திங்கள், 3 ஜூன், 2019

புத்த தேரர் உண்ணாவிரதம் - இலங்கையில் இரு முஸ்லிம் கவர்னர்கள் ராஜினாமா


மாலைமலர் : இலங்கையில் ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் கிளர்ந்தெழுந்த புத்த மதத்தினர் இன்று நடத்திய போராட்டத்தின் எதிரொலியாக இரு மாகாணங்களை சேர்ந்த முஸ்லிம் கவர்னர்கள் இன்று ராஜினாமா செய்தனர்.
கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த பிப்ரவரி மாதம்  ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் பிரபல ஓட்டல்களின்மீது தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 258 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற தேசிய தவ்ஹீத் ஜமாத் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலை அதிகரித்துள்ளது. ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்ததாக சிலரை அங்குள்ள புத்த மதத்தலைவர்கள் குற்றம்சாட்டினர். அவ்வகையில். மேற்கு மாகாண கவர்னர் ஆஸாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண கவர்னர் ஹிஸ்புல்லா ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டது. இதை இவர்கள் இருவருமே மறுத்து வந்தனர். ஆனால், இவர்களின் மறுப்பு அறிக்கைகளை புத்த மதத்தலைவர்கள் ஏற்கவில்லை.

இவர்கள் இருவரும் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாவின் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதானா கண்டி நகரில் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
இந்த இரு முஸ்லிம் கவர்னர்களையும் அதிபர் பதவிநீக்கம் செய்ய வேண்டும். அதுவரை எனது உண்ணாவிரதம் தொடரும் என்று அவர் அறிவித்திருந்தார்.

பிரபல புத்த மதத்தலைவர் கலகோடாத்தே ஞானசாரா, கொழும்பு கத்தோலிக்க தேவாலயத்தின் தலைவர் கர்டினல் மால்கோம் ரஞ்சித் ஆகியோர் அவரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். மேற்கு மாகாணம் மற்றும் கிழக்கு மாகாண கவர்னர்களாக பதவி வகிக்கும் இவர்கள் இருவரும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கண்டி நகரில் இன்று புத்த மதத்தினர் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்ற இந்த போராட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக சிலர் ஆவேசத்துடன் கோஷமிட்டனர்.

இதன்விளைவாக, மேற்கு மாகாண கவர்னர் ஆஸாத் சாலே மற்றூம் கிழக்கு மாகாண கவர்னர் ஹிஸ்புல்லா ஆகியோர் இன்று இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாவை சந்தித்து தங்களது ராஜினாமா கடிதங்களை ஒப்படைத்தனர்

கருத்துகள் இல்லை: