செவ்வாய், 10 அக்டோபர், 2017

கமலஹாசன் – அதிமுக – நீட் அனிதா : மாபெரும் சர்வே முடிவுகள்.. வினவு .காம்

மிழகத்தின் நடப்பு அரசியல் குறித்தும் மோடி அரசு மூன்றாண்டுகளில் முன்னெடுத்த பொருளாதார நடவடிக்கைகள் குறித்தும் மக்களின் கருத்து என்ன? சென்னையில் மக்கள் கூடுமிடங்களில் அவர்களைச் சந்தித்து கருத்துக் கணிப்பு நடத்த திட்டமிட்டோம். கருத்துக்கணிப்பை துல்லியமாக மேற்கொள்ளவும் உடனடியாக முடிவுகளை வெளியிடவும் வசதியாக ஆண்டிராய்ட் செல்பேசி இயங்குதளத்திற்கென பிரத்யேகமான கருத்துக்கணிப்பு செயலி ஒன்றை எமது தொழில்நுட்ப பிரிவு உருவாக்கியது. இத்தகைய தொழில் நுட்பத்தில் நாங்கள் நடத்தும் இரண்டாவது கருத்துக் கணிப்பு இது.
உழைக்கும் மக்கள், வணிகர்கள் நிறைந்த பகுதியான சென்னை திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை மற்றும் தமிழக மக்களின் சுற்றுலாத் தலமான மெரினா கடற்கரைப் பகுதிகளை தெரிவு செய்தோம். இதன்படி சர்வே கருத்துக்கள் குறித்து சென்னை மற்றும் தமிழக மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதறிய முடியும். சோதனை முயற்சியாக திருச்சியிலும் சிறிய அளவில் ஒரு பகுதியை தெரிவு செய்தோம்.

சென்னையில் பதிமூன்று பேர் அடங்கிய செய்தியாளர் குழுவும், திருச்சியில் மூன்று தோழர்கள் அடங்கிய குழுவும் கேள்விகளுடன் மக்களைச் சந்திக்க களமிறங்கியது.
கமல்ஹாசனின் அரசியல் பேச்சுக்கள், அனிதா மரணம், அதிமுகவில் நிலவும் குழப்படிகள், மோடியின் பொருளாதார தாக்குதல்களான பணமதிப்பழிப்பு மற்றும் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு ஆகியவற்றை கருத்துக் கணிப்புக்கான கேள்விகளாகத் தெரிவு செய்தோம். இதோடு மக்களின் பொதுவான பொருளாதார நிலைமையைப் பரிசீலிக்க ஏதுவாக பண்டிகைக் கொண்டாட்டங்கள் குறித்தும், மோடி என்கிற ஆளுமையை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள ஒரு கேள்வி என மொத்தம் எட்டு கேள்விகளை இறுதி செய்திருந்தோம். எல்லாக் கேள்விகளுக்கும் அனைத்துக் கோணங்களிலும் விடையளிக்குமாறு பதில்களை கொடுத்திருந்தோம்.
கேள்விகளை ஒரு தாளில் அச்சிட்டு மக்களிடம் வாசிக்க கொடுத்து விட்டு அந்தக் கேள்விக்கான பதில்களை அவர்கள் சொல்லச்சொல்ல திறன்பேசியின் செயலியில் பதிவு செய்து கொண்டோம். இதன் மூலம், பதில்களைப் பதிவு செய்வதிலும் பின்னர் அவற்றைத் தொகுத்துப் பரிசீலிப்பதிலும் தவறுகள் நடப்பதைத் தவிர்த்துக் கொள்வதோடு முடிவுகளைத் துல்லியமாக கணிக்கவும் முடியும்.
கேட்கப்பட்ட எட்டுக் கேள்விகளை “தமிழக நிலைமை” மற்றும் பா.ஜ.க + பொருளாதாரம் எனப் பிரித்துக் கொண்டு முடிவுகளை வெளியிகிறோம். அந்த வகையில் இந்தப் பகுதியில் தமிழக அரசியல் நிலை குறித்த கருத்துக் கணிப்பு முடிவுகளைப் பார்ப்போம்.
தமிழக ஓட்டுக்கட்சிகளின் அரசியல் அரங்கில் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படும் “வெற்றிடத்தை” நிரப்பவுள்ள மீட்பராக ஊடகங்களால் முன்னிறுத்தப்படும் கமல்ஹாசன் பேசும் அரசியலைக் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள்?
கேள்வி : நடிகர் கமலஹாசன் பேசும் அரசியல் எது ?
  • திராவிட அரசியல்
  • கம்யூனிச அரசியல்
  • நடுநிலையான அரசியல்
  • பாஜக அரசியல்
  • குழப்பமான அரசியல்

மக்கள் கருத்து : நடிகர் கமலஹாசன் பேசும் அரசியல் எது ?
(i)     குழப்பமான அரசியல்            – 53.6% (663 – பேர்)
(ii)    நடுநிலையான அரசியல்     – 28.1%  (348 – பேர்)
(iii)   திராவிட அரசியல்                  – 6.7%     (83 – பேர்)
(iv)   பாஜக அரசியல்                        – 6.5%     (80 – பேர்)
(v)    கம்யூனிச அரசியல்                – 5.1%     (63 – பேர்)
தமிழக ஓட்டுக்கட்சிகளின் அரசியல் அரங்கில் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படும் “வெற்றிடத்தை” நிரப்பவுள்ள மீட்பராக ஊடகங்களால் முன்னிறுத்தப்படும் கமல்ஹாசன் பேசும் அரசியலைக் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள்?
“அவரு பேசறது அரசியலே இல்லைங்க” என்றார் ஒரு ஆட்டோ ஓட்டுனர். பெருவாரியானவர்கள் கமல் பேசுவது குழப்ப அரசியல் என்கிற விடையையே தெரிவு செய்தனர். எமது செய்தியாளர் குழு எதிர்கொண்ட ஒருசில கமல் இரசிகர்கள் “நடுநிலை அரசியல்” எனத் தெரிவு செய்தனர். அதில் ஒருவரோடு பேசிய போது, “கமல் வந்தாலும் எந்த மாற்றமும் வரப் போறதில்லை சார்.. ஆனா நான் இரசிகனாச்சே? எப்படி விட்டுக் கொடுக்க முடியும்.. அதான் ‘நடுநிலைன்னு’ போட்டிருக்கேன்” என்றார். அந்த வகையில் நடுநிலை ஆதரவையும் குழப்பம் என்றே வகை பிரிக்கலாம்.
தொழிலாளிகள் உள்ளிட்ட அடிப்படை வர்க்கத்தைச் சேர்ந்த மக்களில் பலர் கமலின் அரசியல் ”அதிரடிகளைக்” குறித்து அதிகம் அறியாதவர்களாக இருந்தனர்.  ட்விட்டரில் கமலைப் பின் தொடர்வதற்கு இவர்களிடம் விலைகூடிய திறன்பேசிகள் இல்லை என்பதோடு, ஆனந்த விகடனுக்கு வாராவாரம் 30 ரூபாய் தண்டம் கட்டி கமலின் ”புரட்சிகர” ஆவேசத்தை தரிசிக்கவும் இவர்களுக்கு வாய்ப்பில்லை.
“தொலைக்காட்சி விவாதங்கள்ல கமல் பேசியதை கேட்டிருப்பீங்களே?” என ஒருவரிடம் கேட்டோம்.
“அவரு எப்பைங்க புரியறா மாதிரி பேசறாப்ல?” என பதில் பதில் வந்தது.
“சரி, ஒருவேளை அவர் கட்சி ஆரம்பிச்சா அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துப் பார்த்தால் என்ன?” எனக் கேட்டோம்.
“சார், அவரு சினிமாக்காரர். இத்தனை நாள் அரசியல் பத்தி ஒன்னும் பேசாம இப்ப ஆளுங்க இல்லைன்னு அதிகாரத்தை பிடிக்க ஆசைப்படறார்.. அவருக்கு ஏன் ஓட்டுப் போடனும்? இத்தனை வருசத்துல எத்தினி போராட்டம் செய்தாரு.. எத்தினி வாட்டி ஜெயிலுக்கு போனாரு?” என எதிர்க் கேள்விகள் வந்து விழுந்தன.
அதிமுக தொண்டர் (ஓ.பி.எஸ் ஆதரவாளர் எனத் தன்னைச் சொல்லிக் கொண்டார்) ஒருவரிடம் இதே கேள்வியைக் கேட்ட போது சுவாரசியமான பதில் ஒன்றைச் சொன்னார்… ”சார் அரசியல்ன்னா சினிமா மாதிரி ஜாலின்னு அவருக்கு நினைப்பு இருக்கும் போல.. கிளைக்கழகம், ஒன்றியக் கழகம், மாவட்டக் கழகம், மாநிலக் குழு அப்படின்னு நிறைய இருக்கு.. அப்புறம் மாணவர் அணி, இளைஞர் அணி, வக்கீல் அணி, விவசாயிகள் அணி, தொழிலாளர் அணின்னு ஒவ்வொன்னுக்கு ஒவ்வொரு பிரிவு இருக்கனும்… இதெல்லாம் போக ஒவ்வொரு பூத்துக்கும், வார்ட்டுக்கும் ஆள் போடனும்.. இவரு கிட்டே எதுவுமே இல்லாம 100 நாள்ல தேர்தல் வந்தா சந்திப்பேன்னு எப்படி சொல்றார்னு தெரியலை” என்கிறார்.
ஒருசிலர் கமலின் தனிப்பட்ட ஒழுக்கத்தை விமரிசித்தும், பாராட்டியும் வேறு சிலர் அவருக்கு மண்டைகணம் அதிகம் என்றும் கருத்து தெரிவித்தனர். பொதுவில் கமலை ஒரு குழப்பவாதியாகவே மக்கள் கருதுவதைப் புரிந்து கொள்ள முடிந்தது.
திருபாய் அம்பானி ஊழல் பல செய்து தொழிலதிபரானாதையே தனது இலட்சிய அரசியல் பிரவேசத்தின் “இன்ஸ்பிரசேனாக” கருதும் கமலஹாசன், அரசியலில் தான் இடதோ, வலதோ அல்ல, இரண்டுக்கும் நடுவில் என்கிறார். இந்த நடு இடம் என்பது வலதின் மேக்கப் முகம் என்பதைக் கூட அறியாத பேரரறிஞர் அவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதில் அவர் வைத்திருக்கும் கருவி மூலம் விழும் இத்துப் போன பஞ்சரான டயலாக்குகளை பேசிவிட்டு என்ன இன்னும் கை தட்ட வில்லையே என்று அரங்கில் இருத்தி வைக்கப்பட்டிருக்கும் மக்களைப் பார்ப்பார் கமல். அரசியலையும் அவர் அவ்வளவு மலிவாக எடை போட்டாலும் மக்கள் அவரை வெயிட்டாகவே தீர்ப்பளித்து விட்டனர்.

***

அதிமுகவில் நடக்கும் கழுத்தறுப்புச் சண்டைகள் மற்றும் குழப்பங்களால் அந்தக் கட்சி அழிந்து போனால் அதனால் யாருக்கு நட்டம் என்கிற கேள்விக்கு மக்கள் எவ்வாறு பதிலளித்தனர்?
கேள்வி : அதிமுக அழிந்தால் யாருக்கு நட்டம் ?

  • தினகரன் – சசிகலா
  • ஓபிஎஸ் – எடப்பாடி
  • பாஜக
  • மக்கள்
  • மக்களைத் தவிர
    மற்ற அனைவருக்கும்

மக்கள் கருத்து : அதிமுக அழிந்தால் யாருக்கு நட்டம் ?

(i)    மக்களைத் தவிர
மற்ற அனைவருக்கும்  – 28.1% (348 – பேர்)
(ii)  மக்கள்                                  – 23%     (285 – பேர்)
(iii)  ஓபிஎஸ் – எடப்பாடி       – 19.2% (237 – பேர்)
(iv)  தினகரன் – சசிகலா         – 18.1% (224 – பேர்)
(v)   பாஜக                                    –  11.6% (143 – பேர்)
எடப்பாடி-பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா-தினகரன் கும்பல்களின் அக்கப்போர்களுக்கு அப்பால் ஜெயலலிதா புனிதராக இன்னும் பலரால் கருதப்படுகிறார். அதே நேரம் மக்களில் பலர் அதிமுக ஏற்கனவே அழிந்து போய் விட்டதென்றும், இனிமேல் புதிதாக அழிவதற்கு ஒன்றும் இல்லை என்றும் கருத்து தெரிவித்தனர். ஜெயா இருந்த வரை இவர்களெல்லாம் அடங்கிக் கிடந்தனர் என்பதை சுட்டிக்காட்டி “அந்தப் புண்ணியவதி போய்ச் சேர்ந்த ஒடனே நண்டு சிண்டுகளுக்கெல்லாம் கொழுப்பெடுத்துப் போச்சு” என்றார் ஒரு அம்மா.
கட்சி சாராத ஒரு நபர் ஜெயா என்னதான் கொள்ளையடித்தாலும் மக்களுக்கு ஏதோ செய்தார் என்றும், இப்போது நடக்கும் ஆட்சியில் கொள்ளை அடிப்பதற்கும் அதைப் பங்கு போடுவதற்குமே இவர்களுக்கு நேரமிருக்கிறது என்றும் சலித்துக் கொண்டார்.
மற்றபடி, அதிமுக ஒழிந்து போவது யாருக்கு நட்டமோ இல்லையோ மக்களுக்கு லாபம் என்பதே பெருவாரியானவர்களின் கருத்தாக இருந்தது. பலருக்கும் அதிமுக இன்றைக்கு அடைந்திருக்கும் திரிசங்கு நிலைக்கும், ஆட்சியின் அலங்கோலத்துக்கும் பாரதிய ஜனதாவே காரணம் என்கிற அபிப்பிராயம் இருந்ததைப் பார்க்க முடிந்தது.. “சேட்டுக் கட்சிக்காரனுங்க தமிழ்நாட்டை நாசமாக்கறதுக்கே அம்மாவை ஒழிச்சிக் கட்டிருப்பாங்க சார்” என்கிறார் இளநீர் விற்பவர் ஒருவர்.

***

கேள்வி : நீட் – அனிதா தற்கொலைக்கு காரணம் யார்?

  • தமிழக அரசு
  • மோடி அரசு
  • உச்சநீதி மன்றம்
  • எதிர்கட்சிகள்
  • எதிர்கட்சிகள் தவிர அனைவரும்

கேள்வி : நீட் – அனிதா தற்கொலைக்கு காரணம் யார்?

(i)    மோடி அரசு                                               – 45.8% (567 – பேர்)
(ii)   தமிழக அரசு                                             – 26%    (322 – பேர்)
(iii)  எதிர்கட்சிகள் தவிர அனைவரும்  – 17.1% (212 – பேர்)
(iv)  உச்சநீதி மன்றம்                                     – 6.4%  (79   – பேர்)
(v)   எதிர்கட்சிகள்                                            – 4.6%  (57   – பேர்)
அனிதாவின் மரணம் தொடர்பான கேள்விக்கு பரவலாக மத்திய மாநில அரசுகள் என்கிற விடையையே மக்கள் தெரிவு செய்தனர். வெகு சொற்பமானவர்களே நீதிமன்றத்தை குறிப்பிட்டனர். நீட் தேர்வை எதிர்த்து கருத்து தெரிவித்தவர்களில் சிலரும் அனிதாவின் மரணத்துக்கு அனிதாவே காரணம் எனக் குறிப்பிட்டனர். குறிப்பாக அடிப்படை வர்க்கத்தைச் சேர்ந்த தொழிலாளிகள், ”படிப்பு தான் வாழ்க்கையா நாங்களெல்லாம் படிக்காமல் பிழைக்கவில்லையா?” என்கிற ரீதியில் கருத்து தெரிவித்தனர். நீட் தேர்வை ஏழைகளுக்கு எதிரானதாக கருதுகின்றவர்கள் கூட அனிதா தற்கொலை செய்திருக்க கூடாது என்றும், போராடியிருக்க வேண்டும் எனவும் அவசரப்பட்டுவிட்டாள் எனவும் கருத்து தெரிவித்தனர். ஆனால் பெருவாரியான மக்கள் மோடி அரசையே குற்றவாளி என தீர்ப்பளித்தனர். இரண்டாவதாக தமிழக அரசு வருகின்றது. கிருஷ்ணசாமி வகையறாக்கள் கூறும் எதிர்க்கட்சிகளின் சதிக்கு மக்களின் ஆதரவில்லை. ஐந்தில் ஒரு பங்கு மக்கள் எதிர்க்கட்சிகள் தவிர அனைவரும் அனிதாவின் மரணத்திற்கு காரணம் என்றனர்.
இந்த எண்ணிக்கைதான் தமிழக அரசியலில் ஒரளவு அரசியல்படுத்தப்பட்டிருக்கும் பிரிவு. மற்ற கேள்விகளிலும் இதே அளவு எண்ணிக்கையை சரியான பதில்களுக்கு மக்கள் அளித்ததை பார்க்கும் போது தமிழகம் நடப்பு அரசியல் பிரச்சினைகளில் பொதுப்புத்தி அல்லது ஊடகங்கள் – ஆளும் வர்க்கங்கள் கட்டியமைக்கும் கருத்துலகிலிருந்து விடுபட்டு வருவதை பார்க்க முடிந்தது.
தமிழக மக்களிடம் மோடியின் செல்வாக்கு எப்படி இருக்கிறது? இந்த பிரிவில் வரும் ஐந்து கேள்விகளுக்கான பதில்களை நாளை பார்க்கலாம். இந்த சர்வேயில் மொத்தம் 1237 மக்கள் பங்கேற்றார்கள். முடிவுகளை மக்களின் எண்ணிக்கை அடிப்படையிலும், சதவீத அடிப்படையிலும் வரைபடங்களாக தருகிறோம்.
(தொடரும்)
– வினவு கருத்துக் கணிப்புக் குழு
வரைபடங்கள்: வேலன்.

கருத்துகள் இல்லை: