வெள்ளி, 13 அக்டோபர், 2017

தொடர்ந்து பிச்சை எடுப்பேன்: ரஷ்யர் சூழுரை !

தொடர்ந்து பிச்சை எடுப்பேன்: ரஷ்யர்!காஞ்சிபுரம் கோயிலில் பிச்சை எடுத்த ரஷ்யரை போலீசார் சென்னைக்கு அனுப்பிவைத்த பிறகும், நான் தொடர்ந்து பிச்சை எடுப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவைச் சேர்ந்த ஈவ்ஜெனீ பெர்ட்னி கோவ் (24) என்பவர் தகுந்த பாஸ்போர்ட் மற்றும் விசாவுடன், செப்டம்பர் 24ஆம் தேதியன்று இந்தியாவுக்கு வந்தார். அவர் அக்டோபர் 10 காலை சென்னையிலிருந்து காஞ்சிபுரத்துக்குச் சென்றுள்ளார். அங்கு, சில கோயில்களுக்குச் சென்று சுற்றிப் பார்த்த அவர், மேற்கு ராஜ வீதியிலுள்ள குமரக்கோட்டம் என்ற கோயில் அருகேயுள்ள ஏடிஎம் மையத்துக்குப் பணம் எடுக்கச் சென்றபோது பணம் வரவில்லை. இதையடுத்து, அவருடைய ஏ.டி.எம். அட்டையின் ரகசிய எண் முடக்கப்பட்டதாகக் குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதையடுத்து, சிவகாஞ்சி போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டார்கள். ரஷ்யத் துதரகத்தை அணுக அறிவுறுத்தி, சென்னை செல்வதற்குப் பணம் கொடுத்து அனுப்பி வைத்தனர். சென்னைக்கு வந்த அவர், தியாகராய நகரில் சுற்றிவந்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “ரஷ்யா-உக்ரைன் இடையே ராணுவ நடவடிக்கை காரணமாகப் பதற்றம் நிலவிவருகிறது. அதனால் நான் உக்ரைனிலிருந்து இந்தியாவுக்குச் சுற்றுலா விசாவில் வந்தேன். என் கையில் இந்திய ரூபாய் 4,000 மட்டுமே இருந்தது. ஏடிஎம் அட்டை முடக்கப்பட்டதால் செலவுக்காக காஞ்சிபுரத்தில் பிச்சை எடுத்தேன். இந்தச் செய்தி ஊடகங்களில் பரவியதால் சிலர் எனக்குப் பண உதவி செய்தனர். இங்கேயே தொடர்ந்து பிச்சை எடுப்பேன். அடுத்து, பெங்களூர் செல்ல இருக்கிறேன். என்னுடைய விசா நவம்பர் 22ஆம் தேதியுடன் முடிவடைகிறது என தெரிவித்துள்ளார்.
ரஷ்ய தூதரக அதிகாரிகள், எங்களிடம் அவர் எந்த உதவியும் கேட்கவில்லை. முறைப்படி உதவி கேட்டால் உதவி செய்வோம் என தெரிவித்தனர்.
இது குறித்து வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், “ஈவ்ஜெனீ, ரஷ்யா எங்களது நண்பன். சென்னையில் உள்ள வெளியுறவுத் துறை அதிகாரிகள் உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஈவ்ஜெனீ சீனா, தாய்லாந்து, கம்போடியா நாடுகளுக்குச் சென்றதன் அடையாளமாக அந்நாடுகளின் கொடிகளைத் தனது வலது தோள்பட்டையில் பச்சை குத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை: