ஞாயிறு, 18 ஜூன், 2017

கக்கூஸ் ஆயுதமாய் ஒரு ஆவணம் youtube இல் வெளியாகி உள்ளது


கீற்று: வேண்டியவர்களின் வீடுகளுக்கோ, மணவிழா போன்ற நிகழ்வுகள் நடக்கும் அரங்குகளுக்கோ, வணிக வளாகங்களுக்கோ போகிறபோது, அங்கே அவசரமாகப் போக வேண்டுமானால் “கக்கூஸ் எங்கே இருக்கிறது” என்று கேட்பதை நாசூக்குக் குறைவாகக் கருதி, “ரெஸ்ட் ரூம்” அல்லது “வாஷ் ரூம்” என்று குறிப்பிடுகிறோம். ‘கக்கூஸ்’ என்ற பெயரிலேயே ஒரு ஆவணப் படத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள் ‘இடப்பக்கம்’ குழுவினர். இந்தப் பெயரைச் சூட்டியிருப்பதிலேயே ஒரு நியாயச் சினம் வெளிப்படுகிறது.ஒன்றே முக்கால் மணி நேரம் படம் திரும்பத் திரும்ப ஒரே தளத்தில் இயங்குவது போலத் தெரிகிறது என்றாலும், அந்தத் தளத்தின் நீள அகலங்களைப் பல பரிமாணங்களில் காட்டுகிறது. அந்த நியாயச் சினம் பார்வையாளர்களைப் பற்றிக்கொள்ளச் செய்கிறது.அன்றாடம் மலக்குழியில் இறக்கிவிடப்படும் மனிதப் பிறவிகளின் உடல் வலி, மன வலி இரண்டும் மனக்குழியில் பதிவாகின்றன. சாலையில் குப்பை லாரி வழியை மறித்து நிற்கிறபோது, மூக்கைத் துளைக்கும் நெடியால் முகம் சுழிக்கிறோம். அதே லாரியில் தொற்றிக்கொண்டு செல்கிறவர்களின் வாழ்க்கைப் பாதை வழி மறிக்கப்பட்டிருப்பது பற்றிச் சிந்தித்திருப்போமா?
தங்களுடைய நிலைமை பற்றிச் சொல்வதற்குக் கூட தயங்குகிறார்கள். வேலையைப் பறித்துவிடுவார்கள் என்ற அச்சம். “ஏன் இந்த இழிவான வேலையைத்தான் செய்ய வேண்டுமா, வேறு வேலைக்குப் போக வேண்டியதுதானே,” என்ற கேள்விக்கு அவர்கள் சொல்கிற பதில்: “இதை விட்டால் வேறு எந்த வேலையும் எங்களுக்குத் தெரியாதே? இதையும் விட்டுவிட்டு உயிர்பிழைக்க நாங்கள் எங்கே போவது? எப்படி எங்கள் பிள்ளைகளுக்குப் பசியாற்றுவது?”இப்படி வாழ்கிறவர்களைப் பற்றித்தான் பிரதமர் நரேந்திர மோடி, பிரதமவராவதற்கு முன் தனது புத்தகத்தில், “இவர்கள் செய்வது புனிதமான பணி.
அதை மனமுவந்து செய்கிறார்கள்,” என்று எழுதினார். பெரும் எதிர்ப்புக்குப் பிறகு அந்தப் புத்தகம் விலக்கிக்கொள்ளப்பட்டது. புத்தகத்தை விலக்கவே அப்படியொரு போராட்டம் தேவைப்பட்டது என்றால், இந்த மக்களுக்கு எதிரான பாகுபாடுகளையும் தீண்டாமைக் கொடுமைகளையும் விலக்கச் செய்வதற்கு எத்தனை நெடிய, வலிய போராட்டம் தேவைப்படும்! கையால் மலமள்ளும் வேலைக்குக் கட்டாயப்படுத்தப்பட்டவர்களை வதைப்பது மலச் சகதிகளும் சிறுநீர்க்குளங்களும் மட்டுமா? பொதுக்கழிப்பறைகளில் பொறுப்பின்றிப் போடப்படும் சானிட்டரி நாப்கின்கள், குப்பைத்தொட்டிகளில் வீசப்படும் டையாப்பர்கள், மருத்துவமனைகளால் கடத்தப்படும் கழிவுகள், சாக்கடைகளில் உடைந்து கிடந்து கால்களைக் கிழிக்கும் பாட்டில்கள், உடல் அழுகிக்கிடக்கும் கால்நடைகள், குடல் வீங்கி மிதக்கும் மனித உடல்கள்… இவர்களுக்கு ஒப்பந்ததாரர்கள் “குவார்ட்டர்” வாங்கிக்கொடுப்பதன் நோக்கம் இவர்களது வேதனையைப் போக்குவதல்ல, கோபத்தை மழுங்கடிக்கவே என்பதைப் புரிந்துகொள்ளலாம்.கையுறைகள், மேலங்கி போன்ற குறைந்தபட்ச பாதுகாப்புப் பொருள்களைக் கூட வழங்காத ஒப்பந்ததாரர் ஒருவர், ஆவணப்படக்குழுவினர் ஒளிப்பதிவு செய்துகொண்டிருப்பதைக் கேள்விப்பட்டு அவசர அவசரமாக அந்தப் பொருள்களைக் கொண்டுவந்து, படக்குழுவினர் கண்ணெதிரிலேயே (கேமரா எதிரிலேயே) கொடுக்கிறார்! பொருள்கள் வழங்கப்பட்டதற்கு ஆதாரமாக அதைத் தனது கேமாராவில் படமெடுத்துக்கொள்கிறார்! இது வேடிக்கை அல்ல… எப்படியெல்லாம் இவர்கள் ஏமாற்றப்பட்டு வந்திருக்கிறார்கள் என்பதற்கான ஒரு சிறு சாட்சியம்தான். போதாக்குறைக்கு, தலித் அமைப்புகளைச் சேர்ந்த சிலரே கூட இவர்களை ஏமாற்றியிருப்பது பற்றியும் படம் குறிப்பிடுகிறது.மாநகராட்சிகளிலும் நகராட்சிகளிலும் ஊராட்சிகளிலும் துப்புரவுப் பணிகள் தனியார் ஒப்பந்தத்துக்கு விடப்படுவதில், ஊழலைத் தாண்டி இன்னொரு உள்நோக்கம் உள்ளது. விழிப்புற்றவர்களாக இவர்கள் ஒன்றுபடுவதையும் சங்கமாகத் திரள்வதையும் தடுக்கிற வஞ்சகத்தைப் படம் சுட்டிக்காட்டுகிறது.இப்படியான மோசடிகளை விடக் கொடுமையானது, ஒட்டுமொத்தமாக பிற பிரிவுகளின் மக்கள் இவர்களை அருவருப்புக்குரியவர்களாக ஒதுக்குகிற மிக மிக அருவருப்பான செயல். சாதியம் இன்னும் கெட்டியாக இருப்பதற்குக் காரணமே, ஒவ்வொரு சாதியும், தான் மேலிருந்து மிதிக்கப்படுவதில் ஆவேசம் கொள்வதற்கு மாறாக, தன் காலில் மிதிபட இன்னொரு சாதி இருப்பதில் அந்த ஆவேசத்தைத் தொலைத்துவிடுவதுதான். கழிப்பிடங்களுக்கு விரட்டப்பட்ட அருந்ததி மக்களைத் தங்களுக்கு நிகரானவர்களாக ஏற்க மறுக்கிற, தாழ்த்தப்பட்ட பிரிவுகள் இதற்குச் சரியான எடுத்துக்காட்டு.சாதியமும் பெண்ணடிமைத்தனமும் இரட்டைப் பிறவிகள். எல்லாச் சமூகங்களிலும் பெண்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டவர்கள்தான். துப்புரவு வேலையிலும் ஆணாதிக்க அசிங்கம் நாறுகிறது. மலக் குவியல்களைக் கழுவுவது உள்ளிட்ட பணிகள் பெண்கள் மேல் திணிக்கப்படுகின்றன. அவர்களுடைய மேனியோடு அப்பிக்கொள்ளும் நாற்றத்தின் காரணமாகச் சொந்தக் குழந்தைகள் கூட ஒதுக்குவது எப்பேற்பட்ட சோகம்!பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட “நவீன” (?) டாய்லட்டுகள் முதல், திரைப்பட நட்சத்திரங்களை விளம்பர முகவர்களாக்கிப் பரப்பப்பட்ட ‘ஸ்வச் பாரத்’ துடைப்பங்கள் வரையில் இந்த மக்களைக் கழிப்பறைகளுக்குள்ளேயே சிறைப்படுத்துகிற நுட்பமான சதி எடுத்துக்காட்டப்படுவது முக்கியமானது.போராடிப் பெற்ற இட ஒதுக்கீடு உரிமை இருந்தபோதிலும், சமுதாயப் புறக்கணிப்புகளால், தொழிலாளிகளின் கதை மரணக்குழியில் முடிந்து போவதால், விடாமல் துரத்தும் வறுமையால் இக்குடும்பங்களின் பிள்ளைகள் பள்ளிப் படிப்பைக் கைவிட்டு, குப்பை வண்டி தள்ள நேரிடுகிறது. கல்லாமல் பாகம்படுகிற – அல்ல, அல்ல, கற்க விடாமல் பாகம்படுகிற – இந்தக் குலத்தொழில் நடப்பை, இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு முன் யாரும் ஊகித்திருக்க முடியாது.
இவர்களை இப்படியெல்லாம் ஒதுக்குகிறவர்களின், சுரண்டுகிறவர்களின் மன நிலை என்ன? எப்படி இந்த அநீதிகளை நியாயப்படுத்துகிறார்கள்? அதையும் பதிவு செய்திருந்தால் கூடுதல் பரிமாணம் கிடைத்திருக்கும்.பொதுவுடைமை இயக்கத்தினர் தீண்டாமை ஒழிப்பு என்றுதான் சொல்கிறார்களேயன்றி, சாதி ஒழிப்பு பற்றிப் பேச மாட்டேனென்கிறார்கள் என்ற விமர்சனத்தைப் படத்தில் சிலர் ஆராயாமல் சொல்கிறார்கள். ஏற்கெனவே இயக்கத்தின் சார்பில் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் தீண்டாமை ஒழிப்பு என்பது அடிப்படையில் சாதிய எதிர்ப்பே. இதையும் கேட்டுப்பெற்று இணைத்திருக்கலாம். ஆயினும் இந்தியச் சமுதாயத்தில் வர்க்கப் போராட்டமும் சாதியச் சமூக ஏற்பாட்டிற்கு எதிரான போராட்டமும் சமதளத்தில் இயங்குபவை, இயங்க வேண்டியவை என்ற செய்தி உரக்கச் சொல்லப்படுகிறது. இதில் மார்க்சியவாதிகளின் நிலைபாட்டை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச்செயலாளர் சாமுவேல் ராஜ் கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஆதித் தமிழர் பேரவைத் தலைவர் அதியமான், ஆதித் தமிழர் கட்சித் தலைவர் ஜக்கையன், தில்லியின் துப்புரவுத் தொழிலாளர் அமைப்புத் தலைவர் பெஜவாடா வில்சன், சிபிஐ-எம்எல் (லிபரேசன்) தலைவர் எஸ்.கே.குமாரசாமி, பிரகாஷ் அம்பேத்கர் நலச்சங்கத் தலைவர் அன்புவேந்தன், பேராசிரியர் லட்சுமணன் உள்ளிட்டோர் கூறுகிற கருத்துகளும் கூர்ந்து உள்வாங்கப்பட வேண்டியவை.படம் மக்களிடையே செல்கிறபோது சாதிய சக்திகளிடமிருந்தும், “அதுக்காக இப்படியா” என்று நாசூக்குப் பார்ப்பவர்களிடமிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பினால் வியப்பில்லை. ஒளிப்பதிவுக்காகச் சென்ற இடங்களிலேயே கூட எதிர்ப்பைச் சந்தித்திருப்பார் இயக்குநர் திவ்யா பாரதி. அவரது முனைப்பு, உழைப்பு இரண்டின் பிரதிபலிப்புகள் படம் நெடுகிலும்.ஒளிப்பதிவாளர் பழனிக்குமார், இணை ஒளிப்பதிவாளர் கோபால கிருஷ்ணன் இருவரின் பணி, மூடியிருக்கும் கண்களைத் திறக்கவைக்கிறது. படத்தின் செய்தியை நோக்கி நகர்த்துகிறது பகலவன், திவ்யா இருவரின் தொகுப்பு.“ஆள மட்டும் நீங்களா – அள்ளிபோட மட்டும் நாங்களா,”-என்று கேட்கும் தனிக்கொடி பாடல் இனி முற்போக்கு மேடைகளிலெல்லாம் முழங்கும். பாடலைச் செவிவழியாக மனதிற்குள் கொண்டுபோகிறது இரா. ப்ரபாகர் இசை.இடதுசாரி இயக்கங்கள் சாதிய எதிர்ப்பையும், தலித் அமைப்புகள் வர்க்கப்போராட்டத்தையும் சேர்த்து எடுத்துக்கொள்வதில்தான் மாற்றம் உறுதியாகும் என்பது ‘இடப்பக்கம்’ குழுவினரின் விருப்பம் மட்டுமல்ல, வரலாற்றுத் தேவை. தீண்டாமை ஒழிப்பில், சாதிய எதிர்ப்பில், பெண்ணடிமை ஒழிப்பில், அடிப்படை மனித உரிமைகளில், சமத்துவ சமுதாயத்தைக் கட்டுவதில் அக்கறையும் ஈடுபாடும் உள்ளவர்களின் கையில் கிடைத்துள்ள ஆக்கம்/ஆயுதம் இது.
-அ.குமரேசன்

கருத்துகள் இல்லை: