ஞாயிறு, 8 அக்டோபர், 2017

BBC : தமிழகத்தில் டெங்கு இதுவரை 35 பேர் உயிரழப்பு

தமிழகத்தில் 2017ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பல்வேறுவிதமான காய்ச்சலுக்கு 85 பேர் இறந்துள்ளதாகவும், அதில் 35 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி உள்ளதாகவும் தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் ஞாயிறு அன்று (அக்டோபர் 8) அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியபோது, மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பிற்கு ஆளான 10,000க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் தற்போது 165 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை எடுத்துவருவதாக கூறிய அவர், ''அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தகுந்த சிகிச்சை அளிக்கிறோம். டெங்கு நோய் அறிகுறிகள் பற்றியும் விழிப்புணர்வு நிகழ்சிகளை நடத்திவருகிறோம். தற்போதுவரை 392 நபர்களுக்கு ஆரம்ப கட்டத்தில் டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டு, உடனடி சிகிச்சை காரணமாக அவர்கள் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்,'' என்றார்.


35 நபர்கள் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர்<>டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கத்துடன் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை டெங்கு விழிப்புணர்வு நாளாக அனுசரிக்கப்படும் என்று முன்னதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பொது மக்களுக்கு மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் நிலவேம்பு கசாயம் இலவசமாக அளிக்கப்படுகிறது.
பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளில் டெங்கு விழிப்புணர்வு நாடகங்கள் நடத்தப்படுகின்றன என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதே நேரத்தில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றால் அந்த செலவுகளை அரசின் காப்பீடு திட்டத்தில் அளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா என தமிழக அரசு வரும் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 13)பதில் அளிக்கவேண்டும் என பொது நலவழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: