவி டிம்பிள் யாதவ் போட்டியிட்டார். 3.5 லட்சம் யாதவ் சமுதாய வாக்குகளைக் கொண்ட தொகுதியில் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை. இதற்கு மேல் இந்தக் கூட்டணி பயனற்றது என கடுமையாகப் பேசியிருக்கிறார்.
மேலும், அடுத்து வரவிருக்கும் 11 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தனித்துப் போட்டியிட முடிவு செய்திருக்கிறார்.  11 சட்டப்பேரவை உறுப்பினர்கள் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால், இங்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி இடைத்தேர்தல்களில் போட்டியிடுவதில்லை. ஆனால், தற்போது அந்தக் கொள்கையை உடைக்கும் முடிவில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக சமாஜ்வாதி கட்சியின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில்,  ``அக்கட்சியின் அதிகாரபூர்வ நிலைப்பாடு எதுவும் வெளியாகவில்லை. கூட்டணி தொடர்பாக அதிகாரபூர்வமாக அறிவிக்கட்டும், அதன்பின்னர் பார்த்துக்கொள்ளலாம்” என்றார்

கருத்துகள் இல்லை: