புதன், 11 அக்டோபர், 2017

கருவறைகளின் பூட்டை உடைத்த கேரளா முற்போக்கு அரசு


சிறப்புக் கட்டுரை: சாதிச் சுவர் மீது ஓர் உளி வீச்சு!
தீக்கதிர் :அ.குமரேசன்
“எப்பப் பார்த்தாலும் சாதிப் பிரச்னை பத்தியே பேசிக்கிட்டிருக்கீங்களே, எப்பத்தான் அதை நிறுத்துவீங்க?”
“சாதிப் பிரச்னை ஒழிகிறபோது...”
“அது ஒழிஞ்சிருச்சுன்னு எப்ப முடிவுக்கு வருவீங்க?”
“சாதியால் பாதிக்கப்பட்டவராக ஒரே ஒருவர் இருந்து, அவருக்கு எதிரான பாகுபாடு முடிவுக்கு வருகிறபோது...”
“இல்லாத ஒண்ணைப் பெரிசுபடுத்திக்கிட்டே இருக்கீங்க... இருந்தாலும் ஆல் தி பெஸ்ட்.”
தொலைக்காட்சி விவாதம் ஒன்றின் இடையே சாதியம் பற்றி நான் பேச, வாக்குவாதம் சூடாக, நிகழ்ச்சி முடிந்தபின் வந்த தேநீரைப் பருகியபடி, எதிர்வாதம் செய்தவருக்கும் எனக்கும் இடையே நடந்த உரையாடல் இது.
உலகம் முழுவதும் இருக்கக்கூடிய பாகுபாட்டு இழிவுகளிலேயே இந்தியாவின் அவமானமாகத் தொடர்வது சாதி. இந்தியாவின் அரசியல், சமூகம், ஆன்மிகம், மேல்மட்டம், கீழ்மட்டம் என எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது சாதி. எவ்வளவுக்கு எவ்வளவு இந்தச் சாதியக் கட்டமைப்பு வன்மம் மிக்கதோ அவ்வளவுக்கு அவ்வளவு அது நுட்பமானது. தான் மேலிருந்து நீளும் காலுக்குக் கீழே மிதிபடுவதில் ஆவேசப்படுவதற்கு மாறாக, தன் காலுக்குக் கீழே யாரோ மிதிபடுவதில் மனநிறைவு கொள்ளும் வக்கிரமான பின்னலமைப்பு இது.

சாதிய ஏற்பாடு ஒரு சமூக வேலைப் பிரிவினைதான் என்று வாதிடுவோர் உண்டு. அதில் உயர்வு தாழ்வு என்பது இடையில் வந்ததுதான், ஒழிக்கப்பட வேண்டியது அந்தப் பாகுபாடுதானேயன்றி சாதியும் வேலைப் பிரிவினையும் அல்ல, இணக்கமான வேலைப் பிரிவினை ஏற்பாட்டில் சீர்குலைவு ஏற்பட்டதுதான் இன்றைய சாதிப் பதற்றத்துக்குக் காரணம் என்று அவர்கள் சொல்கிறார்கள். வேலைப் பிரிவினை என்றால், அந்த வேலை ஒருவர் எதை விரும்பினார் என்ற அடிப்படையில் தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டு தேர்வு செய்வதாக அல்லவா இருக்க வேண்டும்? ஆனால், அவர் யாருக்குப் பிறந்தார் என்ற அடிப்படையில் தன்னை உட்படுத்திக்கொண்டு செய்ய வேண்டியதாக அல்லவா இருக்கிறது?
சாதியும் ‘முன்னேற்றமும்’
ஆர்.எஸ்.எஸ். கருத்தாளர்களில் ஒருவரான எஸ்.குருமூர்த்தி ஒரு விவாதத்தில், ஒரு தொழிலில் ஒரு சாதியினர் ஈடுபடுகிற பாரம்பர்யத்தால் இந்தியாவின் பல ஊர்கள் வளர்ச்சியடைந்திருக்கின்றன, அவர்களும் முன்னேறியிருக்கிறார்கள் என்று கூறினார். விருதுநகர் நாடார்கள் வணிகத்தில் ஈடுபட்டதால் அது வளர்ச்சியடைந்தது, அவர்களும் முன்னேறினார்கள் என்றார். வட மாநிலங்களில் சில ஊர்களைக் குறிப்பிட்டு, அந்த ஊர்களைச் சேர்ந்த குறிப்பிட்ட சமூகத்தினர் அந்த ஊர்களின் அடையாளங்களாக விளங்கும் தொழில்களில் ஈடுபட்டு வந்திருப்பதைத் தெரிவித்தார். நல்லது. மனிதக் கழிவுகளை அப்புறப்படுத்தும் “தொழில்”, அதில் ஈடுபட்டு வந்த சமூகத்தினரை முன்னேற்றியிருக்கிறதோ? அந்தத் தொழிலில் அந்த சமூகத்தினர் ஈடுபட்டதால் எந்த ஊர் வளர்ச்சியடைந்தது? சொல்லப்போனால் அவர்கள் இல்லையென்றால் எல்லா ஊர்களும் நாறிப்போகும். ஆனால் அவர்களுடைய வாழ்க்கையையும் சமூக மதிப்பையும் நாற்றத்தில் வைத்திருக்கின்றன எல்லாச் சாதிகளும்.
சாதி எப்படித் தோன்றியது என்பது குறித்த முக்கியமான ஆய்வுகள் பல ஏற்கெனவே வந்துள்ளன. இதில் இன்னும் விரிவான ஆய்வுகளும் மனம் திறந்த விவாதங்களும் தேவைப்படுகின்றன. முடிந்த முடிவான கருத்தாக, அவரவர் சார்பு நிலையில் நிற்பதாக, அதற்கு மேல் எதுவும் இல்லை என்று மாற்றுக் கருத்துகளை மறுப்பதாகத் தேங்கிப்போவது சாதியத்துக்கு முடிவுரை எழுதும் போராட்டத்துக்கு உதவியாக இருக்காது.
ஆனால், சாதி எப்படிப் பராமரிக்கப்படுகிறது என்பதைத் திட்டவட்டமாகச் சொல்ல முடியும். மையமாக இரண்டு இடங்கள் அந்த வேலையைச் செய்கின்றன. ஒன்று கோயில், இன்னொன்று திருமணக் கூடம்.
திருமணங்களைப் பொறுத்தவரையில் பொருத்தமான இணைகளைத் தேடுவதில் தொடங்கி, தாலியின் வடிவம் உள்ளிட்ட அனைத்துச் சடங்குகளும் சாதியை உறுதிப்படுத்துபவைதான். மணமக்களைச் சாதிக்குள் பிடித்து வைப்பவைதான்.
சமுதாய முன்னேற்றத்துக்குத் தடையாக இருப்பது கல்வியிலும் அரசுப் பணிகளிலும் உள்ள இட ஒதுக்கீடு ஏற்பாடுதான் என்று மட்டையடி அடிப்பவர்கள், காலங்காலமாகக் கோயில்களில் குறிப்பிட்ட சமூகத்தினர்தான், வர்ணத்தலை வழி பிறந்தவர்கள்தான் அர்ச்சகர்களாக இருக்க முடியும் என்ற இட ஒதுக்கீடு இருந்துவருவதை மறக்கிறார்கள். பிராமணர்கள்தான் அர்ச்சகர்களாக இருக்கிறார்கள் என்பது போல் பொதுவான தோற்றத்தில் தெரிந்தாலும், எல்லா பிராமணர்களும் கோயில் கருவறைக்குள் நுழைந்துவிட முடியாது. அவர்களிலும் குறிப்பிட்ட பிரிவினர்தான் என்று விதியாக்கப்பட்டிருக்கிறது.
கோட்டைக் கதவும் கோயில் சுவரும்
இட ஒதுக்கீட்டின் துணையோடு கோட்டைக் கதவுகளைத் திறந்துகொண்டு நுழைய முடிந்த சமூகநீதியால் கோயில் சுவர்களைத் தகர்த்து நுழைய முடியாமலே இருந்துவருகிறது. பெரியாரியப் பெண்ணியலாளர் ஓவியா கூறுவதுபோல, எல்லோரும் தலைகுனிந்து நிற்கிற இடத்தில், குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே அர்ச்சகர்களாவார்கள் என்பது பொதுப்புத்தியில் அவர்கள் மற்ற எல்லோரையும்விட உயர்ந்தவர்கள் எனப் பதியவைக்கிற சூக்குமமாக இருக்கிறது.
எல்லோருக்கும் பொதுவான ஆண்டவனின் ஆலயத்தில் குறிப்பிட்ட பிரிவினர் அர்ச்சனை செய்தால்தான் பக்தர்களின் வேண்டுதல் கடவுளைச் சென்றடையுமா, அவர்களின் அர்ச்சனை வழியாகத்தான் கடவுளின் கருணை பக்தர்களை வந்தடையுமா என்ற வினாக்கள், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமை என்ற முழக்கமாகப் பரிணமித்தது. நாத்திகரானாலும், இறை நம்பிக்கையாளர்களில் பெரும்பகுதியினருக்கு எதிரான இந்த அநீதியை எதிர்த்துப் போராட்டம் அறிவித்தார் பெரியார். இடதுசாரிகள் உட்பட பலரும் அந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக நின்றனர்.
1970இல் அன்றைய திமுக அரசு இதற்கான நடவடிக்கை எடுக்க உறுதியளித்தது. முதலமைச்சர் கலைஞர் அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான சட்டத்தைக் கொண்டுவந்தார். அர்ச்சனை உரிமை பாரம்பர்யமானது எனக் கூறி வழக்குத் தொடுக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் அந்தச் சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்தும்கூட, அதே தீர்ப்பில் நியமனங்களை எதிர்த்து வழக்குத் தொடுக்க இடமளிக்கப்பட்ட நிலையில் அதை நடைமுறைப்படுத்த முடியாமலிருந்தது. பெரியாரின் இதயத்தில் தைத்த முள் என்று இதைச் சித்திரித்த மு.கருணாநிதி 2006இல் முதலில் அவசரச் சட்டம் கொண்டுவந்தார். பின்னர் தனிச் சட்டமாகவே அறிவித்தார். இதற்கெனப் பயிற்சிப் பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டு சைவ, வைணவ ஆகமப் பாடங்கள் நடத்தப்பட்டன. அவற்றைப் பயின்று, தேர்வெழுதி, முறையான சான்றிதழ் பெற்றவர்கள், எல்லாச் சாதிகளையும் சேர்ந்தவர்கள், பணி நியமன ஆணைக்காகக் காத்திருந்தார்கள். இந்தப் புதிய சட்டத்தையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போடப்பட்டது. 2015இல் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், சட்டம் செல்லாது என்று அறிவிக்கவில்லை. ஆனால், நியமனங்கள் தொடர்பாக மறுப்பு இருக்குமானால் தனித்தனியே நீதிமன்றத்தை நாடலாம் என்று கூறியது. ஆயினும், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும் சரி, இப்போதும் சரி அதிமுக அரசு இதைச் செயல்படுத்தத் தயாராக இல்லை.
வழிகாட்டும் கேரளா
தமிழக நிலவரம் இப்படியாக இருக்கும் நிலையில், தனிப்பட்டவர்களோ மடாதிபதிகளோ யாரும் வழக்கின் முதுகுக்குப் பின்னால் பதுங்காத கேரளத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு, சாதியக் கோயில் சுவர்களைத் தகர்ப்பதற்கான ஒரு உளியை வீசியிருக்கிறது. 1949ஆம் ஆண்டிலிருந்தே கோயில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கப் போராட்டங்கள் நடந்துவந்துள்ள மாநிலம் கேரளம்.
மாநில அரசின் தேவசம் போர்டு (கோயில் நிர்வாக வாரியம்) பரிந்துரைத்ததன் அடிப்படையில், திருவிதாங்கூர் தேவசம் போர்டு, 62 அர்ச்சர்களை நியமிப்பதற்கான ஆணையைப் பிறப்பித்துள்ளது. இவர்களில் 6 பேர் தலித்துகள். 30 பேர் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள். வாரியத்தின் கீழ் உள்ள கோயில்களில் அர்ச்சகர் பணி அரசாங்க வேலை என்பதால், கேரளத்தில் நடைமுறையில் உள்ள தலித்துகள், பிற்படுத்தப்பட்டோருக்கான 32 இட ஒதுக்கீடு அடிப்படையில் 62 பேரில் 20 பேரும், பொதுப்போட்டியில் 16 பேருமாக இந்த 36 பேர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். மீதியள்ள 26 பேரும்கூட, அர்ச்சகர் பிள்ளை அர்ச்சகர் என்ற முறையில் அல்லாமல், அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றவர்களாவர். இனி வரும் காலத்திலும், வாரியத்தின் கோயில்களில் இதே நடைமுறை கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
“உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்புகளை அதிரடி என்று வர்ணிக்கிறார்கள், உண்மையில் பினராயி விஜயன் நடவடிக்கைதான் அதிரடி. சமூகநீதி வரலாற்றில் இது ஒரு திருப்புமுனை” என்கிறார் பேராசிரியர் அருணன்.
இப்போது தமிழக அரசு என்ன செய்யப் போகிறது? முன்பு எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோதும், பின்னர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும் அளித்த வாக்குறுதி தமிழக அரசு சார்பில் என்பதால், இன்றைய எடப்பாடி பழனிசாமி அரசையும் கட்டுப்படுத்துகிற உறுதிமொழியாகும் என்று சுட்டிக்காட்டுகிறார் திராவிடர் கழகம் தலைவர் கி. வீரமணி. திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எனப் பல தலைவர்களும் தமிழக அரசு இனியும் தாமதிக்காமல், பயிற்சி பெற்ற அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். எடப்பாடியார் அரசு இதற்கு செவிமடுக்குமா அல்லது மத்திய ஆட்சியாளர்களுக்கும் ஆளும் கட்சிக்கும் கசப்பாக இருக்குமே என்று பதுங்கிக்கொள்ளப்போகிறதா? தமிழக மக்கள் கவனித்துக்கொண்டிருப்பார்கள் என்பது உறுதி.

மக்கள் முன் ஒரு புதிய வரலாற்றை எழுதிக்கொண்டிருக்கிறது கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு. சமூகப் பணியாளர் முத்துகிருஷ்ணன் கூறியிருப்பது போல, இறை நம்பிக்கையாளர்களுக்கான சமூக நீதிப் போராட்டத்தை நடத்தியவர்கள், போராட்ட நியாயத்தை நடைமுறைப்படுத்த முனைந்தவர்கள், இப்போது முயல்கிறவர்கள் நாத்திகர்கள் என்பதையும் வரலாறு பதிவு செய்யும். பாவங்களைப் போக்கும் இடமாகக் கருதப்படும் கோயிலுக்கே தீட்டுப்பட்டுவிடும் என்பதாக ஒரு தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்ட கருவறைக்குள் மற்றவர்களும் இனி சமதையாக நுழைய முடியும் என்பது நாடு முழுவதும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும். தீண்டாமைக்குத் தீவைக்கவும், சாதியத்திற்குச் சவக்குழி தோண்டவும் களமிறங்கியிருப்போருக்கு அறத்துணையாகவும், அரசியல் வலிமையாகவும் தோள்கொடுத்திருக்கிறது கேரளம்.
(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: அ. குமரேசன். இதழாளர், மொழிபெயர்ப்பாளர், அரசியல் விமர்சகர். 30 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் அனுபவம் வாய்ந்தவர். ஆறு நூல்களை எழுதியுள்ள இவர் 25க்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளராகச் செயல்படுகிறார். தீக்கதிர் இதழின் சென்னைப் பதிப்பின் பொறுப்பாசிரியர். இவரைத் தொடர்புகொள்ள: theekathirasak@gmail.com)

கருத்துகள் இல்லை: