சனி, 14 அக்டோபர், 2017

பெண் கைதியை, ஆண் கைதி அறையில் தனிமையில் விட்ட சிறை காவலர்கள்


நக்கீரன் : புதுச்சேரி மத்திய சிறையில் முன்னாள் எம்.எல்.ஏ கொலை வழக்கில் கைதான பெண் கைதி ஒருவரை, ஆண்கள் சிறையில் உள்ள பிரபல தாதாவை தனிமையில் சந்திக்க அனுப்பி வைத்ததாக ஜெயில் துணை சூப்பிரண்டு மற்றும் 3 காவலர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி யூனியன் பிரதேசம் காலாப்பட்டில் மத்திய சிறை உள்ளது. இங்கு பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு 600 ஆண் கைதிகளும், 100 பெண் கைதிகளும் தனித்தனியாக உள்ளனர். கைதிகளுக்கு செல்போன் மற்றும் போதைப் பொருட்களை கொடுத்து உதவியதாக அண்மையில் சில சிறைக்காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் சிறை வரலாற்றில் முதல்முறையாக சினிமாவில் வருவது போல, ஆண்கைதி ஒருவர் விரும்பி அழைத்ததால் பெண் கைதி ஒருவரை அழைத்துச்சென்று சிறைக்குள் தனிமையில் சந்திக்க வைத்த நூதன சம்பவம் அரங்கேறி இருக்கிறது. புதுச்சேரி முன்னாள் அமைச்சர் வி.எம்.சி. சிவக்குமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்ட பெண் தாதா எழிலரசி தற்போது காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.


அவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையொட்டி காரைக்கால் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் எழிலரசி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. எழில் அரசியை, தாதா மர்டர் மணிகண்டன் என்பவரை சந்திக்க, விதியை மீறி ஆண்கள் சிறைக்கு அழைத்துச்சென்றதாக கூறப்பட்டது. தாதா மர்டர் மணிகண்டன் சிறையில் இருந்தபடியே வெளியில் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட வேலைகளை கூலிப்படையினர் மூலம் செய்துவருவதாக கூறப்படுகின்றது.

வி.எம்.சி சிவக்குமார் கொலையில் இவருக்கும் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டுவந்த நிலையில், பெண் கைதியான எழில் அரசியை , தாதா மர்டர் மணிகண்டனின் சிறை அறைக்கு அழைத்துச்சென்று தனிமையில் சந்திக்க வைத்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இதற்காக சம்பவத்தன்று பணியில் இருந்த சிறைத்துறையினர் லட்சகணக்கில் பணம் பெற்றதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக புதுச்சேரி ஐஜி பங்கஜ்குமார் ஜா விரிவான விசாரணை நடத்தியதில், எழில் அரசியும், மர்டர் மணிகண்டனும் தனிமையில் சந்திக்க ஏற்பாடு செய்த சம்பவம் உண்மை என்பது தெரியவந்தது. இதையடுத்து அப்போது பணியில் இருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தராஜ், முதன்மை வார்டன் வீரவாசு,வார்டன்கள் கலாவதி, பத்ம நாபன் உள்ளிட்டோர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

ஆண்கைதிகளும் பெண்கைதிகளும் சந்திக்க முடியாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் வார்டன்கள் பார்த்த இந்த வேலை சிறைத்துறைக்கு களங்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. தொடர்ந்து இந்த விவகாரம் புதுவை போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே எழிலரசி மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்யப்பட்டதற்கு அவரது தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.

மேலும் குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது எழிலரசி மீதான குண்டர் தடுப்பு சட்ட நடவடிக்கையை ஐகோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: