செவ்வாய், 19 பிப்ரவரி, 2019

பாஜகவோடு கூட்டணி: கோபத்தில்.. தனியரசு ,, கருணாஸ் ,, தமிமுன் அன்சாரி

மின்னம்பலம்:
பாஜகவோடு கூட்டணி:   கோபத்தில் மூவரணி!
அதிமுக பாஜக கூட்டணி உருவானதை இரட்டை இலை சின்னத்தில் நின்று வென்ற மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிப்படையாக எதிர்த்திருக்கிறார்கள். மனித நேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு, முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் ஆகிய மூவருமே இதுபற்றி வெளிப்படையாகக் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
மனித நேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரியிடம் இதுகுறித்து மின்னம்பலம் சார்பாக பேசினோம்.

“தமிழக நலன்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் பாஜகவோடு அதிமுக கூட்டணி வைத்திருப்பது என்பது தமிழ்நாட்டுக்கு எதிரான கூட்டணி. கடந்த ஐந்தாண்டு கால பாஜக ஆட்சியில் நீட் தேர்வு, விவசாயிகள் பிரச்சினைகள், மீனவர்கள் நலன் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தமிழர்களுக்கு எதிரான முடிவுகளையே பாஜக மேற்கொண்டிருக்கிறது.
இந்தியா முழுக்க மோடி எதிர்ப்பலை வீசுகிறது என்றால், தமிழகத்தில் மோடி வெறுப்பலை வீசுகிறது. இந்த நிலையில், நோட்டாவோடு போட்டி போடும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருப்பது அரசியல் தற்கொலைப் பாதையாகவே அமையும். இதை மனித நேய ஜனநாயகக் கட்சி கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ளாது. வரும் 28 ஆம் தேதி மஜகவின் தலைமை நிர்வாகக் குழு கூடும். அதில் எங்களின் அடுத்தகட்ட செயல்பாடுகளை முடிவு செய்வோம்” என்று தெரிவித்தார்.
கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசுவும், “மாநில உரிமைகளுக்காக போராடி நாட்டிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக அதிமுகவை உருவாக்கிய ஜெயலலிதாவின் அரசியல் நிலைப்பாடுக்கு எதிரான அணியாக அதிமுக பாஜக அணி அமைந்திருக்கிறது. இதை நான் கடுமையாக எதிர்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், “நான் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனவன் என்பதால் அதிமுகவை எதிர்த்து பிரசாரம் செய்வதில் சட்ட சிக்கல் இருக்கலாம். ஆனால் என் கருத்துகளை தொடர்ந்து சொல்வேன்” என்று இன்று மதுரையில் கூறினார்.

கருத்துகள் இல்லை: