திங்கள், 3 ஜூன், 2019

அதிமுக அமைச்சர் தொகுதிகள் அத்தனையும் காலி .. நாடாளுமன்ற தேர்தல் வாக்குகள் கூறும் செய்தி!

பன்னீர் எடப்பாடிஎஸ்.ஏ.எம். பரக்கத் அலி- விகடன் : நாடாளுமன்றத் தேர்தலில் 30 அமைச்சர்களில் பன்னீர் மட்டுமே அவருடைய சட்டசபைத் தொகுதியில் கூடுதல் ஓட்டு வாங்கியிருக்கிறார். எடப்பாடி உட்பட மற்ற அமைச்சர்கள் அனைவரும் வாஷ் அவுட் ஆகியிருப்பது எதை உணர்த்துகிறது?
எடப்பாடிமிழகத்தில் அண்மையில் 38 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், தி.மு.க. கூட்டணி 37 இடங்களிலும் முதல்வர் எடப்பாடி – துணை முதல்வர் பன்னீர் தலைமையிலான அ.தி.மு.க. கூட்டணி ஓர் இடத்திலும் வெற்றிபெற்றது. இந்தத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னால் சில உண்மைகளும் புதைந்து கிடக்கின்றன.
தமிழகத்தின் ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியிருக்கின்றன. வாக்கு எண்ணிக்கையும் சட்டசபைத் தொகுதிவாரியாக எண்ணப்பட்டு, பிறகு ஆறு தொகுதிகளின் வாக்குகளையும் கூட்டி, முடிவுகள் வெளியிடப்படும். அந்த அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிக்குள் அடங்கியிருக்கும் தமிழக அமைச்சர்களின் சட்டசபைத் தொகுதிகளை ஸ்கேன் செய்தோம். `மாண்புமிகுக்களின்’ தொகுதிகளில் எவ்வளவு வாக்குகள் கிடைத்தன எனப் பகுப்பாய்வு செய்தோம்.
அப்போது சட்டசபை தொகுதிகளில் கிடைத்த ஓட்டுகள், அமைச்சர்களுக்கு அளிக்கப்பட்டதல்ல; நாடாளுமன்ற வேட்பாளர்களுக்கு அளிக்கப்பட்டவை. அதிகாரம் படைத்த அமைச்சர்கள், தங்கள் தொகுதிகளை வளப்படுத்தி வைத்திருப்பார்கள். அரசின் நலத் திட்டங்கள், சலுகைகளை தங்கள் தொகுதியில் பரவலாக்கி வைத்திருப்பார்கள். அதனால், அங்கே அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற்ற பயனாளிகளும் அதிகம். எதிர்காலத்தில் தொகுதி, தங்கள் கையைவிட்டுப் போய்விடக் கூடாது என்பதற்காகத் தொகுதி முழுவதையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பார்கள். அதற்காகக் காய்களை நகர்த்தியிருப்பார்கள் அமைச்சர்கள்.

எடப்பாடி அமைச்சரவை பதவியேற்பின் போது…
ஆனால், 2016-ல் அவர்கள் போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதிகளின் லட்சணம் என்ன என்பதைத் தோலுரித்துக் காட்டிவிட்டது இந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள். முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் சேர்த்து மொத்தம் இப்போதுள்ள அமைச்சர்கள் எண்ணிக்கை 32. வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதால், அந்தத் தொகுதியில் அடங்கியுள்ள வாணியம்பாடி சட்டசபைத் தொகுதியின் எம்.எல்.ஏவான நிலோஃபர் கபீல், ஜோலார்பேட்டை சட்டசபைத் தொகுதி எம்.எல்.ஏவான அமைச்சர் கே.சி. வீரமணி ஆகிய இரண்டு அமைச்சர்களின் வாக்கு விவரங்கள் பதிவாகவில்லை. இந்த இரண்டு பேரைத் தவிர்த்துவிட்டு மீதமுள்ள 30 அமைச்சர்கள், தங்களின் சட்டசபைத் தொகுதியில் வாங்கிய வாக்கு விவரங்களை இங்கே அலசுவோம்.
எடப்பாடி பழனிசாமி: சேலம் நாடாளுமன்றத் தொகுதிக்குள்தான் இவரின் சட்டசபைத் தொகுதியான எடப்பாடி தொகுதி வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணி வாங்கிய வாக்குகள் 96,485. தி.மு.க. கூட்டணி பெற்ற ஓட்டுகள் 1,04,573. அ.தி.மு.க. கூட்டணியைவிட, தி.மு.க. கூட்டணி 8,088 வாக்குகள் அதிகம் வாங்கியிருக்கிறது. அதாவது, எடப்பாடி சட்டசபைத் தொகுதியில் முதல்வராக இருக்கும் பழனிசாமி தோற்றிருக்கிறார். 2016 சட்டசபை தேர்தலில் 42,022 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயித்த எடப்பாடி பழனிசாமி, இப்போது 8,088 ஓட்டுகள் குறைவாகப் பெற்று, பின் தங்கியிருக்கிறார்.
ஓ.பன்னீர்செல்வம்: தேனி எம்.பி. தொகுதிக்குள்தான் இவரின் போடிநாயக்கனூர் சட்டசபை தொகுதி வருகிறது. தேனி எம்.பி. தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்தான்போட்டியிட்டு வென்றார். தேனி தொகுதியில் மட்டும்தான் அ.தி.மு.க. ஜெயித்தது. போடிநாயக்கனூர் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணிக்கு 94,279 வாக்குகளும் தி.மு.க. கூட்டணிக்கு 67,791 வாக்குகளும் கிடைத்திருக்கின்றன. 26,488 வாக்குகள் அ.தி.மு.க. கூட்டணி முன்னிலை பெற்றிருக்கிறது. 2016 சட்டசபைத் தேர்தலில் 15,608 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயித்த பன்னீர்செல்வம், இப்போது முன்னேறி 26,488 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்திருக்கிறார். தமிழக  அமைச்சர்களில் பன்னீர்செல்வம் மட்டுமே தன்னுடைய தொகுதியில் செல்வாக்கை நிலைநிறுத்தியிருக்கிறார். முதல்வர் எடப்பாடி தோற்றபோதும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மட்டும் வென்றிருப்பதற்குப் பின்னால் இருப்பது `பக்கா’ அரசியல்.

திண்டுக்கல் சீனிவாசன்: திண்டுக்கல் எம்.பி தொகுதிக்குள் அடங்கியிருக்கிறது சீனிவாசனின் திண்டுக்கல் சட்டசபை தொகுதி. இங்கே அ.தி.மு.க. கூட்டணி 26,629 ஓட்டுகளும் தி.மு.க. கூட்டணி 1,10,003 ஓட்டுகளும் பெற்றிருக்கின்றன. 2016 சட்டசபைத் தேர்தலில் 20,719 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற திண்டுக்கல் சீனிவாசனுக்கு இப்போது கடுமையான சரிவு. இப்போதைய வாக்கு வித்தியாசம் 83,374.

செங்கோட்டையன்:  திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதிக்குள்தான் செங்கோட்டையனின் கோபிசெட்டிபாளையம் சட்டசபைத் தொகுதி வருகிறது. இங்கே அ.தி.மு.க. கூட்டணிக்கு 78,830 ஓட்டுகளும் தி.மு.க. கூட்டணிக்கு 88,789 ஓட்டுகளும் கிடைத்திருக்கின்றன. கடந்த சட்டசபைத் தேர்தலில் 11,223 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற செங்கோட்டையன் இப்போது 9,959 வாக்குகள் வித்தியாசத்தில் பின் தங்கியிருக்கிறார்.
செல்லூர் ராஜு:  மதுரை நாடாளுமன்றத் தொகுதிக்குள்தான் செல்லூர் ராஜு வின் மதுரை மேற்கு சட்டசபைத் தொகுதி வருகிறது. முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இங்கே அ.தி.மு.க. கூட்டணிக்கு 55,208 வாக்குகளும் தி.மு.க. கூட்டணிக்கு 82,022 வாக்குகளும் கிடைத்திருக்கின்றன. அதாவது, 26,814 வாக்குகள் வித்தியாசத்தில் செல்லூர் ராஜு பின் தங்கியுள்ளார். கடந்த 2016 சட்டசபைத் தேர்தலில் 16,398 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்தவர், இப்போது அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறார்.
தங்கமணி: ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்குள் வருகிறது தங்கமணியின் குமாரபாளையம் சட்டசபைத் தொகுதி. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணிக்கு 65,323 வாக்குகளும் தி.மு.க கூட்டணிக்கு 86,683 வாக்குகளும் கிடைத்திருக்கின்றன. அதாவது, 21,360 வாக்குகள் வித்தியாசத்தில் தங்கமணி பின் தங்கியிருக்கிறார். 2016 சட்டசபைத் தேர்தலில் 47,329 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்த தங்கமணிக்கு இப்போது 21,360 வாக்குகள் வித்தியாசத்தில் சரிவு.
வேலுமணி: 2016 சட்டசபைத் தேர்தலில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தவர்களில் கருணாநிதி, சக்கரபாணிக்கு அடுத்து வேலுமணிக்கு மூன்றாவது இடம். 64,041 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயித்த எஸ்.பி வேலுமணி, இப்போது அவருடைய தொகுதியில் 21,091 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறார். பொள்ளாச்சி எம்.பி. தொகுதிக்குள்தான் வேலுமணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வருகிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் இங்கே அ.தி.மு.க கூட்டணிக்கு 75,127 வாக்குகளும் தி.மு.க. கூட்டணிக்கு 96,218 வாக்குகளும் கிடைத்திருக்கின்றன. வாக்கு வித்தியாசம் 21,091.
ஜெயக்குமார்: வட சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குள்தான் ஜெயக்குமாரின் ராயபுரம் சட்டசபைத் தொகுதி அடங்கியிருக்கிறது. இந்தத் தேர்தலில் ராயபுரத்தில் அ.தி.மு.க கூட்டணிக்கு 15,815 ஓட்டுகளும் தி.மு.க. கூட்டணிக்கு  69,987 ஓட்டுகளும் கிடைத்துள்ளன. கடந்த 2016 சட்டசபைத் தேர்தலில் 8,031 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்த ஜெயக்குமார், இப்போது 54,172 ஓட்டுகள் பின் தங்கியிருக்கிறார்.

சி.வி.சண்முகம்: விழுப்புரம் எம்.பி. தொகுதிக்குள் வரும் விழுப்புரம் சட்டசபைத் தொகுதியின் எம்.எல்.ஏ-தான் சி.வி.சண்முகம். இந்தத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணிக்கு 74,901 ஓட்டுகளும் தி.மு.க. கூட்டணிக்கு 87,989,ஓட்டுகளும் கிடைத்திருக்கின்றன. கடந்த சட்டசபைத் தேர்தலில் 22,291 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயித்த சி.வி.சண்முகம், இப்போது 13,088 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.
கே.பி.அன்பழகன்: அன்புமணி போட்டியிட்ட தர்மபுரி எம்.பி. தொகுதிக்குள்தான் அன்பழகனின் பாலக்கோடு சட்டசபைத் தொகுதி வருகிறது. இதில் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு 75,523 ஓட்டுகளும் தி.மு.க. கூட்டணிக்கு 97,927 ஓட்டுகளும் கிடைத்துள்ளன. அதாவது  22,404 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறார்.
எம்.சி.சம்பத்: இவருடைய கடலூர் சட்டசபைத் தொகுதியில் இப்போது அ.தி.மு.க. கூட்டணிக்குக் கிடைத்த ஓட்டுகள் 53,590. தி.மு.க. கூட்டணிக்குக் கிடைத்த ஓட்டுகள் 84,262. வாக்குவித்தியாசம் 30,672.
ஓ.எஸ்.மணியன்: இவரின் வேதாரண்யம் சட்டசபைத் தொகுதியில் இப்போது அ.தி.மு.க கூட்டணிக்குக் கிடைத்த ஓட்டுகள் 48,948. தி.மு.க. கூட்டணிக்குக் கிடைத்த ஓட்டுகள் 67,376. வாக்கு வித்தியாசம் 18,428.
சி.விஜயபாஸ்கர்: `குட்கா’ புகழ் விஜயபாஸ்கரின் சொந்தத் தொகுதி விராலிமலை, கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குள் வருகிறது. விராலிமலை தொகுதியில் இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்குக் கிடைத்த ஓட்டுகள் 40,104. தி.மு.க. கூட்டணிக்குக் கிடைத்த ஓட்டுகள் 1,06,352. வாக்கு வித்தியாசம் 66,248. கடந்த 2016 சட்டசபைத் தேர்தலில் 8,447 ஓட்டுகள் வித்தியாசத்தில் விஜயபாஸ்கர் ஜெயித்திருந்தார்.
கடம்பூர் ராஜு: தமிழக அமைச்சர்களில் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் 2016 சட்டசபைத் தேர்தலில் ஜெயித்தவர் கடம்பூர் ராஜு. கோவில்பட்டி தொகுதியில் 428 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயித்து அமைச்சர் ஆனார். அந்த கோவில்பட்டி தொகுதி தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதிக்குள் வருகிறது. இந்தத் தேர்தலில் கோவில்பட்டியில் அ.தி.மு.க கூட்டணிக்கு 32,048 ஓட்டுகளும் அ.தி.மு.க. கூட்டணிக்கு 89,944 ஓட்டுகளும் கிடைத்தன. வாக்கு வித்தியாசம் 57,896.
ஆர்.பி.உதயகுமார்: இவருடைய திருமங்கலம் சட்டசபைத் தொகுதிக்குள் இப்போது அ.தி.மு.க. கூட்டணிக்கு 59,616 ஓட்டுகளும் தி.மு.க. கூட்டணிக்கு  88,629 ஓட்டுகளும் கிடைத்துள்ளன.
கே.டி. ராஜேந்திர பாலாஜி: “மோடி எங்கள் டாடி” எனச் சொல்லும் ராஜேந்திர பாலாஜிக்கு, அவருடைய சட்டசபைத் தொகுதி வாக்காளர்கள் சரியான பாடம் கொடுத்திருக்கிறார்கள். அவரின் சிவகாசி சட்டசபைத் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணிக்கு 43,158 வாக்குகளும் தி.மு.க. கூட்டணிக்கு 80,863 வாக்குகளும் வழங்கியிருக்கிறார்கள். வாக்கு வித்தியாசம் 37,705.
பெஞ்சமின்: தமிழகத்தின் 30 அமைச்சர்களின் சொந்தத் தொகுதிகளில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றவர் பா.பெஞ்சமின்தான். இவருடைய மதுரவாயல் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி 47,171 வாக்குகளும் தி.மு.க கூட்டணி 1,35,901 ஓட்டுகளும் வாங்கியிருக்கிறது. வாக்கு வித்தியாசம் 88,730. இரண்டாவது இடத்தில் திண்டுக்கல் சீனிவாசன் இருக்கிறார். இவரின் சொந்தத் தொகுதியில் 83,374 வாக்கு வித்தியாசத்தில் தோற்றிருக்கிறார்.
மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்றதில் எடப்பாடி முதலிடத்தில் இருக்கிறார். அவரின் வாக்கு வித்தியாசம் 8,088. இரண்டாவது இடத்தில் செங்கோட்டையன் இருக்கிறார் வாக்கு வித்தியாசம் 9,959.
2016 சட்டசபைத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு வென்ற அமைச்சர்கள், இப்போது பா.ம.க., தே.மு.தி.க., பி.ஜே.பி., த.மா.கா. கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தும், முன்பைவிட கூடுதல் வாக்குகளை வாங்கவில்லை. மாறாக தோல்வி அடைந்திருக்கிறார்கள்.
vikatan.com

கருத்துகள் இல்லை: