வெள்ளி, 7 ஜூன், 2019

வட இந்தியர்களின் வேட்டைக் காடாகும் தமிழகம்.. த பெ தி க பொது கூட்டம் நடத்த நீதிமன்றம் தடை .


chennai high court news - 'ஒருங்கிணைந்த இந்தியாவை கூறு போட அனுமதிக்க முடியாது' - ஐகோர்ட் கடும் கண்டனம்'ஒருங்கிணைந்த இந்தியாவை கூறு போட அனுமதிக்க முடியாது' - ஐகோர்ட் கடும் கண்டனம்;
tamil.indianexpress.com : சர்தார் வல்லபாய் பட்டேல் போன்ற தலைவர்கள் அரும்பாடுபட்டு ஒருங்கிணைத்த இந்தியாவை, கூறு போட முயலும் செயலை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நாகை மாவட்டம், சீர்காழி பேருந்து நிலையம் அருகில், ஜூன் 8 ம் தேதி ( நாளை) ‘வட இந்தியர்களின் வேட்டைக் காடாகும் தமிழகம்’ என்ற பெயரில் பொது கூட்டம் நடத்த உள்ளதாகவும், தந்தை பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்த கோவை.ராமகிருஷ்ணன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்கும் இக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்து, சீர்காழி காவல் ஆய்வாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின், நாகை மாவட்ட செயலாளர் பெரியார் செல்வம் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வட இந்தியர்கள், தென் இந்தியர்கள் என்ற பிரிவினையை மக்களிடையே தூண்டும் வகையில் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யபட்டுள்ளதால், இந்த கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அரசுத் தரப்பின் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் சிறப்பம்சம்… சர்தார் வல்லபாய் பட்டேல் போன்ற தலைவர்கள் அரும்பாடுபட்டு ஒருங்கிணைந்த இந்தியாவை, கூறு போட முயலும் செயலை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கும் இது போன்ற கூட்டங்களுக்கு ஒரு போதும் அனுமதி வழங்க முடியாது என கண்டனம் தெரிவித்தார்.
வேறு தலைப்புடன் கூட்டம் நடத்துவது தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம் என அறிவுறுத்தி, விசாரணையை வரும் 14 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

கருத்துகள் இல்லை: