செவ்வாய், 19 பிப்ரவரி, 2019

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு: பியூஷ் கோயல் முன்னிலையில் ஒப்பந்தம்

THE HINDU TAMIL : 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கியுள்ள நிலையில், பாஜகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் இன்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் கையெழுத்தாகி உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் 2019-ம் ஆண்டு நடப்பதை ஒட்டி தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. அதில் அதிமுக கூட்டணியில் யார் யார் வருகின்றனர் என்கிற எதிர்ப்பார்ப்பு இருந்தது. பாமக, தேமுதிக தனியாக நிற்குமா? என்கிற கேள்வி எழுந்தது.
மிகப்பெரிய கூட்டணி அமைக்க உள்ளதாக தமிழிசையும்,  நல்ல கூட்டணி நிச்சயமாக அமையும் பார்க்கத்தான் போகிறீர்கள் என ஓபிஎஸ்ஸும் கூறிவந்தனர். இந்நிலையில் திடீரென பாஜக, பாமக, தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை கடந்த வாரம் தொடங்கியது.

பாஜக- அதிமுக கூட்டணி உறுதியாகிய நிலையில் பாமக கூட்டணி முதலில் உறுதிப்படுத்தப்ப்பட்டு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதிக தொகுதிகளைப்பெறும்  என எதிர்பார்க்கப்பட்ட பாஜகவுக்கு அதிமுக சார்பில் 5 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டது.
அமித் ஷா வந்து கூட்டணியை அறிவிப்பார் என்கிற நிலையில் அவர் வருகை ரத்து செய்யப்பட, பியூஷ் கோயல் நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் கூட்டணி இடங்கள் இறுதிப்படுத்தப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதற்கான அறிவிப்பை பியூஷ் கோயலுடன் இணைந்து ஓபிஎஸ் அறிவித்தார். கூட்டணி குறித்து பியூஷ்கோயல் பேசும்போது அதிமுகவுடன் கூட்டணி அமைந்தது மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.மோடியை  மீண்டும் பிரதமராக்க மெகா கூட்டணி அமைந்துள்ளது என்று புயூஷ் கோயல் குறிப்பிட்டார்.
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள், பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கிய நிலையில் அடுத்து தேமுதிகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. தேமுதிகவுக்கு இதில் 4 இடங்கள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது

கருத்துகள் இல்லை: