ஞாயிறு, 8 அக்டோபர், 2017

மது போதையில் கார் ஓட்டி விபத்து; நடிகர் ஜெய்யின் ஓட்டுநர் உரிமம் 6 மாதம் ரத்து:

tamilthehindu : மது போதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் நடிகர் ஜெய்யின் ஓட்டுநர் உரிமத்தை 6 மாதம் ரத்து செய்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ஜெய் கடந்த மாதம் 21 ஆம் தேதி அதிகாலையில் குடிபோதையில் அடையாறு பாலத்தின் மீது காரை மோதினார். இதில் கார் மட்டும் சேதமடைந்தது. குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியது, வேகமாக காரை ஓட்டியது, ஆவணங்கள் இல்லாதது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீஸார் நடிகர் ஜெய்யை கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.
இந்த வழக்கு சைதாப்பேட்டை குற்றவியல் 4வது நடுவர் மன்றத்தின் முன் நடந்தது ஒரு தடவை ஆஜரான ஜெய் அதன் பின்னர் ஆஜராகவில்லை.

இதையடுத்து ஜெய்யை இரண்டு நாளில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி போலீஸாருக்கு நடுவர் ஆப்ரகாம் லிங்கன் உத்தரவிட்டார். இந்நிலையில், நடிகர் ஜெய் இன்று (அக்.7) நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இன்று காலை 10 மணிக்கே ஜெய் ஆஜரானார். அடையாளம் தெரியாமல் இருக்க தலையில் தொப்பி அணிந்து நண்பர்களுடன் ஆஜரானார்.
காலை 10 மணிக்கு முதல் வழக்காக ஜெய் வழக்கு வர நீங்கள் தான் ஜெய்யா? என்று குற்றவியல் நடுவர் கேட்க ஆமாம் என்று பணிவுடன் ஜெய் கூறினார். கூப்பிடுகிறேன் வெயிட் பண்ணுங்க என்று கூறிவிட்டு மற்ற வழக்குகளைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்.
பின்னர் 12 மணி அளவில் ஜெய் வழக்கை கையிலெடுத்த குற்றவியல் நடுவர் ஜெய்யிடம் உங்களுக்கு லைசென்ஸ் இருக்கிறதா? குடித்து விட்டு கார் ஓட்டினீர்களா? உங்கள் கார் நம்பர் பிளேட்டை ஏன் புரியாத அளவிற்கு எழுதியுள்ளீர்கள்? காருக்கு காப்பீடு சான்றிதழ் இருக்கிறதா? காருக்கு மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் இருக்கிறதா? சீட் பெல்ட் ஏன் அணியவில்லை? கார் கண்ணாடியில் கருப்பு கலர் பிலிம் ஒட்டியது ஏன்? என்பது போன்ற கேள்விகளை சரமாரியாக கேட்க பல கேள்விகளுக்கு ஆமாம், இல்லை என ஒற்றை வரியில் குனிந்த தலை நிமிராமல் பதில் சொன்னார் ஜெய்.
காரில் கருப்பு கலர் பிலிம் ஒட்டியதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை, வாகன சான்றிதழ், இன்ஷுரன்ஸ் உள்ளதா என ஏன் எப்.ஐ.ஆரில் குறிப்பிடவில்லை என்று போலீஸாரிடமும் கேள்வி எழுப்பினார். பின்னர் உணவு நேரம் வர குற்றவியல் நடுவர் சென்றுவிட்டார். வெளியில் சாப்பிட சென்றால் பத்திரிகைகாரர்களை சந்திக்க வேண்டுமே என்று ஜெய் நீதிமன்றத்தை விட்டு வெளியே வரவே இல்லை.
மதியம் மூன்றரை மணிக்கு பின்னர் சில வழக்குகளை கவனித்துவிட்டு ஜெய் பக்கம் திரும்பிய குற்றவியல் நடுவர் குற்றச்சாட்டுகளை கூறி ஒத்துக்கொள்கிறீர்களா? என கேட்க ஒத்துக்கொள்கிறேன் என்று ஜெய் கூற தனித்தனியாக ஒவ்வொரு குற்றத்திற்கும் அபராதத் தொகையை சொன்ன நடுவர் முடிவில் ரூ.5200 அபராதம் விதிப்பதாகவும், 6 மாத காலம் ஜெய்யின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வதாகவும் உத்தரவிட்டார்.
ஓட்டுநர் உரிமம் ரத்து உத்தரவை காவல் ஆணையருக்கு அனுப்ப உத்தரவிட்டார். பின்னர் அபராதத்தை செலுத்திய ஜெய் மீடியாக்கள் கண்களில் படாமல் இருக்க தனது நண்பரின் இருசக்கர வாகனத்தில் ஏறி பறந்தார்.

கருத்துகள் இல்லை: