ஞாயிறு, 8 அக்டோபர், 2017

எனது மகள் மனித வெடிகுண்டாகக்கூடாது!

எனது மகள் மனித வெடிகுண்டாகக்கூடாது!
மின்னம்பலம் : கேரள லவ் ஜிகாத் வழக்கு இந்திய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தனது மகள் மனித வெடிகுண்டாக வேண்டாம் எனப் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த அகிலா என்ற இளம்பெண் கடந்த டிசம்பர் மாதம் ஷபின் ஜஹான் என்பவரைத் திருமணம் செய்தார். அதற்கு முன்பாகவே இஸ்லாம் மதத்துக்கு மாறிய அவர் தனது பெயரையும் ஹாதியா என்றும் மாற்றிக்கொண்டார். இந்நிலையில், தனது மகள் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்றும் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் அவரைச் சேர்க்க சதி நடப்பதாகவும் பெண்ணின் தந்தை கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்தத் திருமணம் லவ் ஜிகாத் என்றும், எனவே செல்லாது என்றும் கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து ஜஹான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் சமீபத்திய விசாரணையில், ஹாதியா - ஜஹான் இடையே நடந்த மத இணைப்பு திருமணத்தை தடை செய்ய கேரள உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. மேலும் பெண்ணை அவரது தந்தை கடந்த பலமாதங்களாக தன் பிடியில் வைத்திருப்பது கண்டனத்துக்கு உரியது. சட்டப்பிரிவு 226-ன் படி இந்தத் திருமணத்தை செல்லாது என்று உயர் நீதிமன்றம் அறிவிக்க முடியுமா, என்ஐஏ விசாரணை அவசியமா ஆகிய இரண்டு விவகாரங்கள் குறித்து தர்க்கபூர்வ சட்டப்பூர்வ வாதங்களை நாங்கள் கேட்போம் என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில், ஹாதியாவின் தந்தை அசோகன் இந்த விவகாரம் தொடர்பாக ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார். அதில், பல்வேறு ஆர்வலர்கள் எங்களுடைய குடும்பத்திற்கு எதிராகக் கடுமையான பிரசாரம் மேற்கொள்கிறார்கள், ஆனால் யாரும் பெற்றோர்களுடைய வேதனையை புரிந்து கொள்ள முயற்சிப்பது கிடையாது. எந்த ஒரு மதத்திற்கும், மதமாற்றத்திற்கும் நான் எதிரானவன் கிடையாது, ஆனால் மிகவும் மோசமான பகுதிகளுக்கு அப்பாவி சிறுமிகளை தள்ளும் தீய பிரசாரங்களுக்கு நான் எதிரானவன் என்று கூறியுள்ளார்.
மேலும், நான் பாசமாக வளர்த்த எனது ஒரே மகள், மனித வெடிகுண்டு ஆகவேண்டாம் எனக் கூறும் அவர், மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றிய ஜஹான் திருமணத்திற்காக மட்டும்தான் இங்கு வந்து உள்ளார் என்று குற்றஞ்சாட்டியுள்ளார். என்னுடைய மகளைத் திரும்ப அங்கே அழைத்துச் சென்று மோசமான இடங்களில் தள்ளிவிடலாம். நான் மட்டுமே நீதிமன்றத்தை நாடாமல் இருந்தால் எனது மகள் நிச்சயம் வேறு நாட்டுக்கு கடத்தி செல்லப்பட்டிருப்பாள் என தான் நீதிமன்றத்தை நாடியதற்கான காரணத்தையும் அவர் கூறியுள்ளார்.
சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற வன்முறை பிரதேசங்களுக்கு எந்தத் தந்தையும் தனது மகளை அனுப்ப மாட்டார். கேரளாவில் இருந்து சென்று ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த 21 பேரில் 6 பேர் கொல்லப்பட்டுவிட்டனர். அந்த 21 பேரின் பெற்றோர்கள் அனுபவிக்கும் அவஸ்தையை நானும் அனுபவிக்க வேண்டுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தனக்கு எந்த மதம் மீதும் நம்பிக்கையில்லை என்று தெரிவிக்கும் அவர், எனது மகள் சரியான வழியில் ஒரு இஸ்லாமிய பையனை திருமணம் செய்திருந்தால் மகிழ்ச்சியடைந்திருப்பேன் எனவும் கூறியுள்ளார். மேலும், தனது மகள் இதையெல்லாம் விரைவில் புரிந்துகொள்வாள் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்த வழக்கின் விசாரணையில் கேரள போலீசாரின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதாகவும், தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணை தேவையில்லை எனவும் கேரள அரசு உச்ச நீதிமன்றத்தின் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு நாளை (அக்.9) விசாரணைக்கு வரவுள்ளது.

கருத்துகள் இல்லை: