திங்கள், 4 செப்டம்பர், 2017

அதிமுகவின் மத்திய அமைச்சர் கனவை தகர்த்தெறிந்த டாக்டர் அனிதா!

Sutha Oneindia Tamil டெல்லி: என்னதான் நாடாளுமன்றத்தில் 3வது பெரிய கட்சி என்று அதிமுகவினர் சுய தம்பட்டம் அடித்துக் கொண்டாலும் கூட அதை தற்போது கரிவேப்பிலை ரேஞ்சுக்குக் கொணடு போய் வைத்துள்ளது பாஜக. அமைச்சரவையில் அவர்களை சேர்க்கப் போவதாக செய்திகள் வெளியானாலும் கூட வெளியே தள்ளி கதவைச் சாத்தியுள்ளார் பிரதமர் மோடி. இன்றைய அமைச்சரவை மாற்றத்தில் அதிமுகவுக்கு இடம் கிடைக்கவில்லை. தம்பித்துரை, வேணுகோபால் அமைச்சராகப் போவதாக கூறப்பட்டது. எஸ்.ஆர்.பி பெயர் அடிபட்டது. ஆனால் யாருக்கும் எதுவும் கிடைக்கவில்லை. இன்றைய 9 புதிய அமைச்சர்களில் கேரளா, கர்நாடகவுக்குக் கூட இடம் கிடைத்துள்ளது. ஆனால் தமிழகத்திற்கு அல்வா கொடுத்து விட்டனர். அதிமுகவுக்கு ஏன் சீட் கிடைக்கவில்லை என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்தம் 3 கட்சிகளுக்கு பாஜக இன்று நாமம் போட்டுள்ளது. அதிமுக, சிவசேனா மற்றும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம். இதில் ஐக்கிய ஜனதாதளம் சமீபத்தில்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வந்து சேர்ந்தது. அதற்கும் இடம் தரவில்லை மோடி.


இருப்பினும் ஐக்கிய ஜனதாதளம் இப்போதைக்கு அமைச்சரவையில் சேர விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. எனவேதான் அதற்கு அமைச்சரவையில் பிரதமர் இடம் தரவில்லை என்றும் சொல்லப்படுகிறது. அதுதொடர்பான பேச்சுக்களே நடைபெறவில்லை என்று நிதிஷும் உறுதிப்படுத்தியுள்ளார். அதிமுகவுக்கு 2 இடம் தரப்படுவதாக நம்பப்பட்டது. பலரின் பெயர்களும் கூட அடிபட்டன. 2 இணை அமைச்சர், ஒரு கேபினட் அமைச்சர் என்று கூடதகவல்கள் வெளியாகின.
ஆனால் அனிதா விவகாரத்தால் அதிமுகவுக்கு கதவு சாத்தப்பட்டு விட்டதாக சொல்கிறார்கள். அனிதா விவகாரத்தை பாஜக தலைமை எதிர்பார்க்கவில்லை. மக்கள் மிகப் பெரிய கொந்தளிப்பில் இருக்கும் நிலையில் அதிமுகவை அமைச்சரவையில் சேர்த்து வேலியில் போன ஓணானை வேட்டிக்குள் எடுத்து விட்ட கதையாகி விடப் போகிறதே என்பதால்தான் அதிமுகவை சேர்க்கவில்லை என்று சொல்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் ஓபிஎஸ் இபிஎஸ் அணிகளாக அதிமுக இணைந்தாலும் கூட சசிகலா குரூப்தான் இன்னும் வலுவாக இருப்பதால் அவசரப்பட்டு இவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்க மோடி விரும்பவில்லையாம். இதுவும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மொத்தத்தில் தமிழக விவகாரத்தைப் பொறுத்தவரை சமீப காலமாக பாஜகவுக்கு பாதகமாகவே பல விஷயங்கள் நடந்து வருவது கண் கூடாக தெரிகிறது.

கருத்துகள் இல்லை: