ஞாயிறு, 2 ஜூன், 2019

அசுதோஷ் சுக்லா இடமாற்றம் .. ஸ்டாலின் காரணமா ?

சுக்லாவை டிரான்ஸ்ஃபர் செய்த ஸ்டாலின்மின்னம்பலம் : நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வழக்கத்துக்கு மாறாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்படாத நிலையில்... எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை அடுத்து தமிழக டிஜிபியாக இருந்த டி.கே.ராஜேந்திரன் மாற்றப்பட்டு அசுதோஷ் சுக்லா தேர்தல் டிஜிபியாக நியமிக்கப்பட்டார்.
தேர்தல் முடிவுகள் வந்த சில தினங்களில் மே 31ம் தேதி தமிழக அரசு வெளியிட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றத்தில் அசுதோஷ் சுக்லா ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமுக்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுளளார். இது அதிகாரிகள் வட்டாரத்திலும் அரசியல் வட்டாரத்திலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலின்போது ஆளுங்கட்சிக்கு சாதகமாக இல்லை என்ற காரணத்தினாலேயே சுற்றுலா திடீர் மாற்றத்திற்கு உள்ளாகியிருக்கிறார் சுக்லா என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில். ஏற்கனவே சுக்லா பரிந்துரைத்த அதிகாரிகள் மாற்றத்தை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் அவரையே இப்போது மாற்றியிருக்கிறார்கள்.

இதுபற்றி காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது கூடுதல் தகவல்கள் கிடைத்தன.
“தேர்தல் முடிவுக்கு பின் தமிழக உளவுத்துறையில் இருந்து முதல்வர் எடப்பாடிக்கு சென்ற ரிப்போர்ட்டில் அதிகம் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி அசுதோஷ் சுக்லாதான். அவரைப் பற்றி முதல்வருக்கு அனுப்பப்பட்ட ரிப்போர்ட்டில், ‘தேர்தல் தொடர்பாக அதிகாரிகள் கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது சுக்லாவுக்கு போன் வரும். அப்போது, ஸ்டாலின் பேசுகிறார் என்று சொல்லியபடியே எழுந்து சென்று பேசிவிட்டு வருவார். பல பகுதிகளில் நடக்கும் முறைகேடுகள் பற்றி ஸ்டாலினே தன்னிடம் புகார் சொல்கிறார் என்றும், அடுத்து அவர்தான் வரப்போகிறார் என்றும் சுக்லா கூறியதாக அந்த ரிப்போர்ட்டில் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் கரூர் தொகுதியில் கடைசி நாளில் தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக திமுக -அதிமுகவினருக்கு இடையே நடந்த பிரச்சினைகளில் திமுகவுக்கு சாதகமாக சுக்லா முடிவெடுத்தார் என்றும் முதல்வருக்குத் தகவல் சென்றுள்ளது. இது மட்டுமல்ல கோவை காவல்துறை அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சில் பேசிய சுக்லா, ‘போலீஸ் ஜீப்புகள்ல பணம் எடுத்துட்டு போறதாக எனக்குத் தெரிய வந்திருக்கு. யாரா இருந்தாலும் அவங்க மேல கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எச்சரித்துள்ளார். இதையெல்லாம் ரிப்போர்ட்டாக தயாரித்து முதல்வருக்கு அனுப்பிய அதிகாரிகள் சுக்லாவுடன் ஸ்டாலின் நேரடி தொடர்பில் இருக்கிறார் என்று தெரிவித்திருந்தனர்.
இதையடுத்தே மண்டபத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார் சுக்லா. ஒருவகையில் சுக்லாவை டிரான்ஸ்ஃபர் செய்தது ஸ்டாலின்தான் என்கிறார்கள் ஐபிஎஸ் வட்டாரத்தில்
.

கருத்துகள் இல்லை: