சனி, 23 பிப்ரவரி, 2019

எச் ராஜா இடத்தில் கமல்ஹாசன்... தொடரும் ஆரிய சேவைகள்

எசப்பாட்டு: எச் ராஜா இடத்தில் கமல்ஹாசன்?மின்னம்பலம் : தனியன் : வாரிசு அரசியலை எதிர்த்துப் போராட வரத் தயாரா என்று ராகுல் காந்தியிடம் கமல் நேரில் சென்று அழைப்பு விடுத்தபோது எடுத்த படம்தான் மேலே நீங்கள் காண்பது.
வர்ண பேதம் பார்த்துதான் கமல் வாரிசு அரசியலை எதிர்ப்பார்போல.
இல்லாவிட்டால் காஷ்மீர் பிராமண குடும்பத்து ஐந்தாம் தலைமுறை அரசியல் வாரிசிடம் வாயெல்லாம் பல்லாக இளித்தவர், கலைஞருக்கு எதிராகவும் அவரது முதல் தலைமுறை அரசியல் வாரிசுக்கு எதிராகவும் இவ்வளவு வன்மம் கக்குவது ஏன்?
வாரிசு அரசியல் என்கிற அளவுகோலை வைத்து அளப்பதாக இருந்தால் ராகுல், ஸ்டாலின் இருவரையும் அல்லவா கமல் எதிர்க்க வேண்டும்? நிராகரிக்க வேண்டும்?
மாறாக ராகுலை ஆதரித்தபடி ஸ்டாலினுக்கு எதிராக மட்டும் வாரிசு அரசியல் குற்றச்சாட்டு வைப்பது என்ன விதமான அரசியல் அறம்? இதைச் சுய சாதிப் பாசம் என்று ஏன் சொல்லக் கூடாது?
இதைத்தானே அதே செட்டிநாட்டு வட்டார இன்னொரு பிராமண குலதிலகமான எச். ராஜா இத்தனை காலமாகத் தமிழக அரசியலில் செய்து வந்தார்?

குறைந்தபட்சம் எச் ராஜா தனது சுயசாதிப் பாசத்தை மறைத்ததில்லை. பிராமணர் சங்கக் கூட்டங்களில் கலந்துகொண்டார். பிராமணர்களுக்காக பகிரங்கமாக வாதிட்டார். வம்பு வளர்த்தார். அதன் பலாபலன்களை அனுபவித்தார்.
ஆனால், கமல்ஹாசன் சாதி கடந்தவர்போலத் தன்னைக் காட்டிக்கொள்கிறார். கம்யூனிசம் பேசிப் படமெடுக்கிறார். பெரியார் திடலுக்கெல்லாம் தேடிவந்து தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறார். ஆனாலும், வாரிசு அரசியல் விமர்சனத்தில் ஒரு சாராரைத் தாக்குகிறார், மறு சாராரை விட்டுவிடுகிறார். இதற்குப் பின்னால் இருப்பது சாதிப் பாசம் அல்ல என்றால் வேறு என்ன?

இந்தத் தேர்தலில் பேசப்பட வேண்டிய பிரச்சினை என்ன?
கலைஞரின் ஒவ்வொரு ஆட்சியிலும் பல சலுகைகளையும் அனுபவித்துவிட்டு, இன்று அவர் மறைந்ததும் திடீரென கலைஞர் தான் வாரிசு அரசியலின் தோற்றுவாய் என்பதால் அவரது சொந்த ஊரான திருவாரூரில் போய் முழங்கப்போகிறேன் என்பதெல்லாம் என்னவிதமான அற விழுமிய அரசியல்?
நடக்கப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் மதிப்பிட வேண்டிய முதன்மையான விஷயம் மோடியின் ஐந்தாண்டு கால ஆட்சியும் அதன் சாதக, பாதகங்களும் தானே? அத்தோடு தமிழ்நாட்டில் எட்டு ஆண்டுகளாக நீடிக்கும் அதிமுக அரசின் அவலங்களும் கொடுங்கோன்மையும்தானே தமிழக அரசியலில் இந்தத் தேர்தலில் பேசப்பட வேண்டிய, விவாதிக்கப்பட வேண்டிய முதன்மையான விஷயங்கள்?
மோடி ஆட்சியும் எடப்பாடி ஆட்சியும் மதிப்பிடப்பட்டு அதற்கான வாக்காளர்களின் தீர்ப்பாக அமைய வேண்டிய இந்தத் தேர்தலில் மறைந்த கலைஞரை முதன்மை இலக்காக வைத்துக் களமாடக் கிளம்பியிருக்கும் கமலின் நோக்கம் என்ன? இவர் யாருடைய கைப்பாவையாக இதைச் செய்கிறார்? அதற்கான பலாபலன் என்ன?
இந்தத் தேர்தலில் தங்கள் ஆட்சிகளின் செயற்பாடுகள் முதன்மையான பேசுபொருளாக மாறக் கூடாது என்று மோடியும் எடப்பாடியும் விரும்புகிறார்கள். அப்படியொரு சூழலை அவர்கள் இருவரும் திட்டமிட்டு உருவாக்குகிறார்கள். அது புரிந்துகொள்ளக்கூடியதுதான்.
காரணம் இருவரின் ஆட்சியிலும் சொல்லிக்கொள்ளும்படியான சாதனைகள் இல்லை. மாறாக, சொல்லி மாளாத வேதனைகளும் கொடுமைகளும் நடந்திருக்கின்றன. தேர்தல் நேரத்தில் தம் ஆட்சிக்கால கொடுங்கோன்மைகளை, அதனால் மக்கள் பட்ட வேதனைகளையும் மறக்கடிக்க மோடியும் எடப்பாடியும் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறார்கள்.
ஆனால், கமலின் நோக்கம் என்ன? மோடி, எடப்பாடியின் குறைகளை விடுத்து, தேர்தல் சொல்லாடலைத் திசை திருப்புவதன் நோக்கம் என்ன?
எச் ராஜாவின் பேச்சு இப்போதெல்லாம் பாஜகவுக்கே பலனளிப்பதில்லை. குறிப்பாக தேர்தல் சமயத்தில் எச் ராஜாவால் பாதகம் ஏற்படும் என்று பாஜகவின் கூட்டணிக் கட்சியான அதிமுகவே அஞ்சுவதாகக் கூறப்படுகிறது. அவரது இடத்தை இட்டுநிரப்பும் வேலையைத்தான் கமல் ஆரம்பித்திருக்கிறாரா?
கமலின் இந்த வேலை இந்தத் தேர்தலோடு முடியும் என்றும் தோன்றவில்லை. அடுத்து தமிழ்நாட்டில் நடக்கப்போகும் சட்டமன்றத் தேர்தலிலும் கமல் தன் ஆரிய சேவையையும் திராவிட எதிர்ப்பையும் தொடர்ந்து முன்னெடுப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை: