சனி, 9 செப்டம்பர், 2017

பீகார் :காலாவதியான ரத்தம்: எட்டு நோயாளிகள் உயிரிழப்பு!

காலாவதியான ரத்தம்: எட்டு நோயாளிகள் உயிரிழப்பு!
மின்னம்பலம் : பீகாரில் உள்ள மருத்துவமனையில் கடந்த இரண்டு வாரங்களில் காலாவதியான ரத்தம் ஏற்றப்பட்டதால் எட்டு நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் உள்ள தார்பாங்கா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நடந்த இந்தச் சம்பவம் ஜூனியர் மருத்துவர்களால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த மருத்துவமனையில் ரத்தம் அடைக்கப்பட்ட பைகளில் அச்சிடப்பட்ட பேட்ஜ் எண் மற்றும் தேதி சேதப்படுத்தப்பட்டு, நோயாளிகளுக்கு ஏற்றப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துக்கு மருத்துவமனையின் கண்காணிப்பாளர் சந்தோஷ் மிஷ்ரா மற்றும் துணை கண்காணிப்பாளர் பாலேஷ்வர் சாகர் ஆதரவாகச் செயல்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்த ஆறு நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் அனைத்துத்துறை தலைவர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிக்கையை ஒரு வாரத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ரத்தம் அடைக்கப்பட்ட பைகளில் உள்ள பேட்ஜ் எண் மற்றும் தேதி சேதப்படுத்தப்படவில்லை என ரத்த வங்கியின் பொறுப்பாளர் ஓம் பிரகாஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜூனியர் மருத்துவர் சூர்யா பிரகாஷ் கூறுகையில், “சில நோயாளிகள் ரத்தம் ஏற்றப்பட்ட பிறகு இறந்ததால், அவர்கள் உறவினர்கள் எங்களிடம் மோதலில் ஈடுபட்டனர். இந்த நிலையில், நல்ல நிலையில் இருந்த நோயாளிகள் ரத்தம் ஏற்றப்பட்ட சில நிமிடங்களிலேயே அவர்களின் உடல்நிலை மோசமானதையடுத்து, ஏதோ தவறு நடந்திருக்கிறது என்பதை எங்களால் உணர முடிந்தது. நாங்கள் உடனடியாக ரத்தம் செலுத்துவதை நிறுத்தினோம்” என தெரிவித்துள்ளார்.
மற்றொரு மருத்துவர் நீராஜ் சிங், “இந்தச் சம்பவத்துக்கு முழு விசாரணை நடத்த வேண்டும். இந்த சம்பவத்துக்கு ஜூனியர் மருத்துவர்களாகிய எங்களை பொறுப்பாக்கி உள்ளனர். மேலும், கோபம் அடைந்த உறவினர்களும் எங்கள் மீது கோபத்தில் உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
ஒருபுறம் மக்கள் ரத்தம் கிடைக்காமல் கஷ்டப்பட்டுவரும் நிலையில், மற்றொருபுறம் காலாவதியான ரத்தம் ஏற்றப்பட்டு மக்கள் மரணமடைகின்றனர். இதுமட்டுமல்லாமல், ரத்தம் வீணடிக்கப்படுகின்றனர். கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் ஆறு லட்சம் லிட்டர் ரத்தம் வீணாகியுள்ளதாகத் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: