புதன், 5 ஜூன், 2019

அ.தி.மு.க. நிர்வாகிகளை அழைத்து பேச முதல்வர் எடப்பாடி மறுப்பு.. கோட்டைக்குள் குத்து வெட்டு?

தினமலர் : நிர்வாகிகளை அழைத்து பேச முதல்வர் மறுப் சென்னை, : தேர்தல் தோல்வி குறித்து கட்சி நிர்வாகிகளை அழைத்து பேசாமல் அமைச்சர்கள்
மற்றும் எம்.எல்.ஏ.க்களை மட்டும் அழைத்து முதல்வர் பழனிசாமி பேசியது அ.தி.மு.க.வில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் கட்சிக்குள் போர் வெடிக்கும் சூழல் உருவாகி உள்ளது. லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க. மெகா கூட்டணி அமைத்தது. ஆனால் தேனி தவிர அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. சட்டசபை
இடைத்தேர்தலில் 22 தொகுதிகளில் ஒன்பதில் மட்டுமே வெற்றி பெற்றது. இரு தேர்தலிலும் கட்சி தோல்வியை சந்தித்துள்ள நிலையில் முதல்வர் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஒன்பது சட்டசபை தொகுதிகளில் வெற்றி கிடைத்ததை பெரிதாக கருதுகின்றனர். தி.மு.க. வெற்றி பெற்ற 13 சட்டசபை தொகுதிகளில் 12 தொகுதிகள் அ.தி.மு.க. வசம் இருந்தவை.
அவற்றை இழந்து விட்ட உணர்வு யாருக்கும் இல்லை. ஜெயலலிதா இருந்த போது தேர்தலில் தோல்வி ஏற்பட்டால் மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளை அழைத்து தோல்விக்கான காரணம் குறித்து விசாரிப்பார். கட்சி நிர்வாகிகள் கருத்தில் உண்மை இருந்தால் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளை அதிரடியாக நீக்குவார். இதனால் அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அதிரடிக்கு பயந்து தேர்தல் வேலை பார்த்தனர். தற்போது அந்த பயம் தலைமை நிர்வாகிகளுக்கு இல்லை.

அமைச்சர்கள் அனைவரும் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு 'சீட்' வாங்கி கொடுத்தனர். தங்களை மீறி யாரும் வளர்ந்து விடக்கூடாது என்பதில் தான் குறியாக இருந்தனர். அதனால் கட்சி நிர்வாகிகளை அரவணைத்து வேலை வாங்கவில்லை. அது தெரிந்தும் முதல்வர் மற்றும் துணை முதல்வர் கட்சி நிர்வாகிகளை அழைத்து தோல்விக்கான காரணம் குறித்து கேட்கவில்லை. மாறாக தோல்விக்கு காரணமான அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை அழைத்து பேசி உள்ளனர்.
இது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: < அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களும் தோல்விக்கான உண்மையான காரணத்தை கூறப் போவதில்லை. ஏனெனில் அதை தெரிவித்தால் அவர்களே சிக்கிக் கொள்வர். மாவட்ட வாரியாக நிர்வாகிகளை அழைத்து பேசியிருந்தால் தோல்விக்கான காரணம் கட்சி தலைமைக்கு தெரிய வந்திருக்கும். அப்படி செய்யாததால் கட்சியின் அனைத்து மட்டத்திலும் அதிருப்தி அதிகரித்துள்ளது. அது எப்போது வேண்டுமானாலும் போராக வெடிக்கும். அதற்குள் கட்சி தலைமை சுதாரித்தால் நல்லது.

அது இல்லாமல் ஆட்சிநீடித்தால் போதும் என கருதி அமைச்சர்களையும் எம்.எல்.ஏ.க்களையும் தாஜா செய்யும் நிலை தொடர்ந்தால் கட்சி காணாமல் போய் விடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை: