திங்கள், 1 மே, 2017

சீமைக்கருவேல மரங்கள் அப்படி ஒன்றும் தீமையானவை அல்ல ? ஆச்சர்யமூட்டும் ஓர் ஆய்வு

உவர் நிலத்தின் ஆலகால விஷத்தை உண்டது சீமைக்கருவேல மரங்கள்!

கா.சு.வேலாயுதன் : சூழலை பாதிக்கிறது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட வில்லை!’ என்ற மனுவை முன்வைத்து தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை வெட்ட மே 11 வரை இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐஐடி இயக்குநர் பதிலளிக்கவும், வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கும் மாற்றி உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். இதன் பின்னணியில் சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா? என்ற சர்ச்சை கச்சை கட்டி நிற்கின்றன. காரைக்கால், பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண்கல்லூரி முன்னாள் முதல்வரும், உழவியல் துறை பேராசிரியருமான முனைவர் வி. செல்லமுத்து இந்த சீமைக்கருவேல மரங்கள் குறித்து 1992- 1995ல் ஆய்வு செய்து பிஎச்டி பட்டம் பெற்றவர். தி இந்து சார்பாக அவரிடம் பேசிய போது பகிர்ந்து கொண்டவை: நான் விருதுநகர் மாவட்டத்தின் கிழக்கு கடைகோடி நரிக்குடி கிராமத்தை சேர்ந்தவன். பழைய ராமநாதபுரம் மாவட்டம் கடும்வறட்சிக்கு இலக்கான போது அங்கிருந்து தஞ்சாவூருக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக பஞ்சம் பிழைக்க சென்றார்கள். ஒரு கட்டத்தில் அப்படி கிராமங்களை விட்டு சென்ற 5 மாவட்ட மக்களின் வாழ்வையே மாற்றியது சீமைக்கருவேல மரங்கள்.
அவர்கள் இருந்த பூமியில் இந்த சீமைக் கருவேலன்கள் நன்றாக வளர்ந்தது. அதை வெட்டி விறகாக்கி, கரியாக்கி உள்ளூரில் மட்டுமல்ல; வெளியூர், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பத் தொடங்கினார்கள். சுண்ணாம்பு சூளை, கொல்லம்பட்டறை என பயன்பட்டிருக்கிறது. அதனால் அவர்கள் வாழ்வு மேம்பட்டது. அங்கே இதை விற்பனை செய்தே கோடீஸ்வரர் ஆனவர்களும் உண்டு. எனவே என் ஆராய்ச்சிக்கு இதையே எடுத்துக் கொண்டேன். அதை ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டபோது பலரும் சிரித்தார்கள். கேலி செய்தார்கள். எனக்கு தெரிந்து இதில் என்னைப்போல் ஆய்வு செய்து 4 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்கள்.

சீமைக்கருவேலம் 1870களில் மெக்ஸிகோ நாட்டிலிருந்து ஜோத்பூர் மகாராஜா ராஜஸ்தான் முழுக்க கொண்டு வந்து நட செய்திருக்கிறார். ராஜஸ்தான் பாலைவனங்களில் வீசும் காற்றின் வேகத்தால் மணல் மலைக் குன்றுகள். அது குடியிருப்புகளின் வீட்டையே மூடிவிடும். கதவுகளை திறக்க முடியாது. மணல்குன்றுகளை மண்வெட்டி, கடப்பாரை போன்ற ஆயுதங்களை வைத்து அகற்றுவது மனித சக்திக்கு பெரும்பாடாக இருந்தது. அந்த நிலத்திலும் விளையக்கூடிய தாவரமாக இது இருந்ததோடு, மணல் குன்றுகளை உருவாவதை தடுக்கும் அபூர்வ மரமாகவும் விளங்கியது. எனவே ROYAL TREE என்றே இதை வர்ணித்தார் அந்த மகராஜா. அது மட்டுமல்ல, இந்த மரங்களை வெட்டுபவர்கள் தலை துண்டிக்கப்படும் என்றும் சட்டம் போட்டு தடுத்திருக்கிறார். அதனால்தான் இன்றைக்கு ராஜஸ்தான் முழுப் பாலைவனமாகாமல் தடுக்கப்பட்டிருக்கிறது.

காமராஜர் ஆட்சி காலத்தில் இந்த சீமைக்கருவேல மரங்கள் தமிழகத்திற்குள் கொண்டு வரப்பட்டன. ஒரு மரத்திலிருந்து ஆயிரக்கணக்கான விதைகள் விழுவதால் ஆயிரக்கணக்கான நாற்றுக்களும் முளைத்தன. இந்த மரத்தின் விதைகளை சாப்பிட்ட கால்நடைகள் போடும் சாணம் மூலமாகவும் விதைகள் விழுந்து முளைத்து பெருக ஆரம்பித்தது. அப்படி மட்டும் இது வந்து பெருகாமல் இருந்திருந்தால் நம் மேற்குத்தொடர்ச்சி மலைக் காடுகளே எரிபொருளுக்காக அழிக்கப்பட்டிருக்கும். அந்த காலத்தில் களர் உவர் நிலங்களை சலவைத்தொழிலாளர்கள் தேடிச்சென்று துணி துவைக்கும் சோடா உப்பு எடுப்பார்கள் என்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த நிலையை அடியோடு மாற்றியது இம்மரங்கள். கடலோர பிரதேசங்களில் இது வளர்ந்து கடல் உப்புமண் உள்நாட்டிற்குள் ஊடுருவாமல் தடுத்தது. உப்பள நிலத்தில் நிறைந்திருக்கும் சோடியம் குளோரைடு, சோடியம் சல்பேட் உப்புக்களை உறிஞ்சி சாப்பிட்டு தானாகவே வளர்ந்தது (இந்த நிலத்தில் மற்ற மரங்கள் வைத்தால் கருகிவிடும்) அமிர்தம் கடையும்போது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை உண்டு சிவன் அருள் புரிந்ததுபோல் சோடியம் என்ற நஞ்சை உண்டு நிலத்தை சொஸ்தப்படுத்திய இந்த தாவரத்தை WONDER CHILD OF NATURE என்று வர்ணித்திருக்கிறார் ஒரு விஞ்ஞானி.

ஆடு, மாடுகள் இந்த இம்மரங்களின் காய்களையே சாப்பிட்டு வளர்ந்தன. வீட்டிற்கும், தோட்டத்திற்கும், காடுகளுக்கும், சிறுதொழிற்சாலைகளுக்கும் தடுப்பு வேலியாக இந்த மரங்களே பயன்பட்டது. விறகாக, கரியாக, கரித்துகளாக மாற்றம் செய்யப்பட்ட இம்மரம் சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலைகளுக்கும், வெடிமருந்து தொழிற்சாலைகளுக்கும், நீராவியால் இயங்கும் ஆலைகளுக்கும், ஊதுபத்தி கம்பெனிகளுக்கும் சென்றது. தவிர கார்பன் எலக்ட்ரோடுகளாக ஆய்வகங்களிலும், இண்டஸ்ட்ரிகளிலும் பயன்பட்டது. இப்பவும் பரமக்குடி, மானா மதுரை போன்ற பகுதிகளில் இப்பவும் குஜராத் மாநில வியாபாரிகள் இம்மரத்தின் கரிகளை லாரி, லாரியாக வாங்கி சென்று கொண்டிருக்கிறார்கள். அவை மும்பை, கல்கத்தா பகுதிகளிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.

அது எங்கே போகிறது. எதற்கு கொண்டு செல்கிறார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ளவில்லை. 100 சதுர கிலோமீட்டர் இந்த சீமைக்கருவேல மரங்கள் இருந்தால் நெய்வேலி லிக்னைட் தொழிற்சாலை ஒன்றை போட முடியும். அதை கரியா எரிச்சு புகையா விட்டால்தான் சூழல் கேடு, அதையே ஸ்டீம் எனர்ஜியாகவும், எலக்ட்ரிசிட்டியாகவும், பயோ கேஸ், பயோ ப்யூல் என மாற்றிப் பயன்படுத்தினால் ஒரு கேடும் இல்லை என்கிறார் ஒரு விஞ்ஞானி. ஒரு காலத்தில் காகிதக்கம்பெனியில் இதன் பயன்பாடு அதிகம் இருந்தது. இந்த மரங்கள் வளைவாகவும், முள்ளோடும் இருப்பது இதை பயன்படுத்துவதற்கு சிரமங்களை ஏற்படுத்தியது. அதை சமவாக்கில் முள் இல்லாமல் புதிய வடிவில் விளைவிக்க விதை ஆய்வு முயற்சிகள் நடந்துள்ளது. அது தொடரவில்லை.
இதன் கீழே எந்த தாவரமும் வளராதுதான். கண்மாய், ஏரி என நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இவை நின்றதால் அதன் நீர்பரப்பு குறைந்தது. அல்லினோபதி என்ற வேதியியற் பொருள் மிகையாக இருப்பதால் எளிதாக நிலத்தடி நீரை உறிஞ்சுகிறது என்கிறார்கள். ஆனால் இதனால்தான் நிலத்தடி நீர் குறைந்தது என்று நிரூபிக்கப்படவில்லை. மாறாக இம்மரங்கள் எங்கெல்லாம் அதிகமாக உள்ளதோ அங்கு தண்ணீர் நிறைய இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. கலிபோர்னியாவில் 100 அடி, 200 அடி நிலத்தடி நீர் உள்ள பகுதிகளை இந்த தாவரம் வளர்ந்ததை வைத்தே அறிந்துள்ளார்கள். உலகில் 3ல் ஒரு பங்கு சீமைக்கருவேல மரங்கள் 40 இனங்களாக இருக்கிறது. இந்தியாவில் 2 இனங்கள் மட்டுமே உள்ளது.

அதில் ஓர் இனமே தமிழ்நாட்டில் உள்ள ‘ப்ரோசோபிச் சூலிஃப்லோரா! (PROSOPIS JULIFLORIA)’. இதில் முட்கள் உள்ளது. இலைகளை ஆடுமாடுகள் சாப்பிடாது. காய்களை மட்டுமே சாப்பிடுகிறது. மனிதர்களுக்கு உணவாக பயன்படுவதில்லை. இந்த இனம் ஆர்டிக், அண்டார்டிகா தவிர அனைத்து நாடுகளிலும் உள்ளது. ஆனால் ராஜஸ்தானில் உள்ள சீமைக்கருவேலம் ப்ரோசோபிச் சினரேரியாவிற்கு (PROSOPIS CINERARIA) முட்கள் கிடையாது. அதில் உள்ள இலைதலைகளை ஆடு, மாடுகள் சாப்பிடுகிறது. அதில் உள்ள விதைகளை மக்கள் பச்சைப்பயிறு போல உணவுக்கு பயன்படுத்துகிறார்கள். அந்த சீமைக்கருவேலம் மத்திய பிரதேசத்திற்கு கீழே மட்டுமே உள்ளது.
எந்த உயிரினமும் சிறிய அளவில், சிறுபான்மையாக இருக்கும்போது, அதன் தேவை அதிகமாக இருக்கும். அப்போது அதை அழைத்து விருந்து வைப்பது மனிதனின் வழக்கம். அதுவே மிகுதியானால், தேவை குறைந்தால் சமுதாயப்பேரழிவுக்கே இதுதான் காரணம் என விரட்டுவோம். உதாரணத்திற்கு கங்காரு ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கு. அதுவே அதிகமாகி விவசாய நிலங்களுக்குள் நுழைந்து விளைச்சலை அழித்தால் பேரழிவு சுட்டுக் கொல்ல சொல்லுகிறார்கள். அதே நிலைதான் தற்போது சீமைக்கருவேலனுக்கும் ஏற்பட்டுள்ளது. விளைநிலத்தை வீடுகளாக்கக்கூடாது; வீடுகள் உள்ள நிலத்தை விளைநிலமாக்க முயற்சிக்கக்கூடாது என்பதுதான் இயற்கை நியதி. அதுபோல இது தேவையற்ற இடங்களில் விளைய விடாமல் தடுப்பதும், தேவையான இடங்களில் வளர்வதும் அவசியமானது. இது இல்லாமலே போய்விட்டால் வரும் காலங்களில் மற்ற காடுகள் அழிக்கப்படுவதை தடுக்க முடியாது.tamilthehindu

கருத்துகள் இல்லை: