வெள்ளி, 7 ஜூன், 2019

ராஜ்நாத் சிங் - அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி

ராஜ்நாத் சிங் - அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடிமின்னம்பலம் : மத்திய அரசு ஒவ்வொரு முறை புதிதாக அமையும்போதும் பிரதமரால் அமைக்கப்படும் அமைச்சரவைக் குழுக்கள் பெரிய அளவில் ஊடகங்களின் கவனத்தைப் பெறுவதில்லை. ஏனெனில், ஆளுங்கட்சி அமைச்சரவைக்குள் நடக்கும் சம்பிரதாயபூர்வமான நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது.
ஆனால், அளவு கடந்த மெஜாரிட்டியுடன் அரசு அமைத்திருக்கும் பிரதமர் மோடியின் அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கிடையே நடைபெறும் அதிகார மோதல் புதிய அமைச்சரவைக் குழுக்களின் நியமனம் மூலம் நேற்று ( ஜூன் 6) வெளிப்பட்டுள்ளது.

ஜூன் 6ஆம் தேதி காலை 5.57 மணிக்கு மத்திய அமைச்சரவைச் செயலகத்தின் மூலமாக மத்திய அமைச்சரவைக் குழுக்கள் மறுசீரமைப்பு 2019 என்ற தலைப்பில் ஒரு செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி பிரதமரால் கேபினட் குழுக்கள் மறு சீரமைப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. மொத்தம் எட்டு கேபினட் குழுக்கள் இந்த அறிவிப்பில் இடம்பெற்றன.
அந்த எட்டுக் குழுக்களிலும் உள்துறை அமைச்சர் அமித் ஷா இடம்பெற்றிருந்தார். ஆனால், தற்போதுவரை அமைச்சரவையில் நம்பர் டூ எனக் கருதப்படும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எட்டில் இரண்டு குழுக்களில் மட்டுமே இடம்பெற்றிருந்தார். அதுவும் அந்த இரண்டில் ஒன்று அவர் பொறுப்பு வகிக்கும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு. அதைத் தவிர பொருளாதார விவகாரங்களுக்கான குழுவில் மட்டுமே ராஜ்நாத் சிங் இடம்பெற்றிருந்தார். முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவில் ராஜ்நாத் சிங் தவிர்க்கப்பட்டிருந்தார்.

இந்தச் செய்திக் குறிப்பு வந்த சில மணிநேரங்களிலேயே டெல்லியிலிலும், ராஜ்நாத் சிங் சார்ந்த உத்தரப் பிரதேச அரசியலிலும் பரபரப்பு பற்றிக்கொண்டது. அமைச்சரவைக்குள் அமித் ஷா வந்த பிறகு சீனியரான ராஜ்நாத் சிங் ஓரங்கப்பட்டப்படுகிறார் என்ற வலுவான செய்தியையே இந்த அறிவிப்பு பறைசாற்றியது. குறிப்பாக ராஜ்நாத் சிங் இடம்பெற்றிருக்கும் குழுக்களில் அவர் பெயருக்கு அடுத்ததுதான் உள்துறை அமைச்சர் அமித் ஷா பெயர் இடம்பெறுகிறது. ராஜ்நாத் சிங் அமைச்சரவையிலும் மத்திய அரசிலும் அமித்ஷாவைவிட மூத்தவர் என்பதை இந்த வரிசை சொல்லாமல் சொல்கிறது.
மத்திய அரசில் மட்டுமல்ல பாஜகவிலும் அமித் ஷாவுக்கு முன் இருமுறை தலைவர் பதவியை வகித்தவர் ராஜ்நாத் சிங். நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் முதலமைச்சராக இருந்தவர். இன்னும் குறிப்பாக, மோடி 2014இல் பெரிய வெற்றி பெற்றபோது ராஜ்நாத் சிங் தான் கட்சியின் தலைவராக இருந்தார். மே 30ஆம் தேதி நடந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக பதவிப் பிரமாணம் ஏற்றது ராஜ்நாத் சிங்தான். அவருக்கு அடுத்தே அமித் ஷா பதவியேற்றார். ஆனாலும் அமைச்சரவைக்குள் அமித் ஷா வந்த பிறகு ராஜ்நாத் சிங் பகிரங்கமாக ஓரங்கட்டப்படுகிறார் என்ற செய்தியே நேற்றைய பகல் முழுவதும் டெல்லியில் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.
இதை அறிந்த பிரதமர் மோடி இந்தச் சர்ச்சைக்கு நேற்று இரவு 10 19 மணிக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். நேற்று காலை 5.57க்கு வெளியிடப்பட்ட அமைச்சரவைக் குழுக்கள் மறுவரையறை பற்றிய அறிவிப்பு திருத்தி அமைக்கப்பட்டு நேற்று இரவு 10.19க்கு மீண்டும் வெளியிடப்பட்டது. அதில் அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆறு அமைச்சரவைக் குழுக்களில் இடம்பிடித்திருப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஏற்கனவே இருந்த பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஆகியவற்றோடு சேர்த்து நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, முதலீடு மற்றும் வளர்ச்சிக்கான அமைச்சரவைக் குழு, வேலைவாய்ப்புத் திறன் மேம்பாட்டுக்கான அமைச்சரவைக் குழு, அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு என மேலும் நான்கு குழுக்களில் இடம்பெற்று மொத்தமுள்ள எட்டுக் குழுக்களில் ஆறில் ராஜ்நாத் சிங் இடம்பெறுவதாக பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

நேற்று பகல் முழுவதும் ராஜ்நாத் சிங் நடத்திய உரிமைப் போராட்டத்துக்கு நேற்று இரவுதான் அவருக்கு வெற்றி கிடைத்தது. இதன் மூலம் வலிமையான பிரதமர் என்று அறியப்படும் மோடி இப்போது பாஜக தலைவர் அமித் ஷாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறாரா என்ற விவாதம் டெல்லியில் தொடங்கிவிட்டது. உடனடியாக இப்பிரச்சினை தீர்க்கப்பட்டாலும் அமித் ஷா - ராஜ் நாத் சிங் மோதல் மேலும் பல வகையில் வெடிக்கும் என்கிறார்கள் டெல்லி பத்திரிகையாளர்கள்.

கருத்துகள் இல்லை: