செவ்வாய், 19 பிப்ரவரி, 2019

நிர்மலாதேவி வழக்கில் புதுவேகம்!.. தடை உடைந்தது! பெரும் தலைகளுக்கு ....

murugan-karuppasamynirmaladeviநக்கீரன் : நிர்மலாதேவி வழக்கில் உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆய்வு மாணவர் கருப்பசாமிக்கும், ஒருவழியாக ஜாமீன் கிடைத்துவிட்டது. இவ்விருவரின் குடும்பத்தினரும் நம்மிடம் "உச்சநீதிமன்றம்வரை சென்றதனாலேயே இது சாத்தியமாயிற்று'’என்றார்கள் நெகிழ்ச்சியுடன்.
sujaமுருகனின் வழக்கறிஞர் சுரேஷ் நெப்போலியனை ஸ்ரீவில்லிபுத்தூரில் சந்தித்தோம். ""அடுத்து நிர்மலாதேவிக்கும் பெயில் கிடைச்சிரும். அவங்க வெளியே வந்தாங்கன்னா.. நிறைய உண்மைகள் வெளியே வரும். இந்த வழக்கின் பின்னால் இருந்து செயல்பட்டவங்க யார் யார்ங்கிறதும் வெளிச்சத்துக்கு வந்திரும். நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கு குறித்து நான் பேசக்கூடாது. ஆனா.. சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் தவறான அணுகுமுறை குறித்து விமர்சிக்க முடியும். தன்னைப் பெரிய பத்திரிகையாளர் என்று சொல்லிக்கொள்ளும் அவர், தமிழ்நாட்டில் இருந்துகொண்டு டெல்லி வரைக்கும் லாபி பண்ணுகிறார். அவருக்கு இன்னொரு அடையாளமும் உண்டு. காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்குநர் விஜயராஜனுக்காக, நிர்மலாதேவி வழக்கில் அவர் தலையிட்டார். அதன் காரணமாகவே, விஜயராஜன் பெயர் வழக்கில் சேர்க்கப்படவில்லை.


உயர்நீதிமன்ற வளாகத்தில் விஜயராஜனிடம் சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. என்ன சொன்னார் தெரியுமா? "உன்னாலதான் அவர் (நிர்மலாதேவி) ஜெயிலுக்குப் போறார். நீ சொன்ன ஐடியாவால இப்ப அவரோட நிலைமையைப் பாரு'ன்னு விஜயராஜனைத் திட்டியிருக்காங்க. அப்ப முருகன் அந்த எஸ்.பி.கிட்ட "அந்தம்மாவ (நிர்மலாதேவி) கூப்பிடுங்க. நான் எந்த பொம்பளப் பிள்ளையவாச்சும் கூப்பிட்டு வரச்சொன்னேனான்னு கேளுங்க'ன்னு சொல்லிருக்கார். முருகன் சொன்னது நிர்மலாதேவி காதில் விழ, அவராவே, "முருகன் என்கிட்ட அந்தமாதிரி எதுவும் சொல்லலை'ன்னு அந்த இடத்திலேயே மறுத்திருக்கார். அன்னைக்கு சொன்னதைத்தான், கடந்த ஜனவரி 30-ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட் வளாகத்தில் பத்திரிகையாளர்களிடம் சொன்னார். வெள்ளைப் பேப்பரில் கையெழுத்து வாங்கினார்கள். மிரட்டி வாங்கிய வாக்குமூலத்தில் முருகன், கருப்பசாமி பெயரை சி.பி.சி.ஐ.டி. போலீசார்தான் சேர்த்தாங்கன்னு. என்ன காரணத்துக்காக விஜயராஜனை வழக்கில் சேர்க்காமல் விட்டாங்க? இந்த சமாச்சாரமெல்லாம் இனி வெளியில் வரும்''’என்றார்.

நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியனோ, ""இனிமே நாங்க பெயிலுக்காக சுப்ரீம் கோர்ட் போக வேண்டியதில்ல. இங்கேயே பெயில் கிடைச்சிரும். ஆனாலும், அவரோட பழைய அட்வகேட் இன்னும் கேஸ் கட்டைக் கொடுக்காமலே இருக்காரு. நெறய சட்டத் தடைகளை உருவாக்கி வச்சிருக்காங்க. எல்லாத்தையும் உடைச்சிதான், நிர்மலாதேவியை பெயிலில் வெளிய கொண்டுவரணும்.

கடந்த 2-ஆம் தேதி சிறையிலிருந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு நிர்மலாதேவியை சிகிச்சைக்காகக் கூட்டிட்டுப் போனப்ப கடுமையா மிரட்டிருக்காங்க. எப்படி தெரியுமா? ‘"ஜாமீனுக்கு மூவ் பண்ணாத. நாடாளுமன்றத் தேர்தல் முடியட்டும். இந்தக் கேஸ்ல இருந்து உன்னை வெளிய கொண்டு வந்திருவோம். அப்புறம் கோர்ட்டுக்கோ, ஆஸ்பத்திரிக்கோ வர்றப்ப பேட்டி எதுவும் கொடுக்காத. அது உனக்கே ஆபத்தாயிரும். மொதல்ல நாங்க உனக்கு வேறு ஒரு வக்கீல் தர்றோம். நாடாளுமன்றத் தேர்தல் முடிஞ்சதும் கவர்னரே வெளி மாநிலத்துக்கு மாற்றலாகி போயிருவாரு'ன்னு ஒரு லேடி போலீஸ் அதிகாரி நிர்மலாதேவிகிட்ட பேசிருக்காங்க. அதுவும் கவர்னர் ஆபீஸ்ல இருந்து வர்றேன்னு சொல்லி, ரெண்டு மணி நேரம் முழுக்க முழுக்க ப்ரெய்ன் வாஷ் பண்ணிருக்காங்க. அந்த அதிகாரியை நிர்மலாதேவி முன்னபின்ன பார்த்ததே இல்லியாம். அன்னைக்கு ஆஸ்பத்திரியில நிர்மலாதேவிக்கு எந்த செக்கப்பும் பண்ணல''’என்றார்.

மதுரை மத்திய சிறையில் கடந்த 10 மாதங்களாக விசாரணைக் கைதிகளாக இருந்துவரும் முருகன் மற்றும் கருப்பசாமிக்கு உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்த பின்னணி இது:

கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் ரோஹிந்தன் பாலிநரிமன் மற்றும் நவீன்சின்ஹா அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக சி.பி.சி.ஐ.டி. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் யோகேஷ்கண்ணா, ஆதாரங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் கேட்டுப் பெற்றிருக்கிறார். மீண்டும் கடந்த 12-ஆம் தேதி பகல் 3:40 மணிக்கு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆதாரங்களுடனான பதில் மனுவை சி.பி.சி.ஐ.டி. தரப்பில் தாக்கல் செய்யாத நிலையில், முருகன் மற்றும் கருப்பசாமியின் வழக்கறிஞர் சஞ்சய்ஹெக்டேவிடம் நீதியரசர் ரோஹிந்தன் பாலிநரிமன் "ஐந்து நிமிடங்களுக்குள் முடிப்பதாக இருந்தால் வழக்கை எடுத்துக்கொள்கிறோம். இல்லையென்றால் நாளை பார்த்துக்கொள்ளலாம்'’ என்று கூற, "ஒரு நிமிடம் போதும்'’ என்றிருக்கிறார் சஞ்சய்ஹெக்டே. "ஒன்பதரை மாதங்களாக இருவரும் சிறையில் இருக்கிறார்கள். சார்ஜ்ஷீட் ஃபைல் பண்ணியாச்சு'’என்று சஞ்சய் ஹெக்டே வழக்கு குறித்து தெரிவித்ததும், ஜாமீன் வழங்கிவிட்டது அந்த அமர்வு.

முருகன் கைதான நாளிலிருந்து வழக்கறிஞர்களைச் சந்திப்பதும், நீதிமன்றங்களுக்கு அலைவதுமாக இருக்கும் அவருடைய மைத்துனி சுவிதா நம்மிடம், “""நிர்மலாதேவி வழக்கில் சில ஆண் குற்றவாளிகளைத் தப்பவிட்டிருக்கிறார் சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. ராஜேஸ்வரி. அவரையும், சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. முத்துசங்கரலிங்கம் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோரையும் தனிப்படை அமைத்து விசாரணைக்கு உட்படுத்தவேண்டும். ஆரம்பத்தில் என்னிடமும் என்னுடைய அக்கா சுஜாவிடமும், "வழக்கு குறித்து பத்திரிகையாளர்கள் யாரிடமும் எதுவும் பேசிவிடாதீர்கள்' என்று வழக்கறிஞர் ஒருவர் மூலம் அச்சத்தை ஏற்படுத்தினார்கள். கல்லூரி மாணவிகள், யார் யாருக்காக அழைக்கப்பட்டனர் என்ற கேள்வியை நிர்மலாதேவியிடம் கேட்பதைக் காட்டிலும், எஸ்.பி. ராஜேஸ்வரியைக் கேட்டால், அத்தனை மர்மங்களும் வெளிப்பட்டுவிடும். விசாரணை நடந்தபோது, சி.பி.சி.ஐ.டி. குழுவினர் யார் யாரிடம் பேசினார்கள் என்ற விபரங்களை, அவர்களுடைய செல்போன் எண்களை வைத்து, கால்-லிஸ்ட் எடுத்து ஆய்வு செய்தாலே போதும். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பலரும் மாட்டுவார்கள்'' ‘என்றார்.
lawyers
""என் கணவர் முருகனுக்கு ஜாமீன் கிடைக்கவிடாமல் சதி செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கும் அவர்களை ஆட்டிப்படைத்த மேலிடத்திற்கும் உச்சநீதிமன்றம் தந்த சம்மட்டி அடிதான் தற்போது கிடைத்திருக்கும் பெயில்''’’ என்று நம்மிடம் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சுஜா, “""ஆனாலும் பயமாகத்தான் இருக்கிறது. சிறையில் இருக்கும்போதே முருகனைக் கொல்லத் துடித்தவர்கள், வெளியில் வந்தபின்னால் விட்டு வைப்பார்களா? லாரி ஏற்றிக்கூட கொல்லப் பார்ப்பார்கள். நிர்மலாதேவிக்கு ஜாமீன் கிடைத்த பிறகு பாருங்கள். அமைச்சர்கள், பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் மட்டுமல்ல.. டில்லி வரைக்கும் தொடர்பு இருப்பது அம்பலமாகும். அவர்கள் யாரென்ற குட்டு வெளிப்படும்போது, மக்கள் காறித்துப்புவார்கள்.

இன்றைக்கு எங்கள் குடும்பம் மகிழ்ச்சியில் திளைக்கிறது என்றால், அதற்குக் காரணம் உண்மையின் பக்கம் நக்கீரன் அரணாக நின்றதுதான். அதற்குக் கோடானுகோடி நன்றிகள்''’’ என்று உணர்ச்சிவசப்பட்டார்.

இதனிடையே, இருவரின் ஜாமீனுக்குத் தடை பெறவும், நிர்மலாதேவி வெளியே வராமல் இருக்கவும் என்ன செய்யலாம் என மேலிட ஆலோசனைகள் தொடங்கியுள்ளனர்.

-சி.என்.இராமகிருஷ்ணன், அண்ணல்

கருத்துகள் இல்லை: