செவ்வாய், 19 பிப்ரவரி, 2019

உஷாவுக்கு சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்!'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை

மாணவி கொலை செய்யப்பட்ட வீடு கொலை செய்யப்பட்ட  மாணவியின் சீருடை vikatan.com/ - s.magesh : திருத்தணி அருகே மாயமான மாணவி உஷாவின் எலும்புக்கூடு சில மாதங்களுக்குப்பிறகு கண்டெடுக்கப்பட்டுள்ளது. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருத்தணியை அடுத்த பள்ளிப்பட்டு அருகே உள்ள புதுவெங்கடாபுரத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. கூலித் தொழிலாளி. இவரின் மகள் உஷா (பெயர் மாற்றம்). அந்தப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவந்தார். இவரின் வீட்டுக்கும் பள்ளிக்கும் 5 கிலோ மீட்டர் தூரம். கரும்புத் தோட்டம் வழியாக குறுக்குப்பாதையில் பள்ளிக்குச் செல்லலாம். கடந்த 7.9.2018-ல் பள்ளிக்குச் சென்ற உஷா, அதன்பிறகு வீடு திரும்பவில்லை. மகளை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் சுப்பிரமணி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். 
 கொலை செய்யப்பட்ட மாணவியின் அப்பா சுப்பிரமணி இந்த நிலையில், கடந்த 11.2.2019-ல் கீச்சளம்  பகுதியில் உள்ள கரும்புத் தோட்டத்தின் அருகில் ஓடையில் மனித எலும்புகூடு கிடப்பதாகவும், அதன் அருகே மாணவியின் பள்ளிச் சீருடையிருப்பதாகவும் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனால் சம்பவ இடத்துக்கு திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.பொன்னி, டி.எஸ்.பி. சேகர் மற்றும் போலீஸார் வந்தனர். எலும்புக் கூடு, மாணவியின் பள்ளி சீருடையைக் கொண்டு போலீஸார் விசாரணை நடத்தியதில் மாயமான மாணவி உஷா எனத் தெரியவந்தது. இதையடுத்து, உஷாவை கொலை செய்தது யார் என்று போலீஸார் விசாரணை நடத்தினர்.  உஷாவை ஒருதலையாகக் காதலித்த வாலிபர் சங்கரய்யாவை போலீஸார் பிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

0
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``7.9.2018-ல் மாணவி உஷா, பள்ளிக்குச் செல்ல கரும்புத் தோட்டம் வழியாக சென்றுள்ளார். ஆள்நடமாட்டம் இல்லாத அந்தப் பகுதியில் மாணவி உஷாவை, சங்கரய்யா வழிமறித்துள்ளார். பிறகு, மாணவி உஷாவை, அந்தப் பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டுக்கு சங்கரய்யா அழைத்துச் சென்றுள்ளார். அப்போது வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரின் நண்பர்கள் வந்துள்ளனர். சங்கரய்யாவுக்கு குறிப்பிட்ட தொகையை கொடுத்த அவர்கள் மாணவி உஷாவை விட்டுவிட்டு செல்லும்படி கூறியுள்ளனர். பணத்தை வாங்கிய சங்கரய்யா, உஷாவை அவர்களிடம் விட்டுவிட்டுச் சென்றுள்ளார்.
அதன்பிறகுதான் மாணவி சித்ரவதை செய்யப்பட்டுக் கொலை செய்திருக்கிறார்கள். மாணவியை 5 நாள்களாக வீட்டிலேயே சிறைவைத்த அந்தக் கும்பல், அவரிடம் அநாகரிகமாக நடந்துள்ளனர். மாணவி மயக்கமாக இருக்க கஞ்சாவை சாக்லேட்டுக்குள் வைத்து கொடுத்துள்ளனர். அதைச்சாப்பிட்ட மாணவி மயக்கத்திலேயும் போதையிலும் இருந்துள்ளார்.
இந்தச்சமயத்தில்தான் மாணவியிடம் அவர்கள் தவறாக நடந்துள்ளனர். அதன்பிறகு அவரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு கீச்சாளம் பகுதியில் உள்ள கரும்புத் தோட்டத்தின் அருகில் உள்ள ஓடையில் புதைத்துவிட்டனர். மாணவியின் புத்தகப் பையை அந்தப் பகுதியில் மறைத்துவைத்துள்ளனர். இந்தச்சமயத்தில்தான் அந்தப்பகுதியில் மழை பெய்து ஓடையில் தண்ணீர் சென்றுள்ளது. இதனால், மணல் அரிக்கப்பட்டு மாணவியின் சடலம் வெளியில் தெரியவந்துள்ளது. மாதக்கணக்கில் மண்ணுக்குள் புதைந்திருந்ததால் எலும்புகூடானது. அந்த எலும்புக்கூடுதான் வெளியில் தெரிந்ததை கடலூர் மாவட்டத்திலிருந்து கரும்பு வெட்ட வந்தவர்கள் பார்த்துள்ளனர். மாணவி உஷாவைக் கொலை செய்த குற்றத்துக்காக நாதமுனி, கிருஷ்ணமூர்த்தி, ஜெகதீஷ், மோகன், சங்கரய்யா ஆகியோரை கைதுசெய்துள்ளோம்" என்றனர்.

இதற்கிடையில் போலீஸாரின் அலட்சிய போக்கால்தான் மாணவிக்கு இந்தக் கொடூரம் நிகழ்ந்துள்ளதாக அவரின் உறவினர்கள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து பேசிய மாணவியின் உறவினர்கள், ``மாணவி உஷா, ஸ்கூலில் நன்றாக படிப்பார். அவர்தான் நல்ல மதிப்பெண்கள் எடுத்துவந்தார். மாணவி உஷாவுக்கு ஒரு சகோதரர் இருக்கிறார். இந்த நிலையில், மாணவியை ஒருதலையாக காதலித்து தொந்தரவு செய்த சங்கரய்யாவால் உஷாவுக்கு இந்தநிலைமை ஏற்பட்டுள்ளது. மகள் வயதுடைய உஷாவிடம் அப்படி நடந்துகொள்ள அந்த மனித அரக்கர்களுக்கு எப்படிதான் மனம்வந்ததோ என்று தெரியவில்லை. பாவம், 5 நாள்களாக அவர்களின் சித்ரவதைகளை அனுபவித்து உஷா இறந்திருக்கிறாள். சம்பந்தப்பட்டவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். காணாமல் போன உஷா, என்றாவது உயிரோடு வருவார் என்ற நம்பிக்கையில் சுப்பிரமணியின் குடும்பத்தினர் இருந்தனர். தற்போது உஷாவின் எலும்புக்கூடு கிடைத்துள்ளது" என்றனர் கண்ணீருடன்.
மாணவியின் எலும்புக்கூடு
மாணவியின் அப்பா சுப்பிரமணி கூறுகையில், ``நான்தான் படிக்கவில்லை. என்னுடைய பிள்ளைகளை கஷ்டப்பட்டு படிக்கவைத்தேன். என்னுடைய மகள், சிறுவயதுமுதலே நன்றாக படிப்பாள். ஸ்கூலுக்கு ஒருநாள்கூட லீவ் எடுக்க மாட்டாள். டாக்டர் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள். அதற்காக கொத்தனார் வேலை, பால் கறந்து கஷ்டப்பட்டு என் மகளை படிக்க வைத்தேன். . ஆனால், அதற்குள் அவளுக்கு இந்தநிலைமை ஏற்பட்டுவிட்டது" என்றார் கண்ணீருடன்.
சுப்பிரமணியின் மனைவி எல்லாம்மாள் கூறுகையில், ``என் மகளுக்கு நேர்ந்த கொடுமை இனிமேல் வேறு எந்தப்பொண்ணுக்கும் நடக்கக்கூடாது. அம்மா, ஸ்கூலுக்குப் போயிட்டு வாறேன்னு சிரிச்சிட்டே சொல்லிவிட்டு போனாள். ஆனால், அவளை இப்படி பண்ணீட்டானுங்க பாவிகள். எலும்புக்கூடாக அவளைப் பார்க்கவா கஷ்டப்பட்டு பெத்துவளர்த்தேன்" என்று கண்ணீருடன் பேசியவரால் தொடர்ந்து பேச முடியவில்லை.
 கொலை செய்யப்பட்ட மாணவி வழக்கில் ஆஜராகும் வக்கீல் இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ள வழக்கறிஞர் அருள் கூறுகையில், ``மாணவி மாயமானவுடன் பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்த போலீஸார் கேட்ட கேள்விகளால் மனம் உடைந்துபோயிருக்கிறார். அதன்பிறகு சங்கரய்யாவின் மீதுள்ள சந்தேகத்தை போலீஸாரிடம் கூறியவுடன் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால், சங்கரய்யாவிடம் சரிவர விசாரிக்கவில்லை. விசாரித்திருந்தால் உஷாவை உயிரோடு காப்பாற்றியிருக்கலாம். தற்போதுகூட உஷாவின் வழக்கை பொதட்டூர்பேட்டை போலீஸார் சரிவர விசாரிக்கவில்லை. இதனால்தான் சி.பி.சி.ஐ.டி விசாரணை கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவுள்ளேன். மாணவி உஷாவுக்கு நீதி கேட்டு வீரபோயர் சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்துவருகிறது. இந்த வழக்கில் இன்னும் சிலருக்கு தொடர்பு இருக்கும் என்ற சந்தேகம் உள்ளது" என்றார்.
போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில்,``காட்டுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு மற்றும் மண்டை ஓடு ஆகியவற்றை பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளோம். மண்டை ஓட்டை சூப்பர் இம்போஸிங் செய்து மாணவி என்பதை உறுதி செய்வோம். பிறகு, கைதானவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மாணவி பள்ளிக்குச் செல்வதற்கு முன் சிலரின் வீட்டுக்குப் பால் கொண்டு வந்து கொடுப்பது வழக்கமாக வைத்துள்ளார். கைதான ஒருவரின் வீட்டுக்கு மாணவி உஷா பால் கொடுக்க செல்வது வழக்கம். இதனால் அந்த நபருக்கு மாணவி மீது நீண்ட காலமாக ஆசை இருந்துவந்துள்ளது. இவர்கள் எல்லோரும் கூட்டாக சேர்ந்துதான் மாணவியிடம் தவறாக நடந்துள்ளதாக விசாரணையின்போது தெரிவித்துள்ளனர்.
மேலும், மாணவி உஷாவை ஒருதலையாக காதலித்த சங்கரய்யா, வேலைக்கு எதுவும் செல்லாமல் பைக்கில் ஊர்சுற்றி வந்துள்ளார். அவர் மீது எங்களுக்கு ஆரம்பித்திலேயே சந்தேகம் இருந்தது. ஆனால், போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. மேலும், கைதானவர்கள் தங்களின் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். மாணவி மாயமான நாளிலிருந்து அவரைக் கண்டுபிடிக்க எங்களால் முடிந்த நடவடிக்கைகளை எடுத்துவந்தோம். மாணவியின் எலும்புக்கூடு கிடந்த பகுதி ஆள்நடமாட்டம் இல்லாதது என்பதால், அவரைக் கொலை செய்து அங்கு புதைத்துள்ளனர். கொலைக்குப் பயன்படுத்திய கத்தி மற்றும் மாணவியின் புத்தகப்பை ஆகியவற்றை மீட்டுள்ளோம். இந்த வழக்கில் கைதானவர்களுக்கு கடும் தண்டனை வாங்கிக் கொடுக்க நடவடிக்கை எடுப்போம்" என்றார்

கருத்துகள் இல்லை: