ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

உலகின் கடும் பாதுகாப்பு வளையத்தில் உள்ள காஷ்மீர் சாலைகள்.. "என்னமோ பண்றாய்ங்க மாப்ள"


John Gladson : ராணுவ கான்வாய் (இந்த வார்த்தையை எழுதுறப்பவே புல்லரிக்கும்) நாளை காலை புறப்படுகிறதென்றால் இன்றிரவு ROP எனப்படும் Road Opening Party புறப்படும். நான்கு வாகனங்களில் புறப்படும் வீரர்கள் சாலையை அங்குலம் அங்குலமாக பாதுகாப்புடன் அலசுவார்கள். மறுநாள் காலையில் அவரவர் தெய்வங்களை வேண்டிய பின்னர் கான்வாயின் ரெட் flag வண்டி புறப்படும். அந்த வண்டி சென்றபின்னர் பொதுமக்கள் சாலையை தாண்டக்கூடாது. எனது மேலதிகாரி சொல்வார் "இந்திய பிரதமரே குறுக்கே வந்தாலும் கான்வாய் நிற்காது". கான்வாய் தலைவராக நியமிக்கப்படும் அதிகாரிக்கு வானளாவிய அதிகாரம் உண்டு. கான்வாயை பாதுகாக்க என்ன வேண்டுமானாலும் செய்வார். அனைத்து வீரர்களுக்கும் AK 47 கட்டாயம் உண்டு. உரி செக்டாரில் புறப்பட்டால் அடுத்த ட்ரான்சிஷன் கேம்பில் தான் கான்வாய் நிற்கும். கான்வாய் வாகனங்களை அவ்வளவு சீக்கிரம் அடித்து தூக்கி விட முடியாது. காரணம் கான்வாய் வாகனங்கள் அனைத்துமே ரஷியாவின்(செக்) Tatra ட்ரக்குகள். சாதாரண பாம்க்கு மயிராக்கூட மதிக்காது அந்த வாகனம். ராணுவம் வேற மாதிரி அப்படிப்பட்ட கான்வாயை தீவிரவாதிகள் தூக்கிய வரலாறு உண்டு.

அப்படியிருக்கையில் சம்பவம் நடந்த புல்வாமா உரி - ஸ்ரீநகர் கான்வாய் பாதையில் சிஆர்பிஎப் வீரர்களை ஒரு சாதாரண பேருந்தில் எப்படி கொண்டு சென்றார்கள் என்று இரண்டு நாளாக மண்டையை பிய்த்துக்கொண்டிருக்கிறேன். எனது ராணுவ நண்பர்களிடமும் கேட்டேன் அவர்களும் ஆச்சரியத்தில் தான் இருக்கிறார்கள். ஒரு நண்பன் சொன்னான், "என்னமோ பண்றாய்ங்க மாப்ள"
அந்த வார்த்தைகள் என்னமோ செய்கின்றன என்னை. அவர்களுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று மனது பதைக்கிறது. ஒவ்வொரு நாள் காலையிழும் எழுந்து தெய்வங்களை வேண்டுகிறேன். பாவப்பட்ட அந்த ஜென்மங்களுக்கு எந்த கெடுதலும் நடந்து விடக்கூடாது.
ராணுவத்தில் இருக்கும் காலத்தில் தான் அவர்களுக்கு குடும்பம் புள்ளக்குட்டின்னு சந்தோஷமான வாழ்க்கை இல்லை, ரிட்டயர்டாகியாச்சும் புள்ளக்குட்டியோட சந்தோஷமா இருக்கட்டும். மனைவிமார்கள் தங்கள் கணவனை இழந்து, குழந்தைகள் தங்கள் தந்தையை இழந்து தாய் தனது மகனை இழந்து வாடும் வலியை யாரும் அனுபவிக்க வேண்டாம். ராணுவ வீரர்களிடம் அன்பு செலுத்துங்கள். அவன் வெறும் சரக்கு பாட்டில் வாங்கிவரும் சாராய வியாபாரி அல்ல!
-ஜான்
(வாழ்வின் பொன்னான ஐந்தாண்டுகளை ராணுவத்தில் கழித்தவன்)

Post by John Gladson

கருத்துகள் இல்லை: