சனி, 8 ஜூன், 2019

மாநிலக் கல்வி முறையைச் சீரழிக்கும் நீட்: தலைவர்கள்!

மின்னம்பலம் : மாநிலக் கல்வி முறையைச் சீரழிக்கும் நீட்: தலைவர்கள்!நாடு முழுவதும் நேற்று முன்தினம் வெளியான நீட் தேர்வு முடிகளில், மதிப்பெண் குறைவாக பெற்றதால் திருப்பூரைச் சேர்ந்த மாணவி ரிதுஸ்ரீ, பட்டுக்கோட்டையைச் சேர்ந்த மாணவி வைசியா ஆகியோர் தற்கொலை செய்துகொண்டனர். இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில், விழுப்புரத்தைச் சேர்ந்த மோனிஷாவும் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்கிற குரல் மீண்டும் ஒருமுறை எழுந்துள்ளது.
இதுதொடர்பாக நேற்று (ஜூன் 7) அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “கடந்த ஆண்டைவிட இம்முறை நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவ - மாணவியரின் தேர்ச்சி விகிதம் கட்டாயத்தின் காரணமாக உயர்ந்திருந்தாலும், அவர்களில் எத்தனை பேருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்கிற கேள்விக்குத் திருப்திகரமான பதில் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

“நீட் தேர்ச்சி விகிதத்தில் முன்னேறிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் 7,04,335 என்ற அளவில் உள்ளது. ஆனால், இதர பிற்படுத்தப்பட்டவர்கள் 63,749 மட்டுமே. பட்டியல் இனத்தவர், 20,009 பேர். பழங்குடியினர் 8,455 பேர் என்ற விவரம் வெளியாகியுள்ளது. காலம் காலமாக, அதிகாரத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருந்த ஆதிக்க மனப்பான்மை கொண்டமேல்தட்டுப் பிரிவினரால், கல்வி மறுக்கப்பட்டுவந்தோருக்கு, சுதந்திர இந்தியாவில் சமூக நீதி அடிப்படையில் அந்த வாய்ப்பு கிடைக்கப்பெற்று ஏறத்தாழ 70 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், மீண்டும் அவர்களைக் கல்வி ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பின்னுக்குத் தள்ளும் சமநீதி இல்லாத நடவடிக்கையாகவே நீட் தேர்வு முடிவுகள் அமைந்துள்ளன” என்று புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டிய ஸ்டாலின்,
“கிராமப்புற - ஏழை - ஒடுக்கப்பட்ட மாணவர்கள் அதிகம் பயில்வது மாநில அரசு பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும்தான். அவர்களின் மருத்துவக் கனவை நீட் தேர்வு முற்றிலுமாக சிதைத்து ஒழித்துவிட்ட காரணத்தால்தான் அரியலூர் அனிதா, விழுப்புரம் பிரதீபா எனத் தொடங்கிய நீட் பலிகள், இந்த ஆண்டு திருப்பூர் ரிதுஸ்ரீ, பட்டுக்கோட்டை வைஷ்யா, மரக்காணம் மோனிஷா என அதிகரித்துக்கொண்டேபோகும் அவலமும் அபாயமும் மிகுந்த கட்டத்தை அடைந்துள்ளது” என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.
“மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வை அதிகப்படுத்தி, எளிய மாணவ - மாணவியரின் மருத்துவக் கனவைச் சிதைத்துக்கொண்டிருக்கிறது நீட் தேர்வு. அத்துடன், மாநிலக் கல்வி முறையையும் சீரழிக்கிறது. கல்வியைப் பொதுப்பட்டியலிலிருந்து மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவரும்போதுதான் இத்தகைய ஏற்றத்தாழ்வுகள் நீங்கும்” என்று வலியுறுத்தியுள்ள ஸ்டாலின், அனைத்து மாநிலங்களின் நலனும் பாதுகாக்கப்படும் என்கிற மோடி அரசு, தமிழ்நாட்டு மக்கள் நீட் தேர்வு ரத்து என்கிற வாக்குறுதிக்கு ஆதரவாக வாக்களித்திருப்பதை மனதில் கொண்டு, செயல்பட வேண்டியது கட்டாயமாகிறது. நீட் தேர்வை ரத்து செய்யவும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவும் தி.மு.க., நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து பாடுபடும் என்றும் உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட இந்தியாவில் நாடு முழுவதற்கும் ஒரே நுழைவுத் தேர்வு நடத்துவதென்பது ஏற்புடையதல்ல. ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு விதமான பாடத் திட்டங்களைப் பின்பற்றிவரும் சூழலில் மத்திய கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இது பிற வாரியங்களில் பயிலும் மாணவர்களுக்கு எதிராக உள்ளது. இது அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள சமத்துவம் என்ற கோட்பாட்டுக்கு எதிரானதாகும். இந்தப் பாகுபாட்டை உச்ச நீதிமன்றமே ஏற்றுக்கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “நீட் தொடர்பான மரணங்களுக்கு மத்திய அரசின் தவறான கொள்கையே காரணம். இனியாவது பாஜக அரசு தனது தவறை உணர்ந்து தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்துக்குத் தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை: