வியாழன், 6 ஜூன், 2019

நீட் தேர்வு முடிவு! முதல் 50 இடங்களில் தமிழக மாணவர்கள் ஒருவருமில்லை!

நீட் தேர்வுvikatan.com - ஜெனி ஃப்ரீடா : நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், இனி நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது. முதலில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடத்தப்படும்.
தேர்வு முடிவுகள் வெளியீடும்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. 2019-2020-ம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வுகள் கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை சி.பி.எஸ்.இ அமைப்புதான் நடத்தி வந்தது. இந்த ஆண்டு முதன்முறையாகத் தேசிய தேர்வாணைய முகமை (National Testing Agency) நடத்தியது. நாடு முழுவதும் 14.10 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதினர். அதில் 7,97,042 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நலின் கன்டெல்வெல் என்ற மாணவர் மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு 701 பெற்று அகில இந்திய அளவில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். டெல்லியைச் சேர்ந்த பாவிக் பன்சார், உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த அக்ஷ்த் கௌசிக் ஆகியோர் 700 மதிப்பெண் பெற்று முறையே இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெற்றுள்ளனர். முதல் ஆறு இடங்களைப் பிடித்தவர்களும் மாணவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் 50 இடங்களில் ஓரிடத்தைக்கூட தமிழக மாணவர்கள் பெறவில்லை.

தமிழகத்தைப் பொறுத்தவரை 1,23,078 மாணவர்கள் தேர்வெழுதினர். அவர்களில் 59,785 பேர், அதாவது 48.57 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். கடந்த ஆண்டு 39.56 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு 9.01 சதவிகிதம் பேர் அதிகமாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழக அளவில் சென்னையைச் சேர்ந்த ஸ்ருதி என்ற மாணவி 685 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளார். அகில இந்திய அளவில் இவர் 57-வது இடத்தைப் பெற்றுள்ளார். மாற்றுத்திறனாளிகள் பிரிவில் ஆண்கள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த கே.கே.கார்வண்ணபிரபு 572 மதிப்பெண் பெற்று ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளார்.
பிற்பகல் 2 மணியளவில் இணையதளத்தில் நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலானோர் இணையதளத்தைப் பயன்படுத்தி தேர்வு முடிவைத் தெரிந்துகொள்ள முயன்றதால், அந்த இணையதளத்தின் செயல்பாடுகள் தாமதமானது. இதனால் முடிவுகள் வெளியிட்டும் முடிவுகளைத் தெரிந்துகொள்ள முடியாமல் மாணவர்கள் அவதிப்பட்டனர்.
நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், இனி நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது. முதலில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடத்தப்படும். அதைத் தொடர்ந்து மாநில ஒதுக்கீட்டுக்கான இடங்கள் கலந்தாய்வு மூலம் அந்தந்த மாநிலங்கள் நிரப்பும். இந்த ஆண்டு சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, இயற்கை மருத்துவம் மற்றும் யோகா ஆகிய ஆயுஷ் படிப்புகளுக்கும் நீட் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: