வெள்ளி, 8 செப்டம்பர், 2017

சபரிமாலா :தேசத்துக்கு ஏதாவது செய்துவிட்டு என்னை விமர்சிக்கட்டும்

tamilthehindu :அரசுப் பணியில் சேர லட்சக் கணக்கானோர் காத்திருக்க, நீட் தேர்வை எதிர்த்து உண்ணாவிரதம் கிடைக்க அனுமதி அளிக்கவில்லை என்று கூறி, தனது அரசுப் பணியை ராஜினாமா செய்திருக்கிறார் சபரிமாலா.
இவரின் செயலுக்கு ஒரே நேரத்தில் பாராட்டுகளும் விமர்சனங்களும் குவிந்துவரும் வேளையில் சபரிமாலாவிடம் பேசினோம். உங்களின் ராஜினாமாவுக்கு அரசு உயர் அதிகாரிகள் தரப்பில் என்ன விமர்சனம் எழுந்தது?
இதுவரை எந்த அதிகாரிகளுமே கருத்து கூறவில்லை. ஆசிரியர்கள் 10 பேர் போனில் தொடர்புகொண்டு பேசினர். அவ்வளவுதான்.
ஆசிரியர்கள் என்ன எதிர்வினையாற்றினர்? உங்களுடன் பேசிய ஆசிரியர்கள் கூறியது என்ன?
ஆசிரியர்களோ, அதிகாரிகளோ பெரியளவில் எதையும் சொல்லவில்லை. போனில் பேசிய இரண்டு ஆசிரியர்கள் என்ன நடந்தாலும் உன்னுடன் இருப்போம் என்றனர். மற்றவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர், அவ்வளவுதான்.

இன்று நீங்கள் அடையாள உண்ணாவிரதம் இருந்தது குறித்து...
உண்ணாவிரதத்துக்கு அனுமதி கிடைக்காததால்தான் அரசு வேலையை ராஜினாமா செய்தேன். அதனால் ஆத்ம திருப்திக்காக திண்டிவனத்தில் உள்ள எங்களின் வீட்டுக்கு வெளியே இன்று (வெள்ளிக்கிழமை) ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தேன்.
ஆனால் என்னுடைய உண்ணாவிரதத்தை காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. உங்களைப் பார்க்க யாராவது வந்தால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி அனுமதியளிக்க மறுத்தனர். நான் அமைதியான முறையில்தான் போராட்டத்தில் ஈடுபடுவதாகக் கூறினேன். ஆனாலும் அனுமதி கிடைக்கவில்லை.
ராஜினாமாவுக்குப் பிறகு உங்கள் மகனைப் பள்ளிக்கு அனுப்பினீர்களா?
இல்லை. இன்று அவர் பள்ளிக்குச் செல்லவில்லை. நான் வேலை பார்த்த வைரபுரம் அரசுப் பள்ளியில்தான் அவர் படிக்கிறார். அங்கிருந்து டிசி வாங்கி, வீட்டுக்கு அருகேயுள்ள பள்ளியில் சேர்க்க எண்ணியுள்ளேன். அவரை மீண்டும் அரசுப் பள்ளியில்தான் சேர்ப்பேன்.
சமூக ஊடகங்களில் உங்களின் செயலுக்கான விமர்சனங்களைப் பார்த்தீர்களா?
பார்த்தேன். ஏராளமான இளைஞர்களும் வெளிநாடு வாழ் தமிழர்களும் ஆதரவுக் கரம் நீட்டி வருகின்றனர். அவர்களின் பதிவுகளைப் பார்க்கும்போது மிகுந்த நெகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களால் நம் தாய்நாட்டுக்கே பெருமை என்று மகிழ்ந்து பேசியவர்கள் ஏராளம்.
உங்களின் ராஜினாமா உணர்ச்சிவசப்பட்டு எடுத்த முடிவு என்று சொல்பவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
அப்படிச் சொல்பவர்களுக்கு நான் முதலில் சொல்ல நினைப்பது உங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேருங்கள் என்பதைத்தான். ''அவர்களை எல்லாத் தரப்பு மக்களுடனும் பழகவிட்டு, சமூக நீதிக்கு வழி செய்யுங்கள். என்னை விமர்சிக்கும் முன்பு நாட்டுக்கு ஏதாவது செய்துவிட்டு வாருங்கள். அப்போது நிச்சயம் உங்களின் விமர்சனங்களை ஏற்றுக் கொள்கிறேன்'' என்று சொல்ல ஆசைப்படுகிறேன்.
ஆசிரியைக்கு இருக்கும் சுயமரியாதை கூட ஆட்சியாளர்களுக்கு இல்லை என்று ஸ்டாலின் கருத்து தெரிவித்திருக்கிறாரே?
ஆம், அதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். நம் மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எனது செயலை வரவேற்றதில் சந்தோஷம்.
திருமாவளவன், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் எனது முடிவை வரவேற்றுள்ளனர். ஆனால் அதுமட்டும் போதாது. உரத்த குரலில் கல்விப் பிரச்சினைக்காக அனைவரும் தொடர்ந்து போராட வேண்டும். அரசியல் தலைவர்கள் எல்லோரும் நினைத்தால் முடியும். அதனால் கல்வியில் சம நீதி என்ற மாற்றம் நடக்கக் கூடும்.
ராஜினாமா செய்த பிறகு வந்த எதிர்வினைகளைக் குடும்பத்தினர் எப்படி எதிர்கொண்டனர்?
வேலையை விட்ட செய்தியைக் கேட்டு என் அம்மா நேற்று வீட்டில் இருந்து கோபித்துக் கொண்டு சென்றுவிட்டார். ஆனால் மக்கள் அளித்துவரும் வரவேற்பைப் பார்த்து இன்று மதியம் வீடு திரும்பிவிட்டார். செத்தால் கூட வீட்டுப் பக்கம் வரக்கூடாது என்று சொன்ன அப்பா இப்போது உலகமே அங்கீகாரம் அளித்தபிறகு, அம்மாவிடம் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.
எல்லோருமே அங்கீகாரத்துக்கு ஆசைப்படுபவர்கள்தான். இதற்கு தாயும் தந்தையும்கூட உட்பட்டு விட்டார்கள். ஆனால் நானும் என் கணவரும் மட்டுமே இவை எதையும் எதிர்பார்க்காமல் சுய மரியாதைக்காக மட்டுமே செயல்படுகிறோம். செயல்படுவோம்.
இவ்வாறு சபரிமாலா தெரிவித்தார்

கருத்துகள் இல்லை: