செவ்வாய், 10 அக்டோபர், 2017

க்மெர் ரூஜ் ( போல்போட்) ஏன் ஒரு சிறுமியின் தந்தையைக் கொன்றார்கள்?


கலையகம் : கம்போடியாவில், க்மெர் ரூஜ் கால கொடுமைகளை கூறுவதற்காக, பிரச்சார நோக்கில் எடுக்கப் பட்ட ஹாலிவூட் திரைப்படங்களுக்கு மத்தியில் First They Killed My Father ஒரு மாறுபட்ட படைப்பு எனலாம். நிச்சயமாக, இந்தப் படமும் க்மெர் ரூஜை வில்லன்களாக தான் சித்தரிக்கிறது. இருப்பினும் மிகைப்படுத்தல்கள் இல்லாமல், உண்மையில் நடந்த சம்பவங்களை மட்டும் படமாக்கியுள்ளனர்.
எண்பதுகளில் வெளியாகி, உலகம் முழுவதும் பிரபலமாக்கப் பட்ட, The Killing Fields என்ற, ஹாலிவூட்டின் அரசியல் பிரச்சாரப் படத்துடன் ஒப்பிடும் பொழுது, இது எவ்வளவோ மேல் என்று சொல்லலாம். இதுவும் அடிப்படையில் ஒரு க்மெர் ரூஜ் எதிர்ப்புப் படமாக இருந்தாலும், அன்று நடந்த சம்பவங்களை உள்ளதை உள்ளபடியே காட்டியிருக்கும் நேர்மையை பாராட்டலாம்.
இரண்டு திரைப்படங்களுக்கும் என்ன வித்தியாசம்? குறிப்பாக சொல்வதென்றால், The Killing Fields படத்தில் "க்மெர் ரூஜ் எனப்படுவோர் மனநோய் பிடித்த கொலைகாரர்கள்" என்பதைப் போல காட்டி இருப்பார்கள். ஏன் கொலை செய்தார்கள் என்ற கேள்வி எதுவும் கேட்கப் படாது. அதற்கான பதிலும் கிடைக்காது. க்மெர் ரூஜ் என்றால் ஈவிரக்கமற்ற கொலைகாரர்கள் என்ற பிம்பத்தை பார்ப்பவர் மனதில் பதிய வைக்க வேண்டும். அது தான் நோக்கம்.
First They Killed My Father திரைப்படத்தின் தொடக்கத்தில், தலைநகர் ப்னோம்பென்னில் வாழும் மத்தியதர வர்க்க குடும்பத்தைக் காட்டுகிறார்கள். ஒரு தகப்பன், தாய், மூன்று பிள்ளைகள். மூத்த பெண் பிள்ளைக்கு பன்னிரண்டு வயது இருக்கலாம். அவள் எழுதிய சுயசரிதையை தான் படமாக்கியுள்ளதாக கூறுகிறார்கள். கம்போடியாப் போரில் க்மெர் ரூஜ் வென்றதும், ப்னோம்பென் வாசிகளை வெளியேற்றுவதில் இருந்து படம் ஆரம்பிக்கிறது.
அவர்கள் முதலில் எனது தந்தையைக் கொன்றார்கள் என்ற தலைப்பின் படி, க்மெர் ரூஜ் அந்த சிறுமியின் தந்தையை கொன்ற பின்னர், குடும்பம் சிதறுகின்றது. பிள்ளைகள் தப்பியோடி வேறு இடங்களில் உள்ள க்மெர் ரூஜ் முகாம்களில் சரணடைகிறார்கள். வியட்நாம் படையெடுப்பின் பின்னர் ஒன்று சேருகிறார்கள். இதற்கிடையில், அவர்களது தாயையும் க்மெர் ரூஜ் கொன்று விட்டிருப்பார்கள். இது தான் கதைச் சுருக்கம்.
ஏன் க்மெர் ரூஜ் ஒரு சிறுமியின் தந்தையைக் கொன்றார்கள்? இதைப் போன்ற பல கேள்விகளுக்கான பதில்கள் அந்தப் படத்தில் உள்ளன. ஆனால், பார்ப்பவரின் வர்க்கத் தன்மைக்கு ஏற்றவாறு, அதை சரியாகவோ, தவறாகவோ புரிந்து கொள்ளலாம். அந்தத் தந்தையை வசதியாக வாழும் மத்தியதர வர்க்கப் பிரதிநிதியாக மட்டும் படத்தில் காட்டவில்லை. முந்திய அடக்குமுறை அரசில் பணியாற்றிய, இராணுவ சீருடை அணிந்த அதிகாரியாகவும் காட்டுகிறார்கள். க்மெர் ரூஜ் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் சென்ற பிறகு, அவரது உயிருக்கு எந்நேரமும் ஆபத்து வரலாம்.
எழுபதுகளில் வியட்நாம் யுத்தம் மும்முரமாக நடந்து கொண்டிருந்த காலகட்டம். கம்யூனிசத்தை தடுப்பது என்ற பெயரில் அமெரிக்கா கம்போடியாவிலும் இராணுவ நடவடிக்கைகளை எடுத்திருந்தது. அன்றிருந்த அமெரிக்க சார்பு கம்போடிய அரசு, அமெரிக்க இராணுவ உதவியுடன் சொந்த மக்களை அடக்கியொடுக்கி ஆண்டு வந்தது. அரச கொலைப் படையினரால் கொல்லப் பட்ட மக்கள் ஒரு புறம். அமெரிக்க விமானங்களின் குண்டுவீச்சுகளால் கொல்லப் பட்ட மக்கள் மறுபுறம். அப்போதே குறைந்தது இரண்டு மில்லியன் கம்போடிய மக்கள் இனப் படுகொலை செய்யப் பட்டனர்.(இதற்காக அமெரிக்கர்கள் யாரையும் ஐ.நா. நீதிமன்றம் விசாரிக்கவில்லை.)
இத்தகைய மனிதப் பேரவலங்களுக்கு மத்தியில் தான், கம்போடிய விடுதலைக்காக போராடிய க்மெர் ரூஜ் இயக்கம் வெற்றி மேல் வெற்றிகளை குவித்து தலைநகரைக் கைப்பற்றியது. அமெரிக்க சார்பு அடக்குமுறை அரசு கவிழ்ந்தது. இருந்தாலும் அதை இறுதி வெற்றியாக கருத முடியாது. எந்நேரமும் அமெரிக்க விமானங்கள் குண்டு வீச வரலாம். கம்யூனிசத்தை முளையிலே கிள்ளி ஏறிய வேண்டுமென்ற வெறியுடன் இலட்சக் கணக்கான மக்களை கொன்று குவித்த அமெரிக்கா, தற்போது கம்யூனிஸ்டுகள் ஆட்சியைக் கைப்பற்றி விட்டார்கள் என்றவுடன் சும்மா இருக்குமா?
மில்லியன் கணக்கான சனத்தொகை கொண்ட தலைநகர் ப்னோம்பென்னை விட்டு மக்களை வெளியேறுமாறு, க்மெர் ரூஜ் ஒலி பெருக்கிகளில் அறிவித்தார்கள். இந்தக் காட்சி திரைப்படத்தில் இடம்பெறுகின்றது. நெடுஞ் சாலைகளில், ஆயுதமேந்திய க்மெர் ரூஜ் படையணிகள் தலைநகரை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. அதே சாலையின் மறு புறத்தில், சாரி சாரியாக பொது மக்கள் கிராமங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
சுமார் இருபது வருடங்களுக்குப் பின்னர், ஈழத்தில், யாழ்ப்பாணக் குடாநாட்டில் அதே காட்சிகளைக் காணக் கூடியதாக இருந்தது. சிறிலங்கா இராணுவம், யாழ் குடாநாட்டை பிடிப்பதற்கான போர் நடந்து கொண்டிருந்தது. இராணுவம் வருவதற்கு முன்னர், யாழ்நகரில் இருந்து காங்கேசன்துறை வரையிலான அத்தனை ஊர்களிலும் இருந்த மக்கள் வெளியேற்றப் பட்டனர். தமிழ் மக்களின் பாதுகாப்புக் கருதியே இதைச் செய்வதாக புலிகள் கூறினார்கள்.
போகும் வழியில், க்மெர் ரூஜ் சோதனைச் சாவடிகளில், மக்கள் கொண்டு சென்ற ஆடம்பரப் பாவனைப் பொருட்கள் பறிக்கப் படுகின்றன. வசதியாக வாழ்ந்த மத்தியதர வர்க்க குடும்பங்களுக்கு இவையெல்லாம் "பெரிய இழப்புகள்" தான். ஆயினும், தனது உயிர்ப் பாதுகாப்பு கருதி, சிறுமியின் தந்தை எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இருப்பதை எல்லாம் கொடுத்து விட்டு நகர்கிறார்கள். க்மெர் ரூஜ் மக்களை சிறு சிறு குழுக்களாக பிரித்து வெவ்வேறு இடங்களுக்கு அனுப்புகிறார்கள். கிராமங்களில் அவர்களுக்கு எந்த வசதியும் இல்லை. தாமாகவே குடிசை வீடுகளை கட்டிக் கொள்ள வேண்டும்.
இங்கே குறிப்பிடப் பட வேண்டிய சில விடயங்கள் உள்ளன. எமது தாயகத்தில், நகரத்தில் வாழும் மத்தியதர வர்க்கத்தினர் உடுப்பதற்கும், கிராமங்களில் வாழும் ஏழை விவசாயிகள் உடுப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. ஒரு நாள், நகர மாந்தர்கள் எல்லோரும் கிராமப்புற உடைகளில் காட்சியளித்தால் எப்படி இருக்கும்? அந்த மாற்றம் தான் அப்போதைய கம்போடியாவில் நடந்தது. தலைநகரை விட்டுக் கிளம்பும் பொழுது, ஆடம்பரமாக உடையணிந்திருந்த நகர வாசிகள், க்மெர் ரூஜ் கிராமங்களில் சாதாரணமான ஏழை விவசாயிகளின் உடைகளை அணிய வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. மத்திய தர வர்க்கத்தினரை பொறுத்தவரையில் இது மிகப் பெரிய கொடுமை அல்லவா?
இதற்கு முன்னர் வந்த க்மெர் ரூஜ் எதிர்ப்புப் படங்களில், க்மெர் ரூஜ் தமது "தடுப்பு முகாம்களில்  குடும்பங்களைப் பிரித்து வைத்திருந்ததாக" காட்டி இருந்தனர். அதாவது, "ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் தனித் தனியாக பிரிக்கப் பட்டு வெவ்வேறு முகாம்களில் தங்க வைக்கப் பட்டதாக" சொல்லி இருந்தனர். அது வெறும் பிரச்சாரம். உண்மையில் அப்படி நடக்கவில்லை. இந்தப் படத்திலும், ஒவ்வொரு குடும்பமும் தனித் தனியான வீடுகளில் வசிப்பதாக காட்டுகிறார்கள். அவை மரத்தாலும், ஓலைகளாலும் கட்டப்பட்ட குடிசை வீடுகள் தான்.
க்மெர் ரூஜ் கிராமங்களில் பொருத்தப் பட்டுள்ள ஒலி பெருக்கிகளில்  மக்களுக்கான இயக்கத்தின் அறிவிப்புகள் மட்டுமல்லாது, அரசியல் பிரச்சாரப் பாடல்களும் ஒலிபரப்பாகின்றன. முன்னர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வாழ்ந்தவர்களுக்கு இது புதிய விடயம் அல்ல. ஊருக்கு ஊர் பொருத்தப்பட்ட ஒலிபெருக்கிகளில், புலிகளின் அறிவிப்புகளும், அரசியல் பிரச்சாரப் பாடல்களும் ஒலிபரப்பாகின. அப்போதெல்லாம் சினிமாப் பாடல்களை கேட்பதே அபூர்வம். 
கம்போடியாவில், க்மெர் ரூஜ் பொதுவாக மக்கள் மத்தியில் "இயக்கம்" என்றே அழைக்கப் பட்டது. "இயக்கம் அப்படிச் சொல்கிறது, இயக்கம் இப்படிச் சொல்கிறது" என்று தான் பேசிக் கொள்வார்கள். புலிகளின் de facto தமிழீழத்திலும் அதே நிலைமை தான் இருந்தது.
திரைப்படத்தில் வரும் குடும்பம், க்மெர் ரூஜ் சந்தேகப் பார்வை தம் மீது விழாமல் கவனமாக நடந்து கொள்கிறது. தமது கடந்த கால மத்தியதர வர்க்க அடையாளங்களை தாமாகவே மறைத்துக் கொள்கின்றனர். இருப்பினும் சிறுமியின் தந்தை யார் என்ற உண்மை ஒருநாள் தெரிய வருகின்றது. அவர்கள் இருக்கும் வீட்டிற்கு இரண்டு க்மெர் ரூஜ் போராளிகள் தந்தையை தேடி வருகிறார்கள். 
க்மெர் ரூஜ் யாரையாவது "தட்டி விட" நினைத்தால் எப்படி நடந்து கொள்ளும் என்பது மக்கள் அனைவருக்கும் தெரிந்திருந்தது. யாரையும் கண்ட இடத்தில் சுட்டுக் கொல்வதில்லை. அயலவருக்கு சந்தேகம் எழாதவாறு நடந்து கொள்வார்கள். அதன் படி, இந்தப் படத்தில் வரும் தந்தையையும் "உங்களோடு கதைக்க வேண்டும். வேறொரு இடத்தில் வேலைக்கு வரச் சொல்கிறார்கள்..." என்று கனிவாகப் பேசி அழைத்துச் செல்கிறார்கள். 
இருப்பினும் அவர்கள் தன்னை கொல்லத் தான் வந்திருக்கிறார்கள் என்பதை, அந்தத் தந்தை புரிந்து கொள்கிறார். குடும்ப உறுப்பினர்களுடன் பிரியாவிடை வாங்கிக் கொண்டு செல்கிறார். ஆளரவம் இல்லாத ஒதுக்குப்புறமான காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்ற பின்னர், க்மெர் ரூஜ் அவரை சுட்டுக் கொல்கின்றனர். 
ஈழத்தில் புலிகள் இருந்த காலத்திலும் இப்படித் தான் கைது செய்வார்கள். புலிகள் யாரையாவது கொல்வதாக இருந்தால், அவருடைய வீட்டுக்கு சென்று, "உங்களோடு கொஞ்சம் கதைக்க வேண்டும்... நாளைக்கு விட்டு விடுகிறோம்..." என்று சொல்லி அழைத்துச் செல்வார்கள்.
க்மெர் ரூஜ் காலத்தில், சில இடங்களில் உணவுப் பற்றாக்குறை இருந்திருக்கலாம். ஆனால், எல்லோரும் சேர்ந்து வேலை செய்த படியால், காய்கறித் தோட்டங்களிலும், வயல்களிலும் விளைச்சல் அதிகமாக இருந்தது. அதை இந்தப் படத்திலும் காட்டுகிறார்கள். இருப்பினும் அவற்றை உற்பத்தி செய்தவர்களுக்கு போதுமான அளவு பகிர்ந்து கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப் படுகின்றது. யாராவது பசியால் திருடினாலும் கடுமையாக தண்டிக்கப் பட்டனர். 
க்மெர் ரூஜ் மக்களை துன்புருத்திய காட்சிகள் படத்தில் வருகின்றன. அப்படி எதுவும் நடக்கவில்லை என்று சொல்ல முடியாது. இருப்பினும் நாடு முழுவதும் இது தான் நடந்தது என்று பொதுமைப் படுத்தவும் முடியாது. ஒவ்வொரு ஊரிலும் இருந்த பிரதேசப் பொறுப்பாளர்கள் ஒவ்வொருவிதமாக நடந்து கொண்டார்கள். க்மெர்ரூஜ் தமது அடாவடித்தனம் காரணமாக, சில இடங்களில் மக்களின் வெறுப்பை சம்பாதித்து இருந்தனர். அதேநேரம், வேறு இடங்களில் மக்களின் நன்மதிப்பை பெற்றிருந்தனர். 
க்மெர் ரூஜ் அரசுக்கும், வியட்நாமுக்கும் இடையிலான எல்லைப் போர், திரைப் படத்தில் திருப்புமுனையாக வருகின்றது. மீண்டும் ஒரு போருக்கு ஆயத்தப் படுத்துவதற்காக, க்மெர் ரூஜ் சிறுவர்களையும் படையணியில் சேர்த்துக் கொள்கிறது. அவர்களுக்கு கடுமையான பயிற்சிகள் வழங்கப் பட்டன. 
இதுவும் ஈழத்துடன் ஒப்பிடத் தக்கவாறு ஒரே மாதிரி நடந்துள்ளது. க்மெர் ரூஜ் மாதிரி, விடுதலைப் புலிகளும் சிறுவர்களை படையணிகளில் இணைத்தமை குறித்து கடுமையாக விமர்சிக்கப் பட்டனர். அதற்கு புலிகள் கூறிய பதில்களும், க்மெர் ரூஜ் கூறிய பதில்களும் ஒரே மாதிரி இருக்கின்றன. மேலும், இரண்டு இயக்கங்களும் அனாதைப் பிள்ளைகளை ஆயுதபாணிகள் ஆக்குவதில் அதிக அக்கறை காட்டியுள்ளன.
வியட்நாமிய படையெடுப்புக்கு பின்னர் தான், க்மெர் ரூஜ் பிடியில் இருந்த மக்களுக்கு விடுதலை கிடைத்தது என்று படத்தில் காட்டி இருக்கிறார்கள். இதுவும் ஒரு பக்கச் சார்பான பிரச்சாரம் தான். இராணுவ பலத்தில் மேலோங்கி இருந்த வியட்நாமிய படைகளை எதிர்த்துப் போரிட முடியாமல், க்மெர் ரூஜ் பின்வாங்கினார்கள். க்மெர் ரூஜ் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இருந்த மக்கள், வியட்நாமிய படையினர் பக்கத்திற்கு செல்கின்றனர்.
"வியட்நாமிய படையினர் க்மெர் ரூஜ் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து வந்த கம்போடியர்களை மனிதாபிமானத்துடன் நடத்தியதாக இந்தப் படத்தில் காண்பிக்கிறார்கள். வன்னியில் இறுதிப்போரின் பின்னர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து சென்ற தமிழ் மக்களை சிங்கள இராணுவம் மனிதாபிமானத்துடன் நடத்தியதாக சொல்லப் படுவதற்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. 
கம்போடியாவில் எல்லோரும் க்மெர்ரூஜை ஆதரிக்கவில்லை. அதே நேரம், கணிசமான அளவு தீவிர க்மெர் ரூஜ் ஆதரவாளர்களும் இருந்தனர் என்பதை மறுக்க முடியாது. இதையும் ஈழத்தின் நிலைமையுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்த அனைவரும் புலிகளை ஆதரிக்கவில்லை. ஆனால், தீவிர புலி ஆதரவாளர்களும் இருந்தனர். இரண்டும் மறுக்க முடியாத உண்மைகள் தான்.
இறுதியாக, திரைப் படத்தின் தலைப்புக்கு வருவோம். ஏன் க்மெர் ரூஜ் ஒரு சிறுமியின் தந்தையைக் கொன்றார்கள்? அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன: 
  1. இந்தப் படத்தின் நாயகியான சிறுமியின் தந்தை, முன்பிருந்த அடக்குமுறை அரசின் கீழ் அதிகாரியாக பணிபுரிந்தவர். அரசுடன் ஒத்துழைத்த அனைவரும், க்மெர் ரூஜ் பார்வையில் துரோகிகள் தான். அவர்களைப் பொறுத்தவரையில், துரோகிகளை அழிப்பது தவறல்ல. அதையே தான் ஈழத்தில் விடுதலைப் புலிகளும் செய்தனர். சிறிலங்கா அரசுடன் ஒத்துழைத்தவர்கள் தமிழர்களே ஆனாலும் துரோகிகளாக கருதப் பட்டு சுட்டுக் கொல்லப் பட்டனர். 
  2. க்மெர் ரூஜ் நம்பிய அரசியல் சித்தாந்தப் படி, பணக்காரர்களும், நகரங்களில் வசதியாக வாழ்ந்த மத்தியதர வர்க்கத்தினரும்,  மக்கள் விரோதிகளாக கருதப் பட்டனர். அதாவது, உடல் வருத்தி உழைக்கும் பாட்டாளி வர்க்க மக்களின் உழைப்பில், சொகுசாக வாழும் ஒட்டுண்ணிகளாக கருதப் பட்டனர்.
க்மெர் ரூஜ் போராளிகளில் பெரும்பான்மையானோர் சாதாரண கிராமப்புற, அடித்தட்டு வர்க்க இளைஞர்கள் தான். அவர்களது சமூகப் பின்னணி வேறு. படிப்பறிவில்லாத பாமர மக்களுக்கு மார்சியம் அல்லது கம்யூனிசம் பற்றி எதுவும் தெரியாது. ஆனால், வசதியாக, பணக்காரர்களாக வாழும் சமூகப் பிரிவினரை மனதிற்குள் வெறுத்திருப்பார்கள். க்மெர் ரூஜ் அந்த வர்க்க முரண்பாட்டை கூர்மைப் படுத்தி, அடித்தட்டு வர்க்க வாலிபர்களுக்கு அதிக சுதந்திரம் கொடுத்து, அவர்களை வர்க்க எதிரிகளுக்கு எதிராக திருப்பி விட்டது. இந்தப் பின்னணியில் தான், அங்கு நடந்த சித்திரவதைகள், படுகொலைகளையும் புரிந்து கொள்ள வேண்டும்.   http://kalaiy.blogspot.ca/

கருத்துகள் இல்லை: